அண்ணா பல்கலைக்கழகத்தின் பெயரை மாற்றினால் உலகளவில் அதற்குரிய பெயரும் தரமும் பறிபோய்விடும் - ஆளுநருக்கு பேராசிரியர்கள் கடிதம் - ஆசிரியர் மலர்

Latest

23/09/2020

அண்ணா பல்கலைக்கழகத்தின் பெயரை மாற்றினால் உலகளவில் அதற்குரிய பெயரும் தரமும் பறிபோய்விடும் - ஆளுநருக்கு பேராசிரியர்கள் கடிதம்

 


சென்னை,

தமிழக சட்டப்பேரவையில் கடந்த 16-ம் தேதி, சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தை நிர்வாக வசதிக்காக இரண்டாகப் பிரிக்கும் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது. அதில் அண்ணா பல்கலைக்கழகத்தின் பெயர் அண்ணா தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி பல்கலைக்கழகம் என்றும், புதிதாக உருவாக்கப்படும் பல்கலைக்கழகத்துக்கு அண்ணா பல்கலைக்கழகம் என்று பெயர் சூட்டப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. இதற்கு அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழகத்தின் பெயரை மாற்ற எதிர்ப்பு தெரிவித்து ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு அண்ணா பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர்கள் கடிதம் எழுதியுள்ளனர். அவர்கள் எழுதியுள்ள கடிதத்தில், “எம்ஜிஆரால் துவங்கப்பட்ட அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகம் பழம்பெருமை வாய்ந்தது. அதன் பெயரை மாற்றினால் உலகளவில் அதற்குரிய பெயரும் தரமும் போய்விடும்” என்று தெரிவித்துள்ளனர்.

மேலும், “பல்கலைக்கழகத்தை இரணடாகப் பிரித்தால் அதன் கீழ் ஆராய்ச்சி செய்யும் மாணவர்களுக்கு உரிய நிதி கிடைக்காது. மாணவர்கள் எந்த பல்கலைக்கழகத்தின் கீழ் தேர்ச்சி பெற்றார்கள் என்ற குழப்பம் நீடிக்கும். முன்னணி நிறுவனங்கள், வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுடன் செய்துள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் கேள்வி குறியாகும்.

பல்கலைக்கழகத்தை பிரிக்கும் முடிவை அரசு கைவிட்டு அதன் புகழையும், கவுரவத்தையும் தக்கவைக்க வேண்டும். எனவே அண்ணா பல்கலைக்கழகத்தின் பெயரை மாற்றக் கூடாது” என்று அரசுக்கு உத்தரவிடக் கோரி கடிதத்தில் அண்ணா பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459