தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை 2024: முதல் சுற்றில் 17,679 பேருக்கு இடங்கள் ஒதுக்கீடு; 10550 பேர் கம்ப்யூட்டர் சயின்ஸ் சார்ந்த படிப்புகளை தேர்வு செய்தனர்; சிவில், மெக்கானிக்கல் படிக்க ஆர்வம் குறைவு
கணினி அறிவியல், செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பம் ஆகியவை இந்த ஆண்டு முதல் சுற்று பொறியியல் கவுன்சிலிங்கின் முடிவில் மாணவர்களால் அதிகம் விரும்பப்பட்ட படிப்புகளாக உள்ளன.
தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள 440க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளின் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. முதல் சுற்று கலந்தாய்வு முடிவடைந்து மாணவர்களுக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து இரண்டாவது சுற்றுக்கான சாய்ஸ் ஃபில்லிங் சனிக்கிழமை தொடங்கியது. 178.9 முதல் 142 வரையிலான கட்-ஆஃப் மதிப்பெண்கள் பெற்ற 85,295 மாணவர்கள் சாய்ஸ் ஃபில்லிங் செய்து வருகின்றனர்.
இந்தநிலையில், முதல் சுற்றுக்கு தகுதி பெற்ற 26,254 மாணவர்களில் 17,679 மாணவர்களுக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. 8,575 பேர் முதல் சுற்றிலிருந்து வெளியேறியுள்ளனர். 443 கல்லூரிகளில், 30 கல்லூரிகளில் மட்டுமே 40% இடங்களுக்கு மேல் நிரம்பியுள்ளன, 177 கல்லூரிகளில் ஒரு இடம் கூட முதல் சுற்றில் நிரம்பவில்லை.
இதற்கிடையில், கடந்த சில ஆண்டுகளைப் போலவே கம்ப்யூட்டர் சயின்ஸ் சார்ந்த படிப்புகள் இந்த ஆண்டும் மாணவர்களை ஈர்த்துள்ளன. முதல் சுற்றில் பங்கேற்ற பெரும்பாலான மாணவர்கள் கணினி சார்ந்த படிப்புகளான கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியரிங், செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பம் ஆகிய படிப்புகளை அதிகம் தேர்வு செய்துள்ளனர். முதல் சுற்றில் 10550 பேர் கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்புகளை தேர்வு செய்துள்ளனர்.
அடுத்தப்படியாக, எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் (ECE) படிப்பு மாணவர்களால் அதிகம் விரும்பப்படுகிறது. 2967 பேர் இ.சி.இ படிப்பை தேர்வு செய்துள்ளனர். வரும் ஆண்டுகளில் இந்தத் துறையில் அதிக வேலை வாய்ப்புகள் கிடைக்கும் என்று கூறப்படுவதால் மாணவர்கள் ஆர்வத்துடன் தேர்வு செய்துள்ளனர். இ.இ.இ படிப்பில் 14016 இடங்கள் உள்ள நிலையில், 941 இடங்கள் நிரம்பியுள்ளன.
சிவில் இன்ஜினியரிங் மற்றும் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் போன்ற முக்கிய படிப்புகளை குறைவான மாணவர்கள் தேர்வு செய்துள்ளனர். மொத்தம் உள்ள 26074 இடங்களில் 1078 இடங்கள் மட்டுமே முதல் சுற்றில் நிரம்பியுள்ளன.
கல்லூரிகளைப் பொறுத்தவரை அண்ணா பல்கலைக்கழக வளாகங்களில் மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (MIT) மற்றும் கிண்டி பொறியியல் கல்லூரி (CEG) ஆகியவை சிறந்த விருப்பங்களாக உள்ளன.
இந்த ஆண்டு, பொறியியல் கவுன்சிலிங் தாமதமானதால், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் அதிக மாணவர்களை ஈர்த்துள்ளன. மருத்துவ கவுன்சலிங்கில் ஏற்படும் தாமதமும், முதல் சுற்றில் அதிக மாணவர்கள் தேர்வு செய்யாததற்கு காரணமாக இருக்கலாம். மாணவர்கள் பெரும்பாலும் பெரு நகரங்களில் உள்ள கல்லூரிகளை அதிகம் விரும்புகின்றனர் என்று கல்வி ஆலோசகர் தெரிவித்தார்.
இதற்கிடையில் மாணவர்கள் தொலைபேசியில் கேன்வாஸ் செய்பவர்களிடம் சிக்கி, தரம் குறைந்த கல்லூரிகளை தேர்வு செய்ய வேண்டாம் என அண்ணா பல்கலைகழக துணைவேந்தர் ஆர்.வேல்ராஜ் கேட்டுக் கொண்டார். “191 கட்-ஆஃப் பெற்ற ஒரு மாணவருக்கு குறிப்பிட்ட நிறுவனம் கேன்வாஸ் செய்ததால் உள்ளூர் கல்லூரியில் சீட் கிடைத்துள்ளது. அண்ணா பல்கலைகழகத்தில் அவருக்கு சீட் கிடைத்திருக்கும். அவரை இரண்டாவது சுற்றில் பங்கேற்க நாங்கள் வழிகாட்டினோம்,” என்று வேல்ராஜ் கூறினார்.
No comments:
Post a Comment