குரூப் 4 தேர்வு முடிவுகள் இம்மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு கடந்த ஆண்டு ஜூலை 24ம் தேதி நடைபெற்றது. வி.ஏ.ஓ., இளநிலை உதவியாளர் உள்பட 9,870 காலிப் பணியிடங்களுக்கு குரூப் - 4 தேர்வு நடைபெற்றது. முடிவுகள் மார்ச் முதல் வாரத்தில் வெளியாகலாம் என தேர்வர்கள் எதிர்ப்பார்த்தனர். ஆனால் முடிவுகள் வெளியிடப்படவில்லை. இதனிடையே, குரூப் 4 தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என ட்விட்டரில் தேர்வர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர்.
ட்விட்டர் தளத்தில் #WeWantGroup4Results என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்ரெண்ட் ஆனது. இதுதொடர்பான மீம்ஸ்களும் இணையத்தில் வைரலானது. தற்போது, குரூப் 4 தேர்வு முடிவுகள் தொடர்பாக சமூக வலைதளத்தில் டிரெண்டிங் ஆன நிலையில் டி.என்.பி.எஸ்.சி. விளக்கம் அளித்திருந்தது. அதில், கடந்த 5 ஆண்டுகளை காட்டிலும் இந்த முறை தேர்வர்களின் எண்ணிக்கை அதிகம். OMR விடைத்தாள்களின் எண்ணிக்கை 36 லட்சத்துக்கும் கூடுதலாக உள்ளது. பிழைகளை கணினி மூலம் அடையாளம் காண நேரடி அலுவலர் மூலம் உறுதி செய்ய அவகாசம் தேவை.
எவ்வித தவறுகளும் இடம்தராமல் குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியாகும் என தெரிவித்திருந்தது. இந்நிலையில் குரூப் 4 தேர்வுக்கான முடிவுகள் இம்மாத இறுதியில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகள் தொடர்பான பணிகள் தற்போது தேர்வாணையத்தின் துரிதமாக நடைபெற்று வருவதாக டி.என்.பி.எஸ்.சி. தெரிவித்துள்ளது. குரூப் - 4 தேர்வுக்கு 22,09,942 விண்ணப்பங்கள் பெறப்பட்டு, அதில் 18,36,535 விண்ணப்பதாரர்கள் தேர்வில் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment