பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்தக்கோரி நவம்பர்15 ல் சென்னையில் ஆர்ப்பாட்டம் :ஆசிரியர் கூட்டணி அறிவிப்பு - ஆசிரியர் மலர்

Latest

09/10/2022

பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்தக்கோரி நவம்பர்15 ல் சென்னையில் ஆர்ப்பாட்டம் :ஆசிரியர் கூட்டணி அறிவிப்பு


 பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். 

அங்கன்வாடி மழலையர் வகுப்புகள் மற்றும் தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் மலிவு ஊதியத்தில் ஒப்பந்த ஆசிரியர்கள் நியமனம் செய்வதை கைவிட வேண்டும். மத்திய அரசு வழங்கியுள்ள

4சதவீத அகவிலைப்படி உயர்வினை தமிழக அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டும். 

20 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சென்னையில் நவ 15ந்தேதி ஆர்ப்பாட்டம்.  திமுக தலைவராக இரண்டாவது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ள மாண்புமிகு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு  வாழ்த்து 



தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில செயற்குழு கூட்டம் நாகை வி.பி.என் திருமண அரங்கில் நடைபெற்றது. இந்த கூட்டங்களுக்கு மாநிலத் தலைவர் மு.லெட்சுமிநாராயணன் தலைமை வகித்தார். தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுச்செயலாளரும், அகில இந்திய ஆசிரியர் கூட்டணியின் இணைப் பொதுச்செயலாளருமான ந.ரெங்கராஜன் கூட்டத்தின் நோக்கங்கள் குறித்தும், கூட்ட அஜெண்டா குறித்தும் முன்மொழிந்து பேசினார். 

கூட்டத்தில் மாநிலப்பொருளாளர் இரா.குமார், ஓய்வு பிரிவின் பொதுச்செயலாளர் இரா.ஆறுமுகம், முன்னாள் மாநிலத் தலைவர் அ.சுதாகரன், முன்னாள் மாநிலப் பொருளாளர் வில்சன்பெர்னபாஸ் மற்றும் மாநில துணைத்தலைவர்கள், மாநில துணைச் செயலாளர்கள், மாவட்டச் செயலாளர்கள், மாநில செயற்குழு உறுப்பினர்கள் என 34 மாவட்டங்களை சேர்ந்த 64 பேர் கலந்துகொண்டு முன்மொழியப்பட்ட அஜெண்டா குறித்து விளக்கமாக பேசினார். 

கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. நாடு முழுவதும் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ராஜஸ்தான், சட்டீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களில் பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் ரத்து செய்யப்பட்டு பழைய ஓய்வூதியம் தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அது போல் தமிழகத்திலும் மாநில அரசு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 

ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்களுக்கான ஊதிய குழு அறிக்கையினை நாடு முழுவதும் ஒரே மாதிரியாக அமல்படுத்துவதற்கான நிதிகளை மாநில அரசுகளுக்கு ஒதுக்கீடு செய்ய மத்திய அரசு உறுதி அளிக்க வேண்டும். இடைநிலை  ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளை களைவதுடன், அதனால்  ஏற்பட்டுள்ள ஊதிய இழப்பினை சரிசெய்து, சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும். தமிழகத்தில் கல்விப்பணியை சீரழித்துவரும் எமிஸ் திட்டத்தை முற்றிலுமாக கைவிட வேண்டும். ஆசிரியர்கள் இடையூறு இன்றி கற்பித்தல் பணியை மேற்கொள்ளும் வகையில், பிற பணிகள் வழங்குவதை முற்றிலுமாக நிறுத்த வேண்டும். 

தமிழகத்தில் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் செயல்பட்டு வரும் மழலையர் வகுப்புகளுக்கு ரூ 5ஆயிரம் ஊதியத்தில் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்ற உத்தரவினை திரும்ப பெற்று அப்பணியிடங்களுக்கு மழலையர் கற்பித்தல் பயிற்சி பெற்ற சிறப்பு ஆசிரியர்களை நியமனம் செய்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் மாதம் ரூ 7,500 மற்றும் ரூ10 ஆயிரம் மலிவு விலை ஊதியம் என்ற அடிப்படையில் ஒப்பந்த ஆசிரியர்கள் நியமனம் செய்வதை கைவிட்டு, நிரந்தர பணியாளர்களாக ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட வேண்டும்.  


அரசு பள்ளிகளில் படித்த மாணவ, மாணவிகளுக்கு உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வழங்கப்படும் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டினை, அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் ஏழை, எளிய மாணவர்களும் பயன்பெறும் வகையில் விரிவுபடுத்த வேண்டும். உயர்கல்வி படித்தவர்களுக்கு ஊக்க ஊதியம் வழங்க வேண்டும். தற்போது மத்திய அரசு அறிவித்துள்ள 4 சதவீத அகவிலைப்படி உயர்வு, முந்தைய அகவிலைப்படி நிலுவைத் தொகை, ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு ஆகியவைகள் உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி அகில இந்திய ஆசிரியர் கூட்டணி அறிவிப்பின்படி, தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் சென்னையில் நவம்பர் 15ஆம் தேதி  மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். 

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ஏற்கனவே கடந்த செப்டம்பர் 20ஆம் தேதி மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட மூன்று கட்ட போராட்டங்களை சிறப்புடன் நடத்திய மாவட்ட கிளைகளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. எழுச்சியுடன் நடைபெற்ற போராட்டத்தின் விளைவாக கோரிக்கைகளை கவனமுடன் பரிசளித்து தீர்வுகளுக்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக,  தமிழக அரசிடம் இருந்து மாநில அமைப்பிற்கு கடிதம் வந்துள்ள தகவலை மாநில செயற்குழு உறுப்பினர்களின் பலத்த கரவொலிக்கிடையில் பொதுச்செயலாளர் தெரிவித்தார். நவம்பர் 15 ஆம் தேதி சென்னையில் நடைபெறும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து 5வது கட்டமாக  ஜனவரி மாதம் டெல்லியில் நாடு முழுவதும் உள்ள ஆசிரியர்களை ஒருங்கிணைத்து மாபெரும் போராட்டம் நடத்தப்பட உள்ளது. இயக்க செம்மல் விருதினை இயக்க முன்னோடி செயல் வீரர்கள் வேலூர் சத்தியானந்தன், தேனி சேரன், கள்ளக்குறிச்சி தண்டபாணி ஆகியோருக்கு வழங்குவது என ஏக மனதாக முடிவு செய்யப்பட்டது.


மாவட்டம் தோறும் மகளிர் வளையமைப்பு சார்பில் மகளிர் பயிற்சி பட்டறை நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. மாநில அளவிலான மகளிர் வலையமைப்பின் தலைவராக விருதுநகர் ரமாதேவி அவர்களும், துணைத் தலைவராக திருவாரூர் மாவட்டத்தின் பிரதிநிதி ஒருவர், தொடர்பு பணி தலைவராக சென்னை மாநகராட்சி சேர்ந்த ஒருவர், தொடர்பு பணி துணைத் தலைவராக சிவகங்கை மாவட்டம் ஜெயலட்சுமி, மாநில பயிற்சியாளர்களாக நாகை விமலா மற்றும் இருவர் ஆகியோர்களை நியமிப்பது என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. உலகத் தமிழாசிரியர் மாநாட்டின் ஒருங்கிணைப்பு குழு ராணிப்பேட்டை மாவட்டச் செயலாளர் மோகன் நியமனம் செய்யப்பட்டார். திமுகவின் தலைவராக இரண்டாவது முறையாக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு கூட்டத்தில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459