தகுதித் தேர்வு அடிப்படையில் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களை நியமித்திடுக: ராமதாஸ் வலியுறுத்தல் - ஆசிரியர் மலர்

Latest

24/10/2023

தகுதித் தேர்வு அடிப்படையில் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களை நியமித்திடுக: ராமதாஸ் வலியுறுத்தல்

 1143195

"இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணிக்கு போட்டித் தேர்வை கட்டாயமாக்கும் அரசாணை எண் 149ஐ தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும். அதற்குப் பதிலாக தகுதித் தேர்வு அடிப்படையில் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.


இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் அரசுப் பள்ளி ஆசிரியர் பணிக்கான அதிகபட்ச வயது வரம்பை பொதுப்பிரிவினருக்கு 40-லிருந்து 53 ஆகவும், இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 45-லிருந்து 58 ஆகவும் உயர்த்தி தமிழக அரசு ஆணை பிறப்பித்திருக்கிறது. தகுதித் தேர்வில் வெற்றி பெற்று ஆசிரியர் பணிக்காக காத்திருக்கும் பட்டதாரிகள் மற்றும் பட்டயதாரிகளின் கோரிக்கையை ஏற்று இந்த நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொண்டிருக்கிறது. இது வரவேற்கத்தக்கது. அதேநேரத்தில் இது மட்டுமே போதுமானது அல்ல.


தமிழகத்தில் ஆசிரியர் பணிக்கான தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்கள், தங்களுக்கு போட்டித் தேர்வு நடத்தாமல் நேரடியாக ஆசிரியராக நியமிக்க வேண்டும்; ஆசிரியர் பணிக்கான வயது வரம்பை உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கடந்த செப்டம்பர் 27-ம் தேதி முதல் சென்னையில் தொடர் போராட்டங்களை நடத்தினார்கள். அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் வயது வரம்பு உயர்த்தப்பட்டுள்ளது. ஆனாலும், அவர்களின் முதன்மை கோரிக்கை இன்னும் நிறைவேற்றப்படவில்லை.


இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணிக்கு இரு தேர்வுகள் கூடாது; ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களை, போட்டித்தேர்வு நடத்தாமல், நேரடியாக பணியமர்த்த வேண்டும் என்பது தான் அவர்களின் முதன்மைக் கோரிக்கை ஆகும். இந்தக் கோரிக்கையை நிறைவேற்றுவதில் தமிழக அரசுக்கு எந்த சிக்கலும் இல்லை. ஒரே ஓர் அரசாணை பிறப்பிப்பதன் மூலம் இந்தக் கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்றலாம். இந்தக் கோரிக்கையை நிறைவேற்றுவதால் தமிழக அரசுக்கு நிதி சார்ந்த செலவுகள் எதுவும் ஏற்படப்போவதில்லை. ஆனாலும் இந்தக் கோரிக்கையை நிறைவேற்றுவதற்கு தமிழக அரசு தயங்குவது ஏன்? எனத் தெரியவில்லை.


2012-ம் ஆண்டு நடத்தப்பட்ட தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு அதன் தரவரிசை அடிப்படையில் ஆசிரியர் பணி வழங்கப்பட்டது. அப்போது போட்டித் தேர்வு எதுவும் நடத்தப்படவில்லை. ஆனால், 2018-ம் ஆண்டு ஜூலை 20-ம் நாள் பிறப்பிக்கப்பட்ட 149 என்ற எண் கொண்ட அரசாணை மூலம் போட்டித் தேர்வை அப்போதைய அரசு திணித்தது. அதற்கு பாமகவுடன் இணைந்து எதிர்ப்பு தெரிவித்த அப்போதைய எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின், திமுக ஆட்சிக்கு வந்தால் போட்டித் தேர்வை ரத்து செய்வோம் என்று சூளுரைத்திருந்தார். திமுகவின் தேர்தல் அறிக்கையிலும் இது குறித்து வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், திமுக அரசு பொறுப்பேற்று 30 மாதங்களுக்கு மேலாகியும் இந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை.


தமிழகம் முழுவதும் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற 60 ஆயிரத்துக்கும் கூடுதலானவர்களுக்கு அதிகபட்சமாக 10 ஆண்டுகளாக வேலை வழங்கப்படவில்லை.


அவர்கள் போட்டித் தேர்வு எழுதிதான் பணியில் சேர வேண்டும் என்றால், அதற்கான பயிற்சியைப் பெற அவர்கள் பல லட்சம் ரூபாய் செலவழிக்க வேண்டும். அந்த வகையில் பணம் படைத்த, நகர்ப்புற மாணவர்களுக்கு மட்டுமே ஆசிரியர் பணி கிடைப்பதற்கு போட்டித் தேர்வு வகை செய்கிறது. எனவே, இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணிக்கு போட்டித் தேர்வை கட்டாயமாக்கும் அரசாணை எண் 149ஐ தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும். அதற்கு பதிலாக தகுதித் தேர்வு அடிப்படையில் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று அவர் கூறியுள்ளார்.

TEACHERS NEWS

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459