பிளஸ் 2 பொதுத் தேர்வில் கணிதம், வணிகவியல் தேர்வுகள் எளிது: ‘சென்டம்’ அதிகரிக்க வாய்ப்பு - ஆசிரியர் மலர்

Latest

20/03/2024

பிளஸ் 2 பொதுத் தேர்வில் கணிதம், வணிகவியல் தேர்வுகள் எளிது: ‘சென்டம்’ அதிகரிக்க வாய்ப்பு

 1218323

பிளஸ் 2 பொதுத் தேர்வில் கணிதம், வணிகவியல் தேர்வுகள் எளிதாக இருந்ததாக மாணவர்கள் கூறியுள்ளனர்.


தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு கடந்த மார்ச் 1-ம்தேதி தொடங்கி நடந்து வருகிறது. கணிதம், விலங்கியல், வணிகவியல், நுண்ணுயிரியல், ஊட்டச்சத்து மற்றும் உணவுமுறை, ஜவுளி மற்றும் ஆடை வடிவமைப்பு, உணவு சேவை மேலாண்மை, வேளாண் அறிவியல், நர்ஸிங் (பொது) ஆகிய பாடங்களுக்கான தேர்வுகள் நேற்று நடைபெற்றன. தமிழகம் முழுவதும் 7.25 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதினர். 10,415 பள்ளி மாணவர்கள், 1,593 தனி தேர்வர்கள் என மொத்தம் 12,008 பேர் தேர்வு எழுத வரவில்லை என்று தேர்வுத் துறை தெரிவித்துள்ளது.


இவற்றில் கணிதம், வணிகவியல் தேர்வுகள் எளிதாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து ஆசிரியர்களிடம் கேட்டபோது, ‘‘கணிதம், வணிகவியல் தேர்வுகளில் எதிர்பார்த்த கேள்விகளே அதிகம் இடம்பெற்றிருந்தன. இவற்றில் சராசரி மாணவர்கள் கூட அதிக மதிப்பெண் பெறமுடியும். இந்த ஆண்டு தேர்ச்சி உயர்வதுடன் முழு மதிப்பெண் (சென்டம்) பெறுபவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக உயரும்’’ என்றனர்.


பிளஸ் 2 வகுப்புக்கான உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம் மற்றும் புள்ளியியல், ஜவுளி தொழில்நுட்பம் உள்ளிட்ட பாடங்களுக்கான தேர்வுகள் மார்ச் 22-ம் தேதி நடைபெற உள்ளன. அத்துடன் பிளஸ் 2 பொதுத் தேர்வு நிறைவடைகிறது.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459