மாணவர்களை நல்வழியில் திருத்த வேண்டியது ஆசிரியர்களா? அரசா?? பெற்றோர்களா??? - ஆசிரியர் மலர்

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459

 

24/04/2022

மாணவர்களை நல்வழியில் திருத்த வேண்டியது ஆசிரியர்களா? அரசா?? பெற்றோர்களா???

 ஓர் ஆசிரியராகவும் கவிஞராகவும் இந்தப் பதிவை எழுத வருத்தப்படுகிறேன்.சமீப காலமாக அரசுப்பள்ளிகளில் சில மாணவர்கள், பள்ளி வளாகத்திலும், வகுப்பறைகளிலும்  ஆசிரியர்களிடமும் நடந்து கொள்ளும்விதம் மிகுந்த கவலைக்கு உரியது.  ஆசிரியர்களை மாணவர்கள் இழிவாகப் பேசுகின்ற, தாக்க முனைகின்ற வீடியோக்கள் ஊடகங்களில்  சுற்றுகின்றன. அவை பெரும்பாலும் மாணவர்களால் எடுக்கப்பட்டு அவர்களாலேயே இன்ஸ்டாகிராம் போன்ற பக்கங்களில் பகிரப்படுகின்றன.


 மேலும் பாடம் நடத்தும்போது பெண் ஆசிரியர்களை வீடியோ எடுத்து சமூக வலைத் தளங்களில் பதிவிடுகிறார்கள்.உண்மையில் இவை போன்ற நிகழ்வுகள் தினம்தினம் பள்ளிகளில் நடந்துகொண்டுதான் இருக்கின்றன.அவை வெளியே தெரிவதில்லை. ஆசிரியர்கள் மென்மையாக  அறிவுரைகூறி கடக்க வேண்டிய நிர்பந்தம்.

.

பெண் ஆசிரியர்கள் எப்போதும் ஒரு அச்ச உணர்வுடனோ  ஜாக்கிரதை உணர்வுடனோ பாடம் நடத்த வேண்டியிருக்கிறது. அது எப்படிப்பட்ட மன உளைச்சலுக்கும் மன அழுத்தத்திற்கும் பெண் ஆசிரியர்களை உள்ளாக்குகிறது?


சில கேள்விகள் நமக்கு எழுகின்றன.


1.கொரோனா காலச்சூழல்தான் காரணம் என்றால் தனியார் பள்ளிகளில் பெரும்பாலும் இவைபோன்ற நிகழ்வுகள் நடக்கின்றனவா? நடந்தால் அவை ஏன் வெளியே தெரிவதில்லை?


2.கஞ்சா போன்ற போதைப் பொருட்கள் காரணம் என்றால் அவற்றைத் தடுப்பதற்காக மிகத்தீவிரமாக அரசு நடவடிக்கை எடுக்கிறதா?


3.மாணவர்களிடம் அன்பாகச் சொல்ல வேண்டும், உரையாட வேண்டும் என்று சொல்லும் சமூகத்தின் அறிவுரைகளைப் ஆசிரியர்கள் பின்பற்றிக் கொண்டிருப்பதற்குப்  பின்பும் இப்படி நடந்து கொள்ளும் மாணவர்களை என்ன செய்வது?


4. ஒவ்வொரு பள்ளியிலும் மனநல ஆலோசகர்கள் நியமிக்கப்பட வேண்டும் என ஆசிரியர்களும் கல்வியாளர்களும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.அரசு ஏன் இதில் ஆர்வம் காட்டுவதில்லை?


5.வன்முறையில் ஈடுபடும் மாணவர்களை ஆசிரியர்கள்தான் இரண்டாம் தாயாக இருந்து திருத்த வேண்டும் என்று கல்வி அமைச்சர் இன்று தெரிவித்திருக்கிறார்.இது நடைமுறையில் சாத்தியமா?


6. மாணவர்களின் ஒழுங்கீனச் செயல்களுக்குப் பெற்றோர், சமூகம்,அரசு போன்றவற்றின்  கூட்டுப் பொறுப்பினைப் புறந்தள்ளி, எல்லாவற்றிற்கும் ஆசிரியர்களைப் பொறுப்பாக்குவது சரிதானா?


7.பள்ளிக்கு ஏன் வரவில்லை, ஏன் படிக்கவில்லை, ஏன் சீருடை அணியவில்லை, ஏன் முடிவெட்டவில்லை,ஏன் எழுதவில்லை, ஏன் ரெகார்ட் நோட்டு வைக்கவில்லை, ஏன் தாமதமாக வருகிறாய் என எதையும் மாணவர்களிடம் கேட்காமல், நூறு சதவீத தேர்ச்சியைத் தந்தே ஆகவேண்டும், நூறு சதவீதம் மாணவர்களின் வருகை இருந்தே ஆக வேண்டும் என்று ஆசிரியர்களை கடுமையாக வருத்துவது எதனால்?


8. வகுப்பறையில் ஆசிரியர்களிடமோ, ஆசிரியர் பாடம் நடத்திக் கொண்டிருக்கும்போது ஒழுங்கீனமான செயல்களின் ஈடுபடும் மாணவர்களால் அந்த வகுப்பில் உள்ள மற்ற மாணவர்களின் கற்றலுக்கும் இடையூறு ஏற்படுகிறது. இதை மற்ற மாணவர்களும் அவர்களிடம் கேட்க முடியாது. கேட்டால் அடிப்பார்கள் என்று அமைதியாக இருந்து விடுகிறார்கள். ஆசிரியர்களையும் ஆபாச சொற்களால்  பேசுகின்றனர். இதற்கு சஸ்பெண்ட் செய்வது மட்டும் தீர்வாகுமா?


9'.நாங்கள் சொன்னால் ஜட்ஜே நம்புவார்' என்பதைப்போல நாங்கள் என்ன செய்தாலும் எங்களை ஒன்றும் செய்ய முடியாது என்னும் எண்ணத்தை மாணவர்களிடம் விதைத்தது எது? இதிலிருந்து எப்படி மீட்டெடுப்பது? 


10.அலைபேசியை மாணவர்கள் பள்ளிக்குக் கொண்டுவரக் கூடாது என்றால் அலைபேசியை கொண்டுவரும் மாணவர்களை என்ன செய்வது?ஆசிரியர்கள் மாணவர்களைப் பரிசோதிக்கக் கூடாது, ஏன் கொண்டு வந்தாய் எனக் கேட்கக்கூடாது என  மேலிடத்து அறிவிக்கப்படாத  உத்தரவு. இந்தச் சூழலில் ஆசிரியர்கள் என்ன முடிவு எடுப்பது?


11.மாணவர்களை ஏதாவது கேட்டு, விபரீதமாக ஏதாவது நடந்துவிட்டால் அந்த ஆசிரியரே முழுப் பொறுப்பு. எந்த அதிகாரியும் ஆசிரியர்கள் பக்க  நியாயத்தை உணராதது ஏன்?


12.அரசு மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள, பதினொன்று, பன்னிரண்டாம் வகுப்புகளைப் பிரித்து ,கல்லூரிகளில் இணைத்து ஜூனியர் காலேஜ் என்று ஒன்றை ஏன் கொண்டுவரக் கூடாது?


13.தமிழகத்தில் உள்ள துவக்கப் பள்ளிகள் நடுநிலைப் பள்ளிகளாகவும் நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாகவும்,உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப்பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்படுகின்றன. அப்படி இருந்தும் மாணவர் எண்ணிக்கை ஆயிரத்திற்கும் மேல் இருக்கும் மேல்நிலைப் பள்ளிகளை இரண்டாகப் பிரித்தால் நலமாக இருக்கும். இதை அரசு முன்னெடுக்குமா?


14. ஓர் ஆசிரியருக்கு நாற்பது மாணவர்கள் என்றால்தான் கற்பித்தல் கற்பித்தல் சரியாக நடக்கும்.ஆனால் அரசுப் பள்ளிகளில் சுமார் அறுபது, எழுபது மாணவர்கள் இருக்கிறார்கள்.எனவே 1:40 என்ற விகிதத்தில் கூடுதலாக ஆசிரியர்களை நியமிக்க அரசு நடவடிக்கை எடுக்குமா?


15.இவற்றை  எல்லாம் கருத்தில் கொள்ளாமல், கல்வித் தரத்தை உயர்த்த அரசு கொண்டு வரும் திட்டங்கள் எவையும் சிறப்பான பலன் தரா.


16.கொரோனா காலத்தில் எல்லா மாணவர்களுக்கும்தானே கற்றல் இடைவெளி ஏற்பட்டது? இல்லம்தேடி கல்வி ஏன் எட்டாம் வகுப்புவரை மட்டுமே கொண்டுவரப் பட்டுள்ளது? ஒன்பது முதல் பன்னிரண்டு வகுப்புவரை இதை நீட்டிக்கவில்லை?  


மாணவர்கள் வயது அப்படி. அவர்கள் அப்படித்தான் இருப்பார்கள்.ஆசிரியர்கள்தான் அவர்களைத் திருத்த வேண்டும் என்று சொல்பவர்கள், உங்கள் பிள்ளைகளை அதே அன்புடன் பேசி திருத்த உங்களுக்கும் பொறுப்பு உண்டு என்பதை மறக்க வேண்டாம். 


---- சுகிர்தராணி, 

அரசுப் பள்ளி ஆசிரியை

No comments:

Post a Comment