காலை உணவு திட்டம் விரிவாக்கம், 55 ஆயிரம் அரசு பணியிடங்கள் நிரப்பப்படும். ஓலா, ஊபர், ஸ்விகி பணியாளர்களுக்கு தனி நல வாரியம் அமைக்கப்படும், தியாகிகள் ஓய்வூதியம் 11,000 ஆக அதிகரிக்கப்படும், பெண் ஓட்டுநர்கள் புதிதாக ஆட்டோ வாங்கும் திட்டம் விரிவுபடுத்தப்படும் என கோட்டையில் சுதந்திர தின விழா கொடியேற்றி வைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். நாட்டின் 77வது சுதந்திர தினத்தையொட்டி சென்னை, ராஜாஜி சாலையில் உள்ள புனித ஜார்ஜ் கோட்டையின் கொத்தளத்தில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் மூன்றாவது முறையாக தேசியக்கொடி ஏற்றினார். பின்னர் அவர் பேசியதாவது: பார்போற்றும் தமிழ்நாடு மாநிலத்தின் முதல்வராக பொறுப்பேற்ற நான், மூன்றாவது ஆண்டாக இந்திய நாட்டின் தேசியக் கொடியை ஏற்றி வைக்கிறேன்.400 ஆண்டுகள் பழமையான இந்த புனித ஜார்ஜ் கோட்டையின் கொத்தளத்தில் மூவண்ணக் கொடியை ஏற்றுவதில் பெருமிதம் கொள்கிறேன்.
இந்த கொடியேற்றும் வாய்ப்பை எனக்கு வழங்கிய தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் அன்பான வணக்கங்கள். நவீன தமிழ்நாட்டை உருவாக்கிய சிற்பியாம் கலைஞரின் நூற்றாண்டு விழா ஆண்டில் கோட்டையில் நின்று கொடியேற்றும் வாய்ப்பை பெற்றமைக்காகப் பெருமை அடைகிறேன். விடுதலைப் போராட்ட தியாகிகளின் குடும்ப உறுப்பினர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் மாதாந்திர ஓய்வூதியம் ரூ.10 ஆயிரத்தில் இருந்து ரூ.11 ஆயிரமாக இனி உயர்த்தி வழங்கப்படும் என்ற புதிய அறிவிப்பை வெளியிடுகிறேன். ஒரு கோடி மகளிர் மாதம்தோறும் பயனடையும் வகையில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம், அடுத்த மாதம் 15ம் நாள் அண்ணா பிறந்த நாளன்று தொடங்கப்பட இருக்கிறது. மகளிர்க்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் நேரடியாக அவர்களது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட உள்ளது.
நடப்பாண்டில் 2 லட்சத்து 11 ஆயிரம் உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு, ரூ.350 கோடி வழங்க ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மகளிரின் பொருளாதாரச் சுமையை குறைக்கும் வகையில், பேருந்துகளில், மகளிர் கட்டணம் செலுத்தாமல் பயணிக்கக் கொண்டு வரப்பட்ட இந்த திட்டத்தின்கீழ் தினசரி 50 லட்சம் மகளிர் பயணிக்கின்றனர். இதுவரை இந்த திட்டத்தில் 314 கோடி முறை பெண்கள் அரசுப் பேருந்துகளில் பாதுகாப்பான பயணம் மேற்கொண்டு பயனடைந்துள்ளனர். இந்த திட்டத்தால் ஒவ்வொருவரும் மாதம் ஒன்றுக்கு சராசரியாக ரூ.850 மேல் சேமிக்க முடிகிறது. கடந்தாண்டு செப்.15ம் நாள் அண்ணாவின் பிறந்தநாளன்று 1 முதல் 5ம் வகுப்புவரை பயிலும் மாணவர்களுக்கு முதல்வரின் காலை உணவுத் திட்டம் தொடங்கப்பட்டது. இதனால் மாணவர்களின் வருகை அதிகரித்து, அவர்கள் தடையின்றிக் கல்வி பெறுதல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
வரும் கல்வியாண்டு முதல் 31 ஆயிரத்து 8 அரசுப் பள்ளிகளில் பயிலும், 15 லட்சத்து 75 ஆயிரம் மாணவர்கள் பயன்பெறும் வகையில் முதல்வரின் காலை உணவுத்திட்டம் வரும் ஆகஸ்ட் 25ம் நாள் முதல் மாநிலம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் விரிவுபடுத்தப்பட உள்ளது. கலைஞர் பயின்ற திருக்குவளை பள்ளியில் தொடங்கி வைக்க இருக்கிறேன். இதற்கென இந்த நிதியாண்டில் ரூ404 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஏற்றமிகு ஏழு திட்டங்களில் ஒன்றுதான், ஊட்டச்சத்தை உறுதி செய் திட்டம். 6 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து வழங்கும் திட்டம் அது. கடந்த ஓராண்டு காலத்தில் 10 லட்சம் குழந்தைகள் மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டு, அதில் 92 ஆயிரம் குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைபாடுடன் இருப்பதாகக் கண்டறியப்பட்டு, அவர்களுக்கு ஊட்டச்சத்து நிறைந்த சிறப்பு உணவுப்பொருட்கள் அளிக்கப்பட்டதன் வாயிலாக 62 ஆயிரம் குழந்தைகள் தங்களது ஊட்டச்சத்து நிலையில் நல்ல முன்னேற்றத்தை அடைந்துள்ளனர்.
பிறவியிலேயே குறைபாடுகள் கொண்ட 3,038 குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, தற்போது அவர்கள் நலமாக உள்ளனர். இதுபோலவே, ஆறு மாதம்வரை உள்ள குழந்தைகளின் பாலூட்டும் தாய்மார்களுக்கெனச் சிறப்பு கூடுதல் சத்துணவு அளிக்கப்பட்டதால், 14 ஆயிரம் குழந்தைகள் நல்ல முன்னேற்றத்தை அடைந்துள்ளனர். இந்த திட்டம் ஊட்டச்சத்தின் முக்கியத்துவம் குறித்து இளம் தாய்மார்களுக்கிடையே நல்லதொரு தாக்கத்தை உருவாக்கியுள்ளது. ‘நான் முதல்வன்’ திட்டத்தின்கீழ் கடந்த ஓராண்டில் மட்டும் 13 லட்சம் மாணவர்களுக்கு வெற்றிகரமாக பயிற்சி அளிக்கப்பட்டு அதில் மூன்றரை லட்சத்திற்கும் மேலான மாணவர்கள் பல்வேறு பணிகளில் அரசின் உதவியுடன் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த திட்டத்தினை மேலும் விரிவுபடுத்தும் வகையில் இன்னொரு முன்னெடுப்பை இந்த விடுதலை நாளில் அறிவிக்கிறேன்.
தாய்நாட்டிற்காக தங்களுடைய இளம் வயதை நாட்டின் எல்லையில் ராணுவ பணியில் கழித்து, பணிக்காலம் நிறைவுபெற்று திரும்பும் முன்னாள் ராணுவத்தினர் பயன்பெறும் வகையில், ரூ.7 கோடி மதிப்பீட்டில் 10 ஆயிரம் நபர்களுக்கு உரிய பயிற்சிகள் வழங்கி, திறனை மேம்படுத்தவும், அவர்கள் உரிய பணியில் அமரும் வரையில் தக்க உதவி செய்யவும் நடவடிக்கைகள் எடுக்கப்படும். சென்னை போன்ற பெருநகரங்களில் தொடங்கி, பல்வேறு நகரங்களிலும் இன்று நாம் அடிக்கடி காணக்கூடிய காட்சி ஒன்று. ஓலா, ஊபர், ஸ்விகி, ஸொமட்டோ போன்ற நிறுவனங்களைச் சார்ந்த வாகனங்கள் விரைவாக சேவை வழங்கும் நோக்கத்துடன் பயணிப்பதைக் காணலாம். அந்தவகையில், நேரத்தின் அருமை கருதி பணிபுரியும் இத்தகைய பணியாளர்களின் வாழ்க்கை முக்கியமானது.
அவர்களின் ஒட்டுமொத்த நலனைப் பாதுகாக்கும் வகையில், அவர்களுக்கென தனியே நல வாரியம் ஒன்று அமைக்கப்படும் என்பதையும் அறிவிக்கிறேன். மேலும், ஆட்டோ ஓட்டுநர்களாகப் பணிபுரியும் பெண்கள் புதிதாக ஆட்டோ வாங்குவதற்கென ஒரு லட்சம் ரூபாய் மானியம் வழங்கும் திட்டம் ஏற்கெனவே செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின்கீழ் 141 பேர் பயனடைந்துள்ள நிலையில், தற்பொழுது மேலும் 500 மகளிர் பயன்பெறும் வகையில் திட்டம் விரிவுபடுத்தப்படும். ஆட்டோ ஓட்டுநர்களாகப் பணிபுரியும் மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்தவர்களுக்கும் இந்தத் திட்டம் விரிவுபடுத்தப்படும். இவை மட்டுமின்றி, சென்னை கதீட்ரல் சாலையில் உள்ள செங்காந்தள் பூங்காவிற்கு அருகில் உள்ள 6.09 ஏக்கர் நிலத்தில் ரூ.25 கோடி செலவில் “கலைஞர் நூற்றாண்டு பூங்கா” ஒன்று அமைக்கப்படும்.
நடப்பாண்டுகளில் பல்வேறு துறைகளைச் சார்ந்த சுமார் 55 ஆயிரம் அரசு பணியிடங்களை நிரப்ப இருக்கிறோம். மக்களுக்கு நேரடித் தொடர்பு கொண்ட அனைத்தும் மாநிலப்பட்டியலில் இணைக்கப்பட வேண்டும்.
குறிப்பாக கல்வி, மாநிலப்பட்டியலுக்கு மாற்றப்பட வேண்டும். அதைச் செய்தால்தான் நீட் போன்ற கொடூரமான தேர்வு முறை முற்றிலுமாக அகற்றப்பட முடியும். சமூகநீதி, சமத்துவம், சகோதரத்துவம், சமதர்மம், மதச்சார்பின்மை, ஒடுக்கப்பட்டோர் நலன் ஆகிய மிக உயர்ந்த கோட்பாடுகள் கொண்ட இந்தியாவை அமைப்பதுதான் இந்திய விடுதலைக்காகப் போராடிய தியாகிகளுக்குச் செலுத்தும் உண்மையான அஞ்சலியாக இருக்கும். ஒற்றுமையால் கிடைத்த விடுதலையை அதே ஒற்றுமையால் காப்போம். வேற்றுமையை விதைக்கும் சக்திகளை வேரோடு சாய்ப்போம். இவ்வாறு அவர் பேசினார்.ஆட்டோ ஓட்டுநர்களாகப் பணிபுரியும் பெண்கள் புதிதாக ஆட்டோ வாங்குவதற்கென ஒரு லட்சம் ரூபாய் மானியம் வழங்கும் திட்டத்தின்கீழ் 141 பேர் பயனடைந்துள்ள நிலையில், தற்பொழுது மேலும் 500 மகளிர் பயன்பெறும் வகையில் திட்டம் விரிவுபடுத்தப்படும். ஆட்டோ ஓட்டுநர்களாகப் பணிபுரியும் மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்தவர்களுக்கும் இந்தத் திட்டம் விரிவுபடுத்தப்படும்.மக்களுக்கு நேரடித் தொடர்பு கொண்ட அனைத்தும் மாநிலப்பட்டியலில் இணைக்கப்பட வேண்டும். குறிப்பாக கல்வி, மாநிலப்பட்டியலுக்கு மாற்றப்பட வேண்டும். அதைச் செய்தால்தான் நீட் போன்ற கொடூரமான தேர்வு முறை முற்றிலுமாக அகற்றப்பட முடியும்.
No comments:
Post a Comment