குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் பரிந்துரைப்படி பள்ளிகளில் தொடர்ந்து தவறு செய்யும் மாணவர்களுக்கு நூதன தண்டனை; பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல் - ஆசிரியர் மலர்

Latest

08/08/2022

குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் பரிந்துரைப்படி பள்ளிகளில் தொடர்ந்து தவறு செய்யும் மாணவர்களுக்கு நூதன தண்டனை; பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல்

 அரசுப்பள்ளிகளில் தொடர்ந்து தவறு செய்யும் மாணவர்களுக்கு, குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் பரிந்துரைத்தபடி நூதன தண்டனைகள் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா ஊரடங்கிற்கு பிறகு அரசுப்பள்ளி மாணவர்களின் நடத்தையில் பல்வேறு எதிர்மறை மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. கற்றல் நடவடிக்கைகளில் இருந்து திசை திருப்பப்பட்டு, தவறான நடத்தை மற்றும் குறும்பு செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். மாணவர் எண்ணிக்கை அதிகரித்ததால், ஆசிரியர்கள் முழுமையாக கவனிக்க முடியாத சூழல் உள்ளது. அதேசமயம் மாணவர்களிடம் கோபம், வன்முறை மற்றும் கவனம் ஈர்க்கும் முறைகள் அதிகமாக காணப்படுகின்றன. பள்ளி மற்றும் பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவிப்பதுடன், ஆசிரியர்கள் அவமரியாதையாக நடத்தப்படுகின்றனர். இதுபோன்ற மாணவர்களை கவனமுடன் கையாள வேண்டும் என தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் பல்வேறு பரிந்துரைகளை வழங்கியுள்ளது.


அதன்படி, தொடர்ந்து தவறான செயல்களில் ஈடுபடும் மாணவர்களுக்கு, நூதன தண்டனை அளிக்க பள்ளிக்கல்வி இணை இயக்குநர் அறிவுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அனைத்து மாவட்ட சிஇஓக்களுக்கும் அனுப்பியுள்ள உத்தரவில், `பள்ளி மாணவர்கள் கற்றல் குறைபாடு உள்ள குழந்தையாக இருந்தால், சிறப்பு கல்வியாளரிடம் அனுப்பி குழந்தைக்கு உதவி செய்யலாம். தற்போதுள்ள குழந்தைகள் ஆசிரியர்களை அவமதித்தல், பொது இடங்களில் இடையூறு ஏற்படுத்துதல், சக மாணவர்களை ராகிங் செய்து அடித்தல், போதை பொருட்களை பயன்படுத்துதல், வகுப்பு நேரங்களில் வீடியோ ரீல்களை உருவாக்குதல், பள்ளி சுவர்களில் தவறான வார்த்தை, படங்களை எழுதுதல் போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதுபோன்ற நேர்வுகளில் முதலில் பள்ளி ஆலோசகர் ஆலோசனைகளை வழங்க வேண்டும்.

அதே மாணவர் தொடர்ந்து தவறு செய்தால், திருக்குறளை படித்து பொருளுடன் எழுதுதல், நீதிக்கதை கூறுதல், செய்தி துணுக்குகளை படித்தல், வரலாற்று தலைவர்களை பற்றி எடுத்துரைத்தல், நல்ல பழக்க வழக்கங்கள், பாதுகாப்பு மற்றும் முதலுதவி, 1098 பற்றிய விழிப்புணர்வு வரைபடம் வரைதல், காய்கறி தோட்டம் அமைத்தல், கைவினை பொருட்கள் செய்தல் உள்ளிட்ட ஒழுங்குமுறை நுட்பங்களை ஆசிரியர்கள் கையாளலாம். அதன் பின்னரும் தவறு செய்யும் பட்சத்தில் குழந்தை நேய காவல் அதிகாரி மூலம் அறிவுரை மற்றும் ஆலோசனை வழங்கவும், தொடர்ந்து அருகில் உள்ள வேறு அரசுப்பள்ளிக்கு மாற்றம் செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’என இணை இயக்குநர் அறிவுறுத்தியுள்ளார்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459