முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம் தொடர்பான தீர்ப்பும் , வரவேற்பும் - ஆசிரியர் மலர்

Latest

21/05/2020

முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம் தொடர்பான தீர்ப்பும் , வரவேற்பும்



முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும் சமூக நீதி வழங்க வேண்டும் என்ற சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு வரவேற்கத்தக்கது என்று நிறுவனர் கூறியுள்ளார். இது தொடர்பாக, இன்று (மே 21) வெளியிட்ட அறிக்கை: “தமிழ்நாடு அரசுப் பள்ளிகளுக்கு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களை நியமனம் செய்வதில் இட ஒதுக்கீட்டு விதிகள் மீறப்பட்டிருப்பதாகவும், அதனால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு சமூக நீதி வழங்க வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்ற ஒற்றை நீதிபதி வழங்கிய தீர்ப்பு செல்லும் என்று இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு தீர்ப்பளித்துள்ளது. இது சமூக நீதிக்கு கிடைத்த வெற்றியாகும்.
அரசுப் பள்ளிகளுக்கு 2,144 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களைத் தேர்வு செய்வதற்காக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடத்தப்பட்ட போட்டித்தேர்வுகளுக்கான முடிவுகள் நவம்பர் 20-ம் தேதியும், ஜனவரி 2-ம் தேதியும் இரு கட்டங்களாக வெளியிடப்பட்டன.

இவற்றில் வேதியியல், வரலாறு, பொருளியல், தமிழ், அரசியல் அறிவியல், உயிர் வேதியியல், புவியியல் ஆகிய பாடங்களுக்கான ஆசிரியர்கள் தேர்வில் இடஒதுக்கீட்டு முறை சரியாக கடைப்பிடிக்கப்படவில்லை என்றும், அப்பட்டியலை ரத்து செய்து விட்டு, இட ஒதுக்கீட்டு விதிகளுக்கு உட்பட்டு புதிய பட்டியலை தயாரித்து வெளியிடும்படியும் பலமுறை வலியுறுத்தியிருந்தது. நேரிலும் கோரிக்கை மனுவை ஆதாரங்களுடன் அளித்திருந்தது.
வேதியியல் பாடத்திற்கு 121 பின்னடைவு பணியிடங்கள், 215 நடப்புக் காலியிடங்கள் உட்பட மொத்தம் 356 பேர் தேர்ந்தெடுக்கப்படுவர் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்திருந்தது. அதற்காக தேர்வு வாரியம் தயாரித்திருந்த தற்காலிகத் தேர்வுப் பட்டியலில், அதிக மதிப்பெண் பெற்று பொதுப் பிரிவில் தேர்ச்சி பெற்றிருந்த மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 34 பேரையும், பட்டியல் இனத்தவர் 5 பேரையும் பொதுப் பிரிவில் சேர்க்காமல், அவரவர் சமூகப் பிரிவுகளில் வாரியம் சேர்த்திருந்தது. இது பெரும் அநீதியாகும்.
இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேசன், “ஆசிரியர்கள் நியமனத்தில் இட ஒதுக்கீட்டு விதிகளையே தேர்வு வாரியம் புரிந்து கொள்ளவில்லை. வேதியியல் பாடத்திற்கான ஆசிரியர் தேர்வுப் பட்டியலை ரத்து செய்து விட்டு, இட ஒதுக்கீட்டு விதிகளின்படி புதிய பட்டியலைத் தயாரிக்க வேண்டும்” என்று ஆணையிட்டிருந்தார்.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்த ஆசிரியர் தேர்வு வாரியம், வேதியியல் தவிர பிற பாடங்களுக்கான ஆசிரியர் பணியிடங்களை பிப்ரவரி மாதமே நிரப்பி பணி ஆணைகளை வழங்கியது.
வேதியியல் குறித்த ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு, அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களை பொதுப்பிரிவில் சேர்க்காமல், இட ஒதுக்கீட்டுப் பிரிவில் சேர்த்தது தவறு என்று தீர்ப்பளித்துள்ளது.
அதுமட்டுமின்றி, அதிக மதிப்பெண்கள் பெற்ற மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களை பொதுப்பிரிவில் சேர்த்து விட்டு, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டிலும் அவர்களைச் சேர்த்தால் அப்பிரிவினரின் பிரதிநிதித்துவம் அதிகரித்து விடும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்ட முட்டாள்தனமான அச்சத்தை நிராகரித்த நீதிபதிகள், “மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவர்கள் தகுதி அடிப்படையில் பொதுப்பிரிவு இடத்தைப் பிடிக்கும்போது அதை மதிக்க வேண்டும். அவர்கள் பொதுப்பிரிவு இடத்தைப் பிடிக்கக்கூடாது என்று யாரும் கூற முடியாது. அதிக மதிப்பெண்கள் பெற்ற மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் பொதுப்பிரிவில் நியமிக்கப்படுவதுதான் முறை; இது யாருடைய உரிமையையும் பறிக்காது’’ என்றும் தீர்ப்பில் மிகவும் தெளிவாக தெரிவித்திருக்கின்றனர்.
சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு சமூக நீதிக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி ஆகும்.
நியமனத்தில் இட ஒதுக்கீட்டு விதிகள் அப்பட்டமாக மீறப்பட்டுள்ளன; மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு சமூக அநீதி இழைக்கப்பட்டிருக்கிறது என்பதை புள்ளிவிவரங்களுடன் சுட்டிக்காட்டிய பிறகும் கூட அதைச் சரி செய்ய ஆசிரியர் தேர்வு வாரியம் முன்வரவில்லை.
சென்னை உயர் நீதிமன்றத்தின் ஒற்றை நீதிபதி அளித்த தெளிவான தீர்ப்பைக் கூட நடைமுறைப்படுத்தாமல், மேல்முறையீடு செய்தது. அதையும் கடந்து, அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களை பொதுப்பிரிவில் சேர்த்தால், அப்பிரிவினருக்கு அதிக இடங்கள் கிடைத்து விடும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் வாதிட்டதை வைத்துப் பார்த்தாலே, ஆசிரியர் தேர்வு வாரியம் எந்த அளவுக்கு சமூக நீதிக்கு எதிராகச் செயல்படுகிறது என்பதை உணர முடியும்.
ஆசிரியர் தேர்வு வாரியம் சமூக நீதிக்கு எதிரான அதன் போக்கை தொடராமல், உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை மதித்து,
வேதியியல் பாட ஆசிரியர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியலை புதிதாகத் தயாரித்து வெளியிட வேண்டும். அதன் மூலம் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த 34 பேருக்கு கூடுதலாக வேதியியல் ஆசிரியர் பணி கிடைப்பதை ஆசிரியர் தேர்வு வாரியம் உறுதி செய்ய வேண்டும்.
ஆசிரியர் தேர்வு வாரியம் கடைப்பிடித்த தவறான இட ஒதுக்கீட்டுக் கொள்கை காரணமாக வேதியியல் பாடத்தில் 34 பேர் மட்டும் பாதிக்கப்படவில்லை. அவர்கள் தவிர தமிழ்ப் பாடத்தில் 28 பேர், பொருளியலில் 12 பேர், வரலாறு 6 பேர், புவியியல், அரசியல் அறிவியல், உயிரி வேதியியல் பாடங்களில் தலா ஒருவர் என மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த 83 பேரும், பட்டியலினத்தைச் சேர்ந்த 16 பேரும் ஆசிரியர்களாகும் வாய்ப்பை இழந்துள்ளனர்.
உயர் நீதிமன்றத்தின்
தீர்ப்பு இந்தப் பணியிடங்களுக்கும் பொருந்தும் என்பதால், அந்தப் பாடங்களுக்கான ஆசிரியர் நியமனப் பட்டியலையும் புதிதாகத் தயாரித்து, அதனடிப்படையில் பாதிக்கப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்களுக்கும் நியமனம் வழங்க வேண்டும்; அதன் மூலம் சமூக நீதியை உறுதி செய்ய வேண்டும்.
இதற்கெல்லாம் மேலாக சமூக நீதிக்கு எதிராக ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவரை அப்பதவியில் இருந்து மாற்ற வேண்டும். அரசுப் பணி தேர்வாணையங்களில் சமூக நீதிக்கு ஆதரவான அதிகாரிகளை பணியமர்த்தி, சமூக நீதி முழுமையாக கடைப்பிடிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்”.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459