அரபிக் கடலில் புயல் சின்னம்: தமிழக கடல் பகுதியில் ராட்சத அலைகளுக்கு வாய்ப்பு - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

அரபிக் கடலில் புயல் சின்னம்: தமிழக கடல் பகுதியில் ராட்சத அலைகளுக்கு வாய்ப்பு


நாகர்கோவில்: குளச்சல் முதல் தனுஷ்கோடி வரையிலான தென் தமிழக கடல் பகுதியில் ராட்சத அலைகளுக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய கடல் தகவல் சேவை மையம் அறிவித்துள்ளது. தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனையொட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளிலும் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை புயலாக மாற வாய்ப்பு உள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாளை இது மகாராஷ்டிரா, குஜராத் கடல் பகுதிக்கு சென்றடையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மேற்கு மத்திய, தெற்கு மத்திய அரபிக்கடல் பகுதிகள், கிழக்கு மத்திய அரபிக்கடல், லட்சத்தீவு, கேரளா கடல் பகுதிகளிலும் மணிக்கு 45 முதல் 55 கி.மீ வேகத்திலும், சில இடங்களில் 65 கி.மீ வேகத்திலும் பலத்த காற்று வீசும் என்று இந்திய கடல் தகவல் சேவை மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் கிழக்கு மத்திய அரபிக்கடல் பகுதியில் மீனவர்கள் ஆழ்கடலுக்கு வரும் 4ம் தேதி வரை மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த வேளையில் தென் தமிழக பகுதிகளில் 1.5 மீட்டர் முதல் 3.5 மீட்டர் உயரத்திற்கு ராட்சத அலைகளுக்கு வாய்ப்பு உள்ளது.
வரும் 2ம் தேதி வரை தமிழகத்தில் குமரி மாவட்டம் குளச்சல் முதல் தனுஷ்கோடி வரையிலான தென் தமிழக கடல் பகுதியில் இந்த நிலை காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குமரி முழுவதும் சாரல் மழை:அரபிக்கடலில் புயல் சின்னம் காரணமாக குமரி மாவட்டம் முழுவதும் நேற்று காலை வரை பரவலாக சாரல் மழை பெய்தது. அதிகபட்சமாக குழித்துறையில் 37.4 மி.மீ மழை பெய்திருந்தது. நேற்று காலை நிலவரப்படி பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் 35.35 அடியாக இருந்தது. அணைக்கு 338 கன அடி தண்ணீர் வரத்து காணப்பட்டது. பெருஞ்சாணியில் 40.40 அடி நீர்மட்டம் காணப்பட்டது.  139 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. சிற்றார்-1ல் 11.48, சிற்றார்-2ல் 11.58, பொய்கையில் 14.80, மாம்பழத்துறையாறு அணையில் 45.85 அடியும், முக்கடலில் 0.1 அடியும் நீர்மட்டம் காணப்பட்டது.
ஆர்ப்பரித்து கொட்டும் திற்பரப்பு அருவி
குலசேகரம்: குமரி  மாவட்டத்தில் மலையோர பகுதியில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை வரை அதிகளவு மழை பெய்தது. இதனால் திற்பரப்பில் அருவியாக விழும் கோதையாற்றிலும்  தண்ணீர் வரத்து அதிகரித்தது. இதனால் அருவியில் நீண்ட நாட்களுக்கு பிறகு  தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. வெயில் சிறிதுமின்றி மேக மூட்டத்துடன்  ரம்மியமான சூழல் நிலவியது. கொரோனா ஊரடங்கால் சுற்றுலா பயணிகள் இதனை ரசிக்க  முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் திற்பரப்பு அருவி வெறிச்சோடி  காணப்படுகிறது.

No comments:

Post a comment