துணை தேர்வு நடத்த உத்தரவு; கேந்திரிய பள்ளிகள் அப்பீல் - ஆசிரியர் மலர்

Latest

20/05/2023

துணை தேர்வு நடத்த உத்தரவு; கேந்திரிய பள்ளிகள் அப்பீல்

 பிளஸ் 1 வகுப்பு தேர்வில், ஒன்றுக்கும் மேற்பட்ட பாடங்களில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு துணைத் தேர்வு நடத்தும்படி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, கேந்திரிய வித்யாலயா சங்கதன் மேல்முறையீடு செய்துள்ளது.


கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் பிளஸ் 1 வகுப்பு தேர்வில், ஒரு பாடத்தில் தோல்வியடைந்தால், துணைத் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர்; ஒன்றுக்கு மேற்பட்ட பாடங்கள் என்றால், அனுமதிப்பது இல்லை. எனவே, ஒன்றுக்கும் மேற்பட்ட பாடங்களில் தோல்வியடைந்த மாணவர்களுக்கும் துணைத் தேர்வு எழுத அனுமதி கோரி, உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.


இம்மனுக்களை விசாரித்த உயர் நீதிமன்ற தனி நீதிபதி, மாணவர்களின் நலன் கருதி, ஒன்றுக்கும் மேற்பட்ட பாடங்களில் தோல்வி அடைந்தவர்களுக்கு, ஒரு முறை நடவடிக்கையாக மூன்று வாரங்களில் துணைத் தேர்வு நடத்தும்படி, கேந்திரிய வித்யாலயா சங்கதனுக்கு உத்தரவிட்டிருந்தார்.


இதை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் கேந்திரிய வித்யாலயா சங்கதன் மேல்முறையீடு செய்தது. மனுவில் 'ஒன்றுக்கு மேற்பட்ட பாடங்களில் தோல்வி அடைந்தவர்களுக்கு துணைத் தேர்வு எழுத அனுமதியில்லை என விதிகள் உள்ளன. இதை தனி நீதிபதியிடம் தெரிவித்தும் ஏற்கவில்லை' என கூறப்பட்டுள்ளது.


மனு, நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. மாணவர்கள் தரப்பில், வழக்கறிஞர் கே.ராஜா ஆஜரானார்.


மனுவுக்கு, மாணவர்கள் தரப்பு பதில் அளிக்க உத்தரவிட்டு, விசாரணையை, ஜூன் 6க்கு, நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459