TNPSC - தமிழ்வழி சான்றிதழ் பெறுவதில் சிக்கல்; குரூப் - 4 தேர்வர்கள் அதிருப்தி! - ஆசிரியர் மலர்

Latest

 




07/04/2022

TNPSC - தமிழ்வழி சான்றிதழ் பெறுவதில் சிக்கல்; குரூப் - 4 தேர்வர்கள் அதிருப்தி!

'குரூப் - 4' பதவியில், அரசு பணி தேர்வுகளுக்கான தமிழ்வழி சான்றிதழ் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால், பள்ளிகளில் சிறப்பு முகாம் நடத்தி சான்றிதழ் வழங்க வேண்டும் என, தேர்வர்கள் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது.
தமிழக அரசு துறைகளில், பல்வேறு பதவிகளில் காலியிடங்களை நிரப்ப 'குரூப் - 4' தேர்வு, ஜூலை 24ல் நடக்கிறது. இந்த தேர்வுக்கு வரும் 28ம் தேதிக்குள் விண்ணப்பங்களை பதிவு செய்ய வேண்டும். இந்த தேர்வில், 10ம் வகுப்பு வரை தமிழ் வழியில் படித்திருந்தால், அதற்கான 20 சதவீத இட ஒதுக்கீடு கிடைக்கும்.

இந்த ஒதுக்கீட்டை பெற, லட்சக்கணக்கானோர் தாங்கள் படித்த பள்ளிகளில், தமிழ் வழி சான்றிதழ் பெற முயற்சித்து வருகின்றனர். தேர்வர்களின் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு சான்றிதழ் அடிப்படையில், பள்ளிகளில் எளிதில் சான்றிதழ் வழங்கப்படுகின்றன. ஆனால், ஒன்று முதல் 5, 8ம் வகுப்பு வரை படித்த பள்ளிகளில், தமிழ் வழி சான்றிதழ் வாங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

தேர்வர்களிடம் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளுக்கான மாற்று சான்றிதழ் இல்லை. மாற்று சான்றிதழ் வைத்திருந்தவர்கள், அதை உயர்நிலைப் பள்ளிகளில் சேரும்போது கொடுத்து விட்டனர். தற்போது, அதன் நகலோ; வேறு தொடர்பு ஆவணங்களோ இல்லாமல் அவதிக்கு ஆளாகி உள்ளனர்.

இதனால், அரசு மற்றும் தனியார் தொடக்க, நடுநிலை பள்ளிகளில், தமிழ் வழி சான்றிதழ் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. சிக்கலுக்கு தீர்வு காண, தமிழ் வழி சான்றிதழ் வழங்கும் நடைமுறையை பள்ளி கல்வித்துறை எளிதாக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.



பள்ளிகளில் உள்ள மாணவர்களின் பழைய ஆவணங்கள், பதிவேடுகள் அடிப்படையிலோ அல்லது பள்ளி அடையாள ஆவணத்தின் நகல் அடிப்படையிலோ, உரிய ஆய்வுகள் செய்து, தமிழ் வழி சான்றிதழ் வழங்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459