இந்தியா - இங்கிலாந்து 75 ஆண்டு கால உறவு கொண்டாட்டம்... இந்திய மாணவர்களுக்கு உதவித்தொகை அறிவிப்பு! - ஆசிரியர் மலர்

Latest

01/07/2022

இந்தியா - இங்கிலாந்து 75 ஆண்டு கால உறவு கொண்டாட்டம்... இந்திய மாணவர்களுக்கு உதவித்தொகை அறிவிப்பு!


லண்டன்: இந்தியா - இங்கிலாந்து இடையிலான 75 ஆண்டுகால உறவை கொண்டாடும் வகையில், செப்டம்பர் மாதம் முதல் இங்கிலாந்தில் படிக்கும் இந்திய மாணவர்களுக்கு 75 சதவிதம் உதவித்தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இந்திய குளோபல் ஃபோரம் சார்பாக இந்தியா - இங்கிலாந்து நாடுகளின் இடையிலான உறவை கொண்டாடும் வகையில் ஆண்டுதோறும் இங்கிலாந்து - இந்தியா வாரம் ஏற்பாடு செய்யப்படுகிறது. 2022ஆம் ஆண்டு ஜூன் 27 முதல் ஜூலை 1 வரை நடைபெறும் இந்தக் கொண்டாட்டத்தின் மூன்றாம் நாளில், சுற்றுச்சூழல் குறித்த முதற்கட்ட நடவடிக்கை, புவிசார் அரசியல், டிஜிட்டல் பொருளாதாரம் மற்றும் சமூகத் தாக்கத்தை ஏற்படுத்தும் முதலீடுகள் ஆகியவை குறித்து பேசப்பட்டது.அதுமட்டுமல்லாமல், இங்கிலாந்து - இந்தியா இடையிலான 75 ஆண்டு கால உறவை கொண்டாடும் வகையில், வரும் செப்டம்பர் மாதம் முதல் இந்திய மாணவர்களுக்கு இங்கிலாந்தில் படிக்க 75 சதவிகிதம் உதவித்தொகைகளை இங்கிலாந்து அரசு அறிவித்துள்ளது .இதனைத்தொடர்ந்து இந்தியாவுக்கான இங்கிலாந்து தூதர் அலெக்ஸ் எல்லிஸ் பேசுகையில், இந்தியாவின் 75வது சுதந்திர ஆண்டில் இது ஒரு சிறந்த மைல்கல். தொழில்துறையில் நமது நண்பர்களின் ஆதரவிற்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இங்கிலாந்தின் சிறந்த அனுபவத்தை அனுபவிக்க இந்திய மாணவர்களுக்கு 75 உதவித்தொகைகளை அறிவிப்பதன் மூலம் மகிழ்ச்சியடைகிறேன். இந்த உதவித்தொகைகளை பெறும் இந்தியர்களில் 30 சதவிகித பேர், முதல் தலைமுறை பட்டதாரிகள் என்பதோடு சிறிய நகரங்களில் இருந்து வந்தவர்கள்.இந்த ஸ்லார்ஷிப் மூலம் இங்கிலாந்தில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் எந்தவொரு பாடத்தையும் படிக்கும் வாய்ப்பு உள்ளது. இந்தியாவில் உள்ள பிரிட்டிஷ் கவுன்சில் பெண்களுக்கு அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் ஆகியவற்றில் 18 உதவித்தொகைகள் வழங்குகிறது என்று தெரிவித்தார். தொடர்ந்து ஆக்செல் நிறுவனத்தின் இணை உரிமையாளர் பிரசாந்த் பிரகாஷ் பேசுகையில், ஒரு நாடாக, கடந்த 2 முதல் 3 ஆண்டுகளில் ஒரே நாளைக்கு ஒரு பில்லியன் பரிவர்த்தனைகளைச் செய்கிறோம். இந்தியாவில் பூஜ்ஜியத்தில் இருந்து தொடங்கிய இந்தப் பயணம், இது ஒரு வியத்தகு மாற்றம். இந்தியாவில் தலைமுறைக் கடந்து செயல்படும் நிறுவனங்களை உருவாக்க இன்னும் ஏராளமான வேலைகள் செய்ய வேண்டிய தேவை உள்ளது. தற்போதைய பொருளாதார சூழலில், சில நிறுவனங்களை உருவாக்க முடியும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.தொடர்ந்து இங்கிலாந்து அரசின் வெளியுறவுத்துறை முன்னாள் செயலாளர் சர் மால்கம் உடன் இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் கொள்கை ஆலோசகர் அசோக் மாலிக் உரையாடல் நடத்தினார். அதில், இங்கிலாந்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வரும் வர்த்தக ஒப்பந்தம் சில சர்வதேச நெருக்கடிகளை சமாளிக்க உதவும். இங்கிலாந்திடம் நிபுணத்துவம் உள்ளது. இந்தியாவிடம் சந்தை உள்ளது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பினால் இரு நாடுகளுன் நிறைய விஷயங்களை பரிமாறிக் கொள்ள முடியும் என்று பேசினர். தொடர்ந்து, சமூக மற்றும் பொருளாதார தாக்கத்திற்கான டிஜிட்டல் பயன்பாடு மற்றும் இந்தியாவில் முதலீடு மற்றும் ஏற்றுமதி போன்ற பல்வேறு அம்சங்கள் குறித்து பிரபல தொழில்துறை தலைவர்கள் பார்வையாளர்களிடம் உரையாற்றினர்.அதில் ஓலா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பவிஷ் அகர்வால் மற்றும் இந்தியாவிற்கான இங்கிலாந்து தூதர் அலெக்ஸ் எல்லிஸ் முக்கியமாக பார்க்கப்பட்டது. தொடர்ந்து காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினரும் எழுத்தாளருமான சசி தரூர், பரோனஸ் உஷா பிரஷர், காமன்வெல்த் எண்டர்பிரைஸ் &; இன்வெஸ்ட்மென்ட் கவுன்சில் தலைவர் லார்ட் ஜொனாதன் மார்லாண்ட் ஆகியோருடன் கிரேட் பிரிட்டனின் புதிய சிந்தனைகள் குறித்த விவாதத்துடன் கருத்தரங்கு முடிவடைந்தது.இறுதியாக இந்திய கொளோபல் ஃபோருமின் தலைமை நிர்வாக அதிகாரி பேராசிரியர் மனோஜ் லட்வா பேசுகையில், நமது இருபெரும் நாடுகளுக்கு இடையிலான எதிர்கால உறவுகளை, மீண்டும் புத்துணர்வு செய்வதற்கான சிறந்த தளத்தை இந்த தருணம் வழங்கியுள்ளது. இந்த அமைப்பு இங்கிலாந்து - இந்தியா உரையாடலைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லும். புவிசார் அரசியல் சூழல்கள் மற்றும் பொருளாதாரம் பிரச்னை ஏற்படும் போது இங்கிலாந்து-இந்தியா இடையே ஒரு வலுவான உறவு இன்றியமையாதது என்று தெரிவித்தார்.-

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459