பள்ளி ஆசிரியரைக் கடத்திச் சென்று பணம் பறித்த விவகாரம் : பெண் காவல் ஆய்வாளர் மீது வழக்கு பதிவு - ஆசிரியர் மலர்

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

பள்ளி ஆசிரியரைக் கடத்திச் சென்று பணம் பறித்த விவகாரம் : பெண் காவல் ஆய்வாளர் மீது வழக்கு பதிவு

 


தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே பள்ளி ஆசிரியரைக் கடத்திச் சென்று நான்கரை லட்ச ரூபாய் பணம் பறித்ததாகக் கூறப்படும் சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த பெண் காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர் என 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.. 


தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் அடுத்த குப்பாபுரத்தைச் சேர்ந்தவர் அரசுப் பள்ளி ஆசிரியர் சாலமோன். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் குப்பாபுரம் சென்ற சென்னை வளசரவாக்கம் போலீசார், உறவினர் மூலமாக சாலமோனை ஊருக்கு வெளியே தனியாக வரவழைத்துள்ளனர்.


அங்கு வேன் ஒன்றில் சென்னை வளசரவாக்கம் காவல் ஆய்வாளர் அமுதா, உதவி ஆய்வாளர் ரமேஷ் கண்ணா, சென்னையில் நிதி நிறுவனம் நடத்தி வரும் சிவக்குமார் நாயர் உட்பட 6 பேர் இருந்துள்ளனர். சாலமோனை வேனுக்குள் ஏற்றி சென்னை நோக்கி அழைத்துச் சென்றுள்ளனர். “உன் தம்பி தேவராஜ் என்னிடம் வாங்கிய பணத்தை திருப்பிக் கொடுக்கவில்லை என்றும் உன்னைத் தூக்கினால்தான் பணம் வரும்” என்றும் சாலமோனிடம் சிவக்குமார் நாயர் கூறியதாகச் சொல்லப்படுகிறது.
மறுநாள் காலை சாலமோனின் குடும்பத்தாரை மிரட்டி நான்கரை லட்ச ரூபாய் பணத்தை வாங்கியபின் அவரை விடுவித்துள்ளனர். இது தொடர்பாக உள்ளூர் காவல் நிலையம் முதல், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வரை புகாரளித்தும் காவல்துறை நடவடிக்கை எடுக்காததால் சாலமோன் தரப்பு நீதிமன்றத்தை நாடியது.


திருச்செந்தூர் மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றம் சம்மந்தப்பட்ட காவல்துறையினர் அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டது. அதன்படி, வளசரவாக்கம் குற்றப்பிரிவு ஆய்வாளர் அமுதா, குற்றப்பிரிவு உதவி ஆய்வாளர் ரமேஷ் கண்ணா, சிவக்குமார் நாயர் உட்பட 6 பேர் மீதும் ஆள் கடத்தல், ஆபாச வார்த்தைளால் திட்டுதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் திருச்செந்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

No comments:

Post a Comment