அரசு ஊழியர்கள் ஓய்வு வயது 59 ஆக உயர்வு வழக்கு ; ஆசிரியர்களை பணியிலிருந்து விடுவிக்க தடை - ஆசிரியர் மலர்

Latest

 




28/05/2020

அரசு ஊழியர்கள் ஓய்வு வயது 59 ஆக உயர்வு வழக்கு ; ஆசிரியர்களை பணியிலிருந்து விடுவிக்க தடை


அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 59 ஆக உயர்த்தி பிறப்பித்த அரசாணையின் பலனை ஏப்ரல் 30-ல் ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கும் வழங்கக்கோரி வழக்கு தொடர்ந்த ஆசிரியர்களை பணியிலிருந்து விடுவிக்க இடைக்கால தடை விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிவகங்கை அல்லிநகரம் அரசு மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் டி.ஜெயமங்கலம், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:
நான் 30.4.2020-ல் பணியிலிருந்து ஓய்வு பெற வேண்டும். எனக்கு 31.5.2020 வரை பணி நீட்டிப்பு வழங்கப்பட்டது. இந்நிலையில் அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை 58-ல் இருந்து 59 வரை உயர்த்தி தமிழக அரசு 7.5.2020-ல் அரசாணை பிறப்பித்தது.
இந்த அரசாணையால் 31.5.2020-ல் வழக்கமாக ஓய்வு பெறும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் பயன்பெறுவர். என்னைப்போல் ஏப்ரல் 30-ல் ஓய்வு பெற்று பணி நீட்டிப்பு பெற்றவர்களுக்கு பலனில்லை. இந்த அரசாணை மத்தியில் பாரபட்சம் காட்டுவதாக உள்ளது.
எனவே 31.5.2020-ல் ஓய்வு பெறும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு மட்டும் ஓய்வு பெறும் வயதை 59 ஆக உயர்த்தும் அரசாணையை ரத்து செய்து 30.4.2020-ல் ஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வு வயது நீட்டிப்பு சலுகை வழங்க உத்தரவிட வேண்டும். அதுவரை என்னை மே 31-ல் பணியிலிருந்து விடுவிக்க தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இதேபோல் விருதுநகர் மாவட்டம் வன்னியம்பட்டி உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஜவஹர், விருதுநகர் முத்துராமலிங்கபுரம் சிவசங்கர், செம்பட்டி பார்வதி, திருப்பத்தூர் கோபாலகிருஷ்ணன் ஆகியோரும் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனுக்களை நீதிபதி ஜெ.நிஷாபானு இன்று விசாரித்தார். மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அஜ்மல்கான், ஓய்வு பெற்றவர்களுக்கான ஓய்வூதிய விவரங்கள் இதுவரை அனுப்பப்படவில்லை. மனுதாரர்களின் ஓய்வு வரம்பு மார்ச், ஏப்ரல் மாதங்களாக இருப்பினும், தற்போதுவரை பணியில் உள்ளனர்
. அப்படியிருக்கும் போது ஓய்வு வயது அதிகரிப்பு அரசாணை மனுதாரர்களுக்கு பொருந்தாது என்பது ஏற்க முடியாதது என்றார்.
அரசுத்தரப்பில், பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் கோரப்பட்டது.
அப்போது குறுக்கிட்ட அஜ்மல்கான், ஜூன் மாதம் தொடங்க 2 நாள் மட்டுமே உள்ளது. இதனால் அதற்கு முன்பு மனுதாரர்களை பணியிலிருந்து விடுவிக்க அதிக வாய்ப்புள்ளது. எனவே மனுதாரர்கள் 5 பேரையும் பணியிலிருந்து விடுவிக்க தடை விதிக்க வேண்டும் என்றார்.
இதையேற்று மனுதாரர்கள் 5 பேரையும் பணியிலிருந்து விடுவிக்க இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.
அரசுத் தரப்பில் பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை ஜூன் 3-ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459