அரசு பள்ளிகளில் பணிபுரிந்து வரும் ஆசிரியர்கள் விடுப்பு அனுமதிக்கு செல்போன் ஆப் அறிமுகம்: பணிப்பலன்களை விரைந்து பெற ஏற்பாடு - ஆசிரியர் மலர்

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459

 

15/06/2022

அரசு பள்ளிகளில் பணிபுரிந்து வரும் ஆசிரியர்கள் விடுப்பு அனுமதிக்கு செல்போன் ஆப் அறிமுகம்: பணிப்பலன்களை விரைந்து பெற ஏற்பாடு

தமிழகத்தில் அரசு பள்ளிகளின் மேம்பாட்டிற்காக பல்வேறு தொழில்நுட்ப மேம்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஏற்கனவே, ஆசிரியர், மாணவர் தொடர்புடைய விவரங்களை எளிதாக பெற, எமிஸ் இணையதளம் நடை முறையில் உள்ளது. இதனிடையே, ஆசிரியர்களுக்கான விடுப்பு அனுமதி உள்ளிட்ட பணி பலன்களுக்காக, ஒவ்வொரு முறையும் சம்பந்தப்பட்ட மாவட்ட மற்றும் பள்ளிகளின் உயர் அலுவலர்களிடம் சென்று நேரடியாக விண்ணப்பிக்க வேண்டி இருந்தது.


இதனால் வீண் கால விரயம் ஏற்படுவதுடன், பல்வேறு சிக்கல்கள் இருந்து வந்தன. இதனையடுத்து இந்த நடைமுறையை எளிமைப்படுத்த வேண்டும் என ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்தனர். அதன் அடிப்படையில், அரசுப்பள்ளி ஆசிரியர்களின் விடுமுறை மற்றும் பணிப்பலன்களை விரைந்து பெறும் வகையில், செல்போன் ஆப் அறிமுகம் செய்யப்பட்டு, நடப்பு கல்வியாண்டு முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, பள்ளிக்கல்வி ஆணையர் நந்தகுமார், அனைத்து மாவட்ட சிஇஓக்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறையின் கீழ் பணிபுரியும் அரசு, அரசு உதவி பெறும், தொடக்க பள்ளிகள், நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை பள்ளி ஆசிரியர்கள் தற்செயல் விடுப்பு, மருத்துவ விடுப்பு, ஈட்டிய விடுப்பு கோருதல், அனுமதி மற்றும் பிற பணி சார்ந்த தேவைகளுக்கு எழுத்துப்பூர்வமாக தங்கள் உயர் அலுவலர்களிடம் நேரடியாக சென்று விண்ணப்பித்து பயனடைந்து வந்தனர்.

இதுபோன்ற நேரடியாக விண்ணப்பிக்கும் முறையில் ஆசிரியர்களுக்கு பல்வேறு சிரமங்களும், கால விரையமும் ஏற்படுகிறது. எனவே இவ்வாறான சிரமங்கள் மற்றும் கால விரையத்தினை தவிர்க்கும் பொருட்டு, கடந்த மாதம் 25ம் தேதியன்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர், ஆசிரியர்கள் அவர்களது செல்போன் வாயிலாக தற்செயல் விடுப்பு, மருத்துவ விடுப்பு, ஈட்டிய விடுப்பு கோருதல், அனுமதி மற்றும் பிற பணி சார்ந்த தேவைகளுக்கு விண்ணப்பிக்கும் TNSED-Schools என்ற இணைய வழியில் பணிப்பலன்களைப் பெறுவதற்கான ஆப் உருவாக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

நடப்பு 2022-2023ம் கல்வியாண்டிலிருந்து இந்த ஆப் பயன்படுத்தப்படுகிறது. எனவே ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள் அனைவரும் இனிவரும் காலங்களில் இந்த ஆப் மூலம் தங்கள் பணி சார்ந்த தேவைகள், விடுப்புகளுக்கு விண்ணப்பித்து பயன்பெறுமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் அறிவுறுத்த வேண்டும். இவ்வாறு பள்ளிக்கல்வி ஆணையர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment