இந்தாண்டின் முதல் சூரிய கிரகணம் நாளை பற்றிய ஒரு பார்வை - ஆசிரியர் மலர்

Latest

20/06/2020

இந்தாண்டின் முதல் சூரிய கிரகணம் நாளை பற்றிய ஒரு பார்வை



இந்தாண்டின் முதல் சூரிய கிரகணம் ஜூன் 21(நாளை – ஞாயிற்றுக்கிழமை) நிகழ இருக்கிறது. இந்த நூற்றாண்டின் ‘ஆழமான’ வருடாந்திர சூரிய கிரகணத்தை நாம் இந்தியாவில் காண இருக்கிறோம்.
கடந்த ஆண்டு நாம் தமிழகத்தில் கண்டதைப் போல இந்த ஆண்டு வட இந்தியாவில் சூரியனை சுமார் 30 விநாடிகளுக்கு ‘ரிங் ஆஃப் ஃபயர்’ போல் நெருப்பு வளையமாகக் காண இருக்கிறார்கள்.
சூரியன், சந்திரன் மற்றும் பூமி ஒரே நேர்க்கோட்டில் வரும்போது சூரியகிரகணம் நிகழ்கிறது. இந்த நிகழ்வின்போது சந்திரன், சூரியனின் கதிர்கள் பூமியில் விழாதவாறு மறைக்கும். இதைத் தான் பாம்பு (ராகு – கேது கிரகங்கள்) சூரியனை விழுங்குவதாக வெகு காலமாக சொல்லி வந்தனர். அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி அவற்றிற்கு விடை கண்டறிந்தது. நமது நாட்டில் சூரிய கிரகணம் இந்திய நேரப்படி காலை 9:15 மணிக்கு தொடங்கி மாலை 3.04 மணிக்கு முடிவடையும். இந்த முழுச் சூரிய கிரகணத்தின்போது, சந்திரன் சூரியனை 98.8 சதவீதம் வரை மறைக்கும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கிரகணம் நாளை காலை சுமார் 10.15 மணிக்குத் தொடங்குகிறது. நண்பகல் சுமார் 11.45 -12.00 மணிஅளவில் கிரகணம் உச்சத்தை அடைகிறது. பிற்பகல் சுமார் 1.30 – 1.45 மணியளவில் கிரகணம் முடிவடைகிறது. அதன் பின்னர் கிரகணம் விலகி சூரியன் முன்பு போல் முழுமையாகக் காட்சி தரும். நிலவானது பூமியைச் சுற்றி வருவதால், கிரகணம் தெரியும் நேரம் இடத்திற்கு இடம் சற்று மாறுபடும்.
கடந்த ஆண்டு, டிசம்பர் 26-இல் ஏற்பட்ட கிரகணம் தமிழகம் வழியாகச் சென்றது. அப்போது தமிழகத்தின் சில ஊர்களில் மோதிர வடிவிலான வளைய சூாிய கிரகணத்தினை நாம் முழுமையாகக் கண்டு ரசித்தோம். இந்த முறை வளைய சூாிய கிரகணம் நிகழ்வு ராஜஸ்தான், ஹரியாணா மற்றும் உத்தரகண்ட் வழியாகச் செல்வதால் அங்குதான் அதனை மோதிர அல்லது வளைய வடிவில் காண முடியும்.
தமிழகம் உள்ளிட்ட நாட்டின் பிற பகுதிகளில் ஒரு பகுதி சூரிய கிரகணத்தையே அனைவரும் காண முடியும். பகுதி சூாிய கிரகணத்தை தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் காலை 10.15 முதல் அற்புதமான காட்சியாகக் காணலாம். அது வழக்கமான ’நெக்லஸ் வடிவில்” தெரியும்.
தமிழகத்தில் வெவ்வேறு பகுதிகளில் கிரகணம் தெரியும் நேரம் அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளது. 
நமது ஊரில்..
நமது ஊர்களில் காண வேண்டுமெனில் கீழே கொடுக்கப்பட்டுள்ள கூகுள் பிளே ஸ்டோரில் நுழைந்து அதில் உள்ள செயலியைத் தரவிறக்கம் செய்து பார்க்கலாம்.
அச்செயலியில் இந்திய வரைபடத்தில் உங்கள் ஊரைத் தேர்ந்தெடுத்தால், எந்தெந்த இடங்களில் எந்த அளவிற்கு பகுதி சூரிய கிரகணம் தென்படும் என்கின்ற விவரங்கள் கிடைக்கும். பாதுகாப்பாக கிரகணம் பார்க்கும் வழிமுறைகளும் அதில் கூறப்பட்டிருக்கும்.

அதேபோல கீழ்க்கண்ட இணையதளத்தில் உங்கள் ஊரின் பெயரைத் தேர்வு செய்து பார்த்தால் உங்கள் ஊரில் கிரகணம் எப்போது துவங்கி எப்போது முடியும் என்பது போன்ற விவரங்களையும், கிரகணம் துவங்குவது முதல் முடியும் வரையிலான விடியோவையும் காணலாம்.
கிரகணம் என்பது..
இது ஒரு வானவியல் நிகழ்வு. வானில் பல பொருள்கள் வலம் வந்து கொண்டிருக்கின்றன. அவை நகர்ந்து செல்லும்போது சில சமயம் ஒன்றின் பாதையில் மற்றொன்று குறுக்கிடும். அப்போது அந்த வான்பொருள், நம் பார்வையிலிருந்து மறைக்கப்படும் இதனையே கிரகணம் என்கிறோம்.
கிரகணம் என்பது ஒரு கிரேக்க சொல். கிரகணம் (Eclipse) என்பதற்கு “மறைப்பு” என்பதே பொருளாகும். வான்பொருள் கருப்பாவது “the darkening of a heavenly body” என்றும் கொள்ளலாம். சமஸ்கிருதத்திலும் கிரகணம் என்பதற்கு மறைப்பு என்றே பொருளாகும்.
இந்நிகழ்வு, சூரிய குடும்பத்துக்குள் நிகழும்போது, மறைக்கப்படும் பொருளின் பெயரை வைத்து, சூரியனை மறைத்தால் சூரிய கிரகணம் என்றும், சந்திரனை மறைத்தால் சந்திரகிரகணம் என்றும் அழைக்கிறோம்.
முழு சூரியகிரகணம்
ஒவ்வோர் ஆண்டும் 2 முதல் 5 சூரிய கிரகணங்கள் வரை நடக்கலாம். முழு சூரிய கிரகணம் வடக்கு மற்றும் தெற்கு துருவங்களில் நடைபெறாது. ஒரே மாதிரியான சூரிய கிரகணங்கள் ஒவ்வொரு 18 ஆண்டுகள்,   11 மாதங்களுக்கு (6,585.32 நாள்கள்) ஒருமுறை வரும். இதனை சாரோ சுழற்சி என்று சொல்வார்கள். சூரிய கிரகணத்தின்போது சந்திரனின் நிழல் மணிக்கு சுமார் 2250 கி.மீ. வேகத்தில் சூரியனைக் கடக்கிறது. முழு சூரிய கிரகணம் அதிகபட்சமாக 7 நிமிடம் 30 நொடிகள் வரை நீடிக்கும். வளைய சூரியகிரகணம் 5 முதல்12 நிமிடங்கள் வரை நீடிக்கும்.
கிரகணம் எவ்வாறு, எப்போது தோன்றுகிறது?
சூரிய மற்றும் சந்திர கிரகணம் ஏற்பட, சூரியன், சந்திரன் மற்றும் பூமி மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் 90 டிகிரியில் இருக்க வேண்டும்
. இந்த நிலை எல்லா காலத்திலும் ஏற்படாது. காரணம் இவை மூன்றும் தன்நிலையில் சரிவாக/ சாய்ந்து உள்ளன. சூரியன் 7 .5 டிகிரி சாய்வாகச் சுற்றுகிறது. சந்திரன் 5 டிகிரி சாய்வாகச் சுற்றுகிறது. பூமி 23.5 டிகிரி சாய்வாகச் சுற்றுகிறது. இவை மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் 90 டிகிரியில் நின்று ஒன்றை ஒன்று நேரடியாக மறைக்கும்போது கிரகணம் ஏற்படுகிறது.

சூரிய மண்டலத்தின் அனைத்து கோள்களும் நீள் வட்டப் பாதையில் சூரியனைச் சுற்றி வருகின்றன என்ற உண்மையைக் கண்டறிந்து சொன்னவர் ஜோகன்னஸ் கெப்ளர் என்னும் அறிஞர். இவரைப் பரிதி மண்டலத்தின் அண்டகோள் இயக்க விதிகளைக் கணித்தவர் என்று அழைக்கின்றோம். 
சிறிய நிலவு பெரிய சூரியனை மறைப்பது எப்படி?
சூரியன் சந்திரனைவிட பெரியது. ஆனாலும் சந்திரனின் நிழல் சூரியனைச் சில சமயத்தில் முழுமையாக மறைத்துவிடுகிறது. அதாவது, மறைக்கும் பொருள் நமக்கு அருகிலும், மறைக்கப்படும் பொருள் தூரத்திலும் இருந்தால் அவற்றின் அளவைக் கொண்டு அவை மறைக்கப்படும். சூரியன் சந்திரனை விட 400 மடங்கு பெரியது. மேலும், சந்திரனானது சூரியனைவிட 400 மடங்கு பூமிக்கு அருகில் உள்ளது. எனவே பூமியிலிருந்து பார்க்கும்போது சந்திரன், சூரியன் இரண்டும் ஒரே அளவில் தெரிகிறது. எனவே சந்திரனின் நிழல் சூரியனை மறைத்து சூரிய கிரகணம் உண்டாகிறது. 
மூன்று வகை சூரிய கிரகணங்கள்
சந்திரனின் நிழல் முழுமையாகச் சூரியனை மறைத்தால் அது முழு சூரிய கிரகணம் எனப்படும் முழுச் சூரிய கிரகணம் 1-2 ஆண்டு இடைவெளியில் 18 மாதங்களுக்கு ஒருமுறை நிகழும். முழு சூரிய கிரகண நேரம் அதிகபட்சமாக 7.5 நிமிடங்கள் மட்டுமே நிகழும். ஒரே இடத்தில் 360 – 410 ஆண்டுகளுக்கு ஒருமுறையே இது நிகழும். சூரியஒளி முழுமையாக மறைக்கப்படுவதால், இருட்டியது போன்ற நிகழ்வு ஏற்படும்.
சூரிய கிரகணத்தின்போது சூரியன் வளையமாகத் தெரிந்தால், அதுவளைய/கங்கண கிரகணம் (Annular Eclipse) என்று அழைக்கப்படும். அதிகபட்சமாக அது  5-12 நிமிடங்கள் வரை நிகழும். 
சந்திரன் பூமிக்கு வெகுதூரத்தில் இருக்கும்போது ஏற்படுவது பகுதி சூரிய கிரகணம் (Partial Solar Eclipse) என்று அழைக்கப்படும். பகுதி சூரிய கிரகணத்தில் எப்போதும் சூரியன் முழுமையாக மறைபடாது. சூரிய ஒளி குறையலாமே தவிர வெளிச்சம் இருந்து கொண்டே இருக்கும்.
ஹைபிரிட் கிரகணம் (Hybrid Eclipse): இதில் இரண்டு வகை கிரகணக் கலப்பு ஏற்படுவதால் இதனை ஹைபிரிட் கிரகணம் என்கிறோம். இதில் முழு சூரிய கிரகணம், வளையச் சூரிய கிரகணமாக மாறும். அதுபோல முழு சூரிய கிரகணம் பகுதியாகவும் மாற வாய்ப்பு உண்டு. இது சந்திரனின் நகர்வைப் பொறுத்தே ஏற்படுகிறது.
இந்த ஆண்டின் வளைய கிரகணம்
இந்த ஆண்டு இந்தியாவில் வளைய சூரிய கிரகணம் ஜூன் 21 அன்று காலை 9.15 மணிக்கு தொடங்கி பிற்பகல் 12:10 மணிக்கு உச்சத்தை எட்டும் என்றும் மாலை 3:04 மணிக்கு கிரகணம் முடிவடையும் என்றும் அறிஞர்கள் தெரிவிக்கின்றனர். சூரிய கிரகணத்தின் நிகழ்வு சுமார் ஆறு மணி நேரம் நீடிக்கும்
. சந்திரனின் நிழல் தொடர்ந்து சூரியனை மறைத்து நகர்ந்து கொண்டே இருப்பதால் ஒரு நிலையில் சூரியன் வானில் நெருப்பு வளையமாக 1 வினாடி முதல் 2 நிமிடம் வரை தெரியும்.

போகப் போக இந்த நேரம் அதிகரித்து வளையக் கிரகணம் இருக்கும் நேரம் 12 நிமிடம் வரை கூட தொடரும். சில இடங்களில் சூரிய கிரகணம் சுமார் 3 மணிநேரம் வரை கூட தெரியும்.
வளைய கிரகண நிகழ்வுகள்
வளையக் கிரகண நிகழ்வை 5 நிலைகளாகப் பிரிக்கலாம்.
முதல்நிலை: சந்திரனின் நிழல் சூரிய பரப்பைதொடும் நேரம். இது பகுதி சூரிய கிரகண தொடக்கம் எனப்படும். சந்திரனின் நிழல் சூரிய பரப்பில் நகரத் தொடங்கும்.
இரண்டாம் நிலை: முழுகிரகணம் / வளைய கிரகணம் தொடங்கும் நேரம். சந்திரனின் நிழல் முழுமையாகச் சூரியனை மறைக்கும் முன் சில சமயங்களில் வைர மோதிர நிகழ்வு சில நொடிகள் ஏற்படலாம்.
மூன்றாம் நிலை: சந்திரன் நிழல் சூரிய பரப்பின் மையத்தில் உள்ள நிலை. அதாவது உச்சபட்ச கிரகணம் எனப்படும்.
நான்காம் நிலை: வளைய கிரகணம் முடிந்து சந்திரனின் நிழல் சூரியனைவிட்டு விலகத்துவங்கும் நேரம். சில சமயம் இதில் வைர மோதிர நிகழ்வும் வரலாம்.
ஐந்தாம் நிலை: கிரகணம் முழுதாக முடிந்து சூரியனை விட்டு சந்திர நிழல் வெளிவந்துவிட்ட நிலை.
சூரிய கிரகணம் சில வியத்தகு உண்மைகள்
சூரிய கிரகணத்தின்போது,கிரகண நிழல் நில நடுக்கோடு பகுதியில் மணிக்கு 1770 கி.மீ. வேகத்திலும், துருவப் பகுதியில் 1872.79  கி.மீ். வேகத்திலும் நகரும். ஒரு ஆச்சரியமான விஷயம் கிரகணம் எப்போதும் தனியாக வராது. சூரிய கிரகணத்துக்கு  15 நாட்களுக்கு முன் அல்லது பின் சந்திர கிரகணம் வரும். சந்திர கிரகணத்தின் அதிகபட்ச நேரம் 3 மணி 40 நிமிடங்கள் நடைபெறும் சந்திர கிரகணம் வருடத்தில் 3 முறை வரலாம். ஆனால் சூரிய கிரகணம் குறைந்தது 2 -5 முறை வரும்.   
இந்த ஆண்டு வளைய சூரிய கிரகணம் வலம் வர உள்ள இடங்கள்
மத்திய ஆப்பிரிக்காவின் காங்கோவில் தொடங்கி, தெற்கு சூடான், எத்தியோப்பியா, ஏமன், ஓமன், சௌதி அரேபியா வழியாக பாகிஸ்தானை கடந்து, வட இந்தியாவின் ராஜஸ்தான் வழியாக உள்ளே நுழைகிறது. பின்னர் திபெத், சீனா, தைவானுக்குள் நுழைந்து பசிபிக் பெருங்கடலில் முடிகிறது. வளைய கிரகணம் இந்தியாவில் ராஜஸ்தானின் கார்சனாவில் 10.12 மணிக்கு துவங்குகிறது. வளையத் தோற்றம் காலை11.49 மணிக்கு தொடங்கி 11.50 மணிக்கு நிறைவுறும். தீ வளையமானது (Ring of Fire) 1 நிமிடம் மட்டுமே இருக்கும்.  பின்னர் ராஜஸ்தானின் அனுராக், சுரத்கார் போன்ற இடங்களிலும், ஹரியானாவின் சிர்சா, ராதியா, குருசேத்ரம், டேராடூன், உத்தரக்காண்டின் சாம்மொலி மற்றும் ஜோஷி மாதா என்ற இடத்திலும் வளைய கிரகணம் தெரியும்.
எதிர்காலத்தில் முழுச் சூரியகிரகணம்..?
முழுச் சூரிய கிரகணம் என்பதை எப்போதும் பூமியிலிருந்து பார்க்க முடியாது. ஆதிகாலத்தில், சந்திரன் பூமிக்கு மிக அருகில் இருந்தது. அப்போதெல்லாம், சூரிய கிரகணம் என்றால், முழுச் சூரிய கிரகணம்தான். சந்திரனின் நிழல், சூரியனை முழுமையாக மறைத்துவிடும். காலப்போக்கில், சந்திரனின் சுற்றும் வேகமும், சுற்று வளையமும், பூமியின் சுற்றும் வேகம் மற்றும் ஈர்ப்பு சக்தியும் மாறுபட்டது. சந்திரன் வருடத்திற்கு 2 மி .மீ. பூமியிலிருந்து விலகிச் செல்கிறது. இப்போதுள்ள காலகட்டத்தில் சரியாக சந்திரனின் நிழல்/பிம்பம் சூரியனை மறைக்கிறது. போகப் போக சந்திரனின் சுற்று வளையம் விரிவடையும். விரிவடைந்து கொண்டேபோகும். அப்படி போகும்போது இன்னும் 600 மில்லியன் ஆண்டுகளுக்கு பின்னர் முழுச் சூரிய கிரகணம் வரவே வராது.
எதிர்காலத்தில் பகுதி சூரிய கிரகணத்தை மட்டுமே பார்ப்பார்கள். அடுத்தடுத்த சூரிய கிரகண நிகழ்வுகள் 2021 ஜூன் 10, 2023 அக்டோபர் 10 மற்றும் 2024 அக்டோபர் ஆகிய நாள்களில் நிகழும்.

பாதுகாப்பாக சூரிய கிரகணத்தைப் பார்ப்பது எப்படி?
முழுச்சூரியனும் மறைக்கப்படும்போது ஒரு சில நொடிகள் வெறும் கண்ணால் கிரகணத்தைப் பார்க்க முடியும். பகுதி மற்றும் வளைய சூரிய கிரகணங்களை எந்த சந்தர்ப்பத்திலும் வெறும் கண்ணால் பார்க்கக் கூடாது. சூரியனை நிலவு 99 சதவீதம் மறைத்தால்கூட கிரகணத்தை நேரடியாகப் பார்க்கக் கூடாது. அப்படிப் பார்த்தால் கண்களின் பார்வை நிரந்தரமாகப் பறிபோக வாய்ப்புள்ளது. சூரிய பிம்பத்தைக் கண்ணாடி மூலம் பிரதிபலிக்கச் செய்து பார்ப்பது பாதுகாப்பானது.
எந்தவொரு கருவியும் இல்லாமல் சூரிய கிரகணத்தைக் கண்டால் உங்கள் கண்களுக்குக் கடுமையான மற்றும் நிரந்தரப் பார்வைக் கோளாறு ஏற்படக் கூடும். எனவே, அதைப் பாதுகாப்பாகப் பார்க்க நீங்கள் சோலார் ஃபில்டர் அல்லது சூரிய வடிகட்டி எனும் சூரிய கிரகணத்தைப் பார்க்கக்கூடிய கண்ணாடியைப் பயன்படுத்தி சூரிய கிரகணத்தைக் கண்டு ரசிக்கலாம்.
கிரகணத்தைப் பார்ப்பதற்கென்றே தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இத்தகைய கண்ணாடிகளை வடிவமைத்து வினியோகித்துள்ளது. அதனைக்கொண்டும் சில வினாடிகளுக்கு மேல் தொடர்ந்து பார்ப்பது நல்லதல்ல. இந்தக் கண்ணாடி சூரிய ஒளியில் ஒரு லட்சத்தில் ஒரு பதியை மட்டும்தான் அனுப்பும். அதில் சாதாரணமாகப் பார்த்தால் எதுவும் தெரியாது. ஆனால் சூரியனைப் பார்த்தால் சூரிய கிரகண நிகழ்வு நன்றாகத் தெரியும். வெல்டிங் கண்ணாடி எண் 14-ஐ கொண்டும் காணலாம். இது அகச்சிவப்பு மற்றும் புற ஊதா கதிர்களை வடிகட்டிவிடும்.

அறிவியல்பூர்வமாகத் தெளிவுபடுத்தப்பட்டுள்ள கிரகணம் தொடர்பான ஐயங்கள்:
  • கிரகணத்தின்போது உணவு மற்றும் பானங்களைக் குடிப்பதால் எவ்வித தீங்கும் நேராது.
     
  • கர்ப்பிணிப் பெண்கள் வெளியில் வந்து கிரகணத்தைப் பார்ப்பதால் அவர்களுக்கோ, சிசுவிற்கோ எந்தப் பாதிப்பும் ஏற்படாது.
     
  • கிரகணம் முடிந்ததும் குளிக்க வேண்டும் என்பதில்லை.
     
  • கிரகணத்தின்போது சூரியன் கொஞ்சம் கொஞ்சமாக மறைக்கப்படுவதால், அந்தி நேரம் வந்ததாக விலங்குகளும், பறவைகளும் குழப்பமடைந்து கூட்டுக்குத் திரும்புவது போன்ற நடத்தை மாற்றம் நிகழ வாய்ப்புள்ளது.
     
  • கிரகண நேரத்தில் மட்டுமல்லாது, எந்த நேரத்திலும் சூரியனை வெறும் கண்ணால் பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும்.
     
  • புகைப்பிடித்த கண்ணாடி, வண்ணஃபிலிம், கூலிங்கிளாஸ் மற்றும் பரிசோதித்து அளிக்கப்படாத ஒளிவடிகட்டிகள் மூலம் பார்க்கக் கூடாது.
     
  • சூரியனை பாம்பு கவ்வுவதும் விடுவதும் கற்பனை.
     
  • சில ராசிகளுக்குப் பலன், மற்ற ராசிக்காரர்கள் தோஷம் கழிக்க வேண்டும் என்பது வெறும் கதை.
     
  • கிரகணத்தன்றோடு கரோனா தொற்று முற்றிலும் நீங்கும் என்பது அறிவியல் அடிப்படையற்ற விளம்பர பிரசாரம்.
[கட்டுரையாளர் – துணைத் தலைவர்,
தமிழ்நாடு அறிவியல் இயக்கம், தஞ்சாவூர்.]

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459