குடியரசு தின சிறப்பு வாழ்த்துக்கவிதை - ஆசிரியர் திரு. சீனி.தனஞ்செழியன் - ஆசிரியர் மலர்

Latest

 




 


26/01/2023

குடியரசு தின சிறப்பு வாழ்த்துக்கவிதை - ஆசிரியர் திரு. சீனி.தனஞ்செழியன்

 H-0zjcpisQodm0-2xUKp-erXCf6vvGJYtUvuLNoVRZ_AXOrLR-wkJMfQqwIdPo0YhxsiJmIFduRbd6ei2SHYr4lJD0789yh2kKOaliHO2kPCbyj7jx11iUGpUD_CrA%253Dw300-h300


குடியரசில் குதூகலிப்போம்

எங்கள் நாடு
பூமியின் பூக்காடு
எங்கள் ரத்தநாளங்களில் புடைத்து நிற்கிறது தாயகப்பற்று
முன்னோர்களின் தியாகத்தில்
அளப்பறிய வீரத்தில்
அவர்களின் உதிரத்தில்
உயரக்கண்டோம் தேசியக்கொடி

இங்குதான்
திருநீறும் சிலுவையும் கைக்கோர்க்கும்
பசுமையும் காவியும்
பகைமை துறக்கும்
சம்மதமாய் எம்மதமும் 
ஏற்கும் எந்நாடு 
பொன்விளையும் புகழோடு

குண்டு வெடிக்குமோ என 
குமுறல் இல்லை
துப்பாக்கி தாக்கிடும் 
துயரங்கள் இல்லை
பதுங்கு குழி வாழ்க்கையில்லை
பயமே வாழ்வாய் ஆனதில்லை

யாவரும் பேசலாம்
தவறென்றால் யாவரையும் பேசலாம்
அனைவர்க்கும் உண்டிங்கு உரிமை
அதுவே எம் தாயகத்துப் பெருமை

நாங்கள் வெள்ளையையே வெறுத்தொதுக்கிய கறுப்பழகர்கள்
நிறபேதங்களால் மட்டுமல்ல
பிறபேதங்களாலும்
எங்களைப் பிளவுபடுத்த முடியாது
எங்கள் ஒற்றுமைச்சங்கிலி நீசபுத்திக்கயவர்களால் ஒருபோதும் உடையாது

இன மொழி மதம் கடந்த 
மகத்துவ மனிதர்கள் நாங்கள்
இந்தியா தானெங்கள் சுவாசம்
உலகே எங்கள் பெருமை பேசும்

தாயினும் மேலாய்
உணர்விலும் உளத்திலும் நிறைந்திருக்கிறது எங்களுக்கு தேசப்பற்று
உலகம் உய்யட்டும் எங்களைக் கற்று

கயமைகள் விலக 
நன்மைகள் பெருக
அமையட்டும் இக்குடியரசு
வறுமை நீங்கி வளமை நிரம்பக் கொட்டட்டும் வெற்றிமுரசு


சீனி.தனஞ்செழியன்,
முதுகலைத்தமிழாசிரியர்,
அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,
திருவலம்-632515,
வேலூர் மாவட்டம்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459