அரசு பள்ளி மாணவர்களின் கலைத்திறன்களை வெளிக்கொண்டு வருவதற்காக வரும் 23-ம் தேதி முதல் கலைத் திருவிழா நடத்தப்படுகிறது. அடுத்தாண்டு ஜனவரியில் நடைபெறும் மாநில அளவிலான போட்டிகளில் வெற்றிபெறும் மாணவர்கள் வெளிநாடு சுற்றுலா அழைத்துச் செல்லப்படவுள்ளனர்.
இதுகுறித்து ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாநில திட்ட இயக்குனர் இரா.சுதன் முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: "மாணவர்களின் கலைத் திறன்களை வெளிக்கொண்டு வர அரசு பள்ளிகளில் பயிலும் லட்சக்கணக்கான மாணவர்கள் பயன்பெறும் வகையில் பள்ளி, வட்டாரம், மாவட்டம் மற்றும் மாநில அளவில் கலைத் திருவிழா நடத்தப்படும்" என்று சட்டப்பேரவையில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிவித்தார்.
தமிழகத்தில் உள்ள பல்வேறு கலை வடிவங்களை அறிமுகப்படுத்தி, மாணவர்களின் கலைத் திறன்களை வெளிக்கொண்டு வர பள்ளிக் கல்வி செயல்பாடுகளின் ஒரு பகுதியாக கலை பண்பாட்டு கொண்டாட்டங்களை ஒருங்கிணைப்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும். இத்திட்டத்தின் மூலம் அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 9 வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு கலை சார்ந்த பயிற்சிகளும், 6 முதல் 12 வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு கலைத் திருவிழா போட்டிகளும் நடத்தப்பட உள்ளது.
கலை, பண்பாட்டை ஒருங்கிணைத்தல்: கலை என்பது குழந்தைகள் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்துவதற்கும், சாத்தியமானவற்றை ஆராய்ந்து கற்றுக் கொள்வதற்குமான இடம் ஆகும். கலைச் செயல்பாடுகள், குழந்தைகளின் பிற கற்றல் செயல்முறைகளில் மிகவும் சுறுசுறுப்புடனும் ஆழமாகவும் ஈடுபட உதவுகிறது. இவை குழந்தைகளின் முடிவெடுக்கும் திறனை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல் அவர்களை தன்னம்பிக்கை கொண்டவர்களாக மாற்றுகிறது. மேலும் அவர்களுக்கு பிடித்த கலையை கற்றுக் கொள்வதால், அவர்களைச் சுற்றியுள்ள உலகத்தைப் பற்றிய ஆழமான புரிதலை ஏற்படுத்துகிறது. இதனை முன்னிறுத்தி இவ்வாண்டு 6 முதல் 12-ம் வகுப்பு மாணவர்கள் பங்கேற்கும் கலைத்திருவிழா நடத்தப்பட உள்ளது.
இக்கலைத் திருவிழா பல்வேறுகலை வடிவங்களுக்கு ஊக்கமளிப்பதற்கும், உள்ளூர் கலைஞர்கள் பங்கேற்பதற்கும் வாய்ப்புகளை உருவாக்கும். தமிழகத்தின் பாரம்பரிய கலை வடிவங்கள் மற்றும் பண்பாடு குறித்து மாணவர்கள் அறிந்து கொள்ள இச்செயல்பாடுகள் வழிவகுக்கும்.
கலைத் திருவிழா: முதல் பிரிவு 6 முதல் 8-ம் வகுப்பு வரை, இரண்டாவது பிரிவு 9 மற்றும் 10-ம் வகுப்பு, மூன்றாவது பிரிவு 11 மற்றும் 12-ம் வகுப்பு பள்ளி அளவில் போட்டிகள் நடைபெறும். இப்போட்டிகளில் வெற்றிபெறும் மாணவர்களை வட்டார அளவிலும், வட்டார அளவில் வெற்றி பெறும் மாணவர்களை மாவட்ட அளவிலும், மாவட்ட அளவில் வெற்றி பெறும் மாணவர்கள் மாநில அளவில் நடைபெறும் போட்டிகளிலும் பங்கேற்கச் செய்ய வேண்டும். மாநில அளவிலான கலைத் திருவிழாவின் இறுதி போட்டிகள் வரும் ஜனவரி மாதம் நடத்தப்பட்டு, வெற்றி பெறும் மாணவர்களுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் மற்றும் ‘கலையரசன்’, ‘கலையரசி’ என்ற விருதுகளும் அரசு சார்பில் வழங்கப்பட்டு மாணவர்களின் கலைத்திறன்கள் ஊக்கப்படுத்தப்படும். மாநில அளவில் வெற்றி பெறும் மாணவர்களில் தர வரிசையில் முதன்மை பெறும் 20 மாணவர்கள் வெளிநாடுகளுக்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவர்.
போட்டி நடைபெறும் நாட்கள்: கலைத் திருவிழா போட்டிகள் பள்ளி அளவில் நவ. 23 முதல் 28-ம் தேதிக்குள்ளும், வட்டார அளவில் நவ.29 முதல் டிச.5 தேதிக்குள்ளும், மாவட்ட அளவில் டிச. 6 முதல் டிச.10 தேதிக்குள்ளும், மாநில அளவில் 2023-ம் ஆண்டு ஜன.3 முதல் 9-ம் தேதிக்குள்ளும் நடத்தி முடிக்க வேண்டும். அனைத்து வகை அரசு பள்ளிகளிலும் கலைத்திருவிழா போட்டிகளில் பெருமளவு மாணவர்களின் பங்கேற்பினை தலைமை ஆசிரியர்களும், ஆய்வு அலுவலர்களும் உறுதிப்படுத்த வேண்டும். பள்ளியின் EMIS செயலி வழியாக ஒவ்வொரு போட்டியில் பங்கு பெறும் மாணவரின் விவரங்களை போட்டி வாரியாக பள்ளி அளவில் பதிவு செய்ய வேண்டும். போட்டிகள் முடிந்த பிறகு தேர்வான, வெற்றி பெற்ற மாணவ, மாணவியரின் பெயரை பதிவு செய்ய வேண்டும்.
இந்த மாணவரின் பெயர் அடுத்த நிலைப் போட்டிக்கு வட்டார அளவில் பார்வையிட இயலும், வட்டார அளவிலும் தேர்வான, வெற்றி பெற்ற மாணவ மாணவியரின் பெயரை இவ்வாறு அந்த நிலையில் உள்ள பொறுப்பு அலுவலர் EMIS-ல் உள்ளீடு செய்ய வேண்டும் . மாவட்ட அளவில் போட்டிகள் நடத்தப்பட்டு போட்டி வாரியாக தேர்வான மாணவ, மாணவியரின் பெயரும் முதன்மை கல்வி அலுவலரின் EMIS Login வழியாக உள்ளீடு செய்யப்பட வேண்டும். இந்த மாணவரின் பெயர்களே மாநில அளவிலான போட்டிக்கு எடுத்துக் கொள்ளப்படும். இதற்கான செயல்முறை விளக்க காணொளி TNSED youtube சேனலில் விரைவில் வெளியிடப்படும்.
No comments:
Post a Comment