தமிழக அரசின் நான் முதல்வன் திட்டத்தின் கீழ், தமிழக கல்லூரி மாணவர்கள் 25 பேர் இன்று சென்னையில் இருந்து சிறப்பு பயிற்சிக்காக லண்டன் சென்றனர். இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைளத்தில், “சிறகுகள் விரியட்டும், மகிழ்ச்சி” எனப் பதிவிட்டுள்ளார்.
தமிழக முதல்வரின் கனவு திட்டமான, நான் முதல்வன் திட்டத்தின் கீழ் மாணவ, மாணவியரின் தனித்திறன்களை கண்டறிந்து, அவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட்டு, வேலைவாய்ப்புக்கான வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில் தற்போது, லண்டனின் நியூகேஸ்டல் துர்ஹாம் பல்கலைக்கழகத்தில் ஒரு வார திறன்மேம்பாட்டு பயிற்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. பிரிட்டிஷ் கவுன்சிலுடன், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் இணைந்து, செயற்கை நுண்ணறிவு, தரவு அறிவியல் ஆகிய பயிற்சிகளுக்கு, தமிழகத்தில் உள்ள 15 பொறியியல் மற்றும் 10 அறிவியல் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
இதற்காக, கல்லூரிகள் மூலம் மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்களை திறன் மேம்பாட்டுக்கழகம் பெற்றது. அப்போது பல்வேறு சிறப்பு பயிற்சிகள் பெற்ற 1,267 மாணவ, மாணவிகள் விண்ணப்பித்தனர். அவர்களுக்கு பல திறனாய்வு தேர்வுகளை நடத்தி, அதில் 100 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.அதன்பின், அந்த 100 பேருக்கும் ஆன்லைன் மூலம் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது. அதில் சிறப்பாக செயல்பட்ட 25 மாணவ, மாணவியர் லண்டன் செல்ல தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு வரும் ஜூன் 16-ம் தேதி வரை லண்டனில் சிறப்பு பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன.
இந்நிலையில், மாணவர்கள் இன்று அதிகாலை சென்னையில் இருந்து லண்டன் அழைத்து செல்லப்பட்டனர். அவர்களுடன் பேராசிரியர்கள் இருவரும் லண்டன் சென்றனர். இன்று காலை லண்டன் புறப்பட்ட மாணவ மாணவியரை பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் மகிழ்ச்சியுடன் வழி அனுப்பி வைத்தனர். முன்னதாக சென்னை விமான நிலையம் வந்த மாணவர்களை, தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம், மற்றும் பிரிட்டிஷ் கவுன்சில் அதிகாரிகள் வரவேற்று அழைத்துச்சென்றனர்.
No comments:
Post a Comment