புதிய ஓய்வூதியத் திட்டம் அவசியமா? ஆண்டுக்கு அரசுக்கு ரூ.3,000 கோடி கூடுதல் செலவு - ASIRIYAR MALAR

Latest

Education News

21/03/2022

புதிய ஓய்வூதியத் திட்டம் அவசியமா? ஆண்டுக்கு அரசுக்கு ரூ.3,000 கோடி கூடுதல் செலவு

புதிய ஓய்வூதியத் திட்டத்தை (சிபிஎஸ்) அமல்படுத்துவதால் தமிழக அரசுக்கு ஆண்டுக்கு ரூ.3,000 கோடி கூடுதல் செலவு ஏற்படும். இதைத் தவிர்க்க மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது. 


தமிழக அரசு ஊழியர்களுக்கு புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் கடந்த 2003-ஆம் ஆண்டு முதல் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தப் புதிய ஓய்வூதியத் திட்டத்தை (சிபிஎஸ்) ரத்து செய்துவிட்டு, மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை அரசு ஊழியர்கள் தரப்பில் சுமார் 20 ஆண்டுகளாக தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. இதனிடையே 2003-க்கு பின் பணியில் சேர்ந்த அரசு ஊழியர்கள் சுமார் 6 லட்சம் பேர் புதிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் இதுவரை இணைக்கப்பட்டுள்ளனர். அதாவது தற்போது அரசுப் பணியிலுள்ள ஊழியர்களில் சுமார் 60 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் சிபிஎஸ் திட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளனர். இதுவரை அரசு ஊழியர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட தொகை மற்றும் அரசின் பங்களிப்புத் தொகை என ரூ.50,000 கோடி சேர்ந்துள்ளதாக தெரியவந்துள்ளது. இத்திட்டத்தின் கீழ் இணைந்த அரசு ஊழியர்களில் சுமார் 24,000 பேர் இதுவரை பணி ஓய்வு பெற்றும், உயிரிழந்தும் உள்ளனர்.  ஆனால் இவர்களுக்கான ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம், பணிக்கொடை உள்ளிட்ட பணப் பலன்கள் இதுவரை வழங்கப்படவில்லை என்பதே அரசு ஊழியர்கள் மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தக் கோரி போராடுவதற்கு முக்கியக் காரணம். ராஜஸ்தான், சத்தீஸ்கரில் சிபிஎஸ் ரத்து: இந்தியாவில் மேற்குவங்கம் நீங்கலாக பிற மாநிலங்களில் புதிய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்பட்டு வந்தது. ஆனால், தமிழகத்தில் பழைய ஓய்வூதியத் திட்டம், புதிய ஓய்வூதியத் திட்டம் என எந்தவொரு இறுதி முடிவும் இதுவரை எடுக்கப்படவில்லை. இதனிடையே காங்கிரஸ் ஆட்சிப் பொறுப்பிலுள்ள ராஜஸ்தான் மாநிலத்தில் மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வரும் மற்றொரு மாநிலமான சத்தீஸ்கரிலும் புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம் கொண்டு வரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற சூழலில், தமிழகத்திலும் மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும் என்ற எதிர்பார்ப்பில் அரசு ஊழியர்கள் உள்ளனர். திமுக ஆட்சிப் பொறுப்புக்கு வந்தால் மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம் கொண்டுவரப்படும் என தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. திமுக ஆட்சி அமைந்து விரைவில் 2-ஆம் ஆண்டு தொடங்கவுள்ள நிலையில், 2022-23-ஆம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கைக்கான சட்டப்பேரவை கூட்டத் தொடரின்போது சிபிஎஸ் ஒழிப்புக்கான அறிவிப்பை முதல்வர் வெளியிட வேண்டும் என பல்வேறு சங்கங்களும் கோரிக்கை விடுத்து வருகின்றன. புதிய ஓய்வூதியத் திட்டத்தால் கூடுதல் செலவு: தமிழகம் புதிய ஓய்வூதியத் திட்டத்தில் (சிபிஎஸ்) இணையாமலும், பழைய ஓய்வூதியத் திட்டத்தை தொடராமலும் உள்ளது. சிபிஎஸ் திட்டத்தில் இணைந்தால், தில்லியிலுள்ள ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று மற்றும் மேம்பாட்டு ஆணையத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தி, ஊழியர்களிடம் பிடித்தம் செய்த தொகையுடன், அரசின் பங்களிப்பு நிதியையும் செலுத்த வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும்.  நிதி நெருக்கடி ஒருபுறம் அச்சுறுத்தி வரும் நிலையில், புதிய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தினால் தமிழக அரசுக்கு ஆண்டுக்கு ரூ.3,000 கோடி கூடுதல் செலவு ஏற்படும் எனக் கூறப்படுகிறது. அதாவது சிபிஎஸ் திட்டத்தில் அரசு ஊழியரிடம் ரூ.1000 பிடித்தம் செய்தால், அரசின் பங்களிப்பாகவும் ரூ.1000 செலுத்த வேண்டும். அதே நேரத்தில் பழைய ஓய்வூதியத் திட்டத்தில், அரசு பங்களிப்பு நிதியாக எவ்வித தொகையையும் செலுத்த வேண்டியதில்லை. மேலும், 33 ஆண்டுகள் பணிபுரிந்தால் மட்டுமே முழு ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும். குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் பணிபுரிந்தால் மட்டுமே ஓய்வூதியப் பலன்களைப் பெற முடியும் என்ற விதிமுறை உள்ளது. இது அரசுக்கு சாதகமான அம்சமாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக சிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் பி.பிரெடரிக் ஏங்கல்ஸ் கூறியதாவது: 

ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களில் தேர்தல் வாக்குறுதியாக அளிக்கப்படாத போதிலும், சிபிஎஸ் திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அரசு ஊழியர்கள் ஓய்வுக்குப் பின் பல்வேறு நெருக்கடிகளை சந்திப்பது ஒருபுறம் இருந்தாலும், அரசுத் தரப்பில் கூடுதல் செலவுகளை தவிர்க்கும் வகையிலேயே அந்த மாநில அரசுகள் சிபிஎஸ் திட்டத்தை ரத்து செய்துவிட்டு மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு மாறியுள்ளன. தமிழகத்தைப் பொருத்தவரை 2016 சட்டப்பேரவைத் தேர்தல், 2019 மக்களவைத் தேர்தல், 2021 சட்டப்பேரவைத் தேர்தல் என 3 தேர்தல்களில் மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும் என்பது திமுக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதியாக அளிக்கப்பட்டது. கூடுதல் செலவைத் தவிர்க்கும் வகையிலும், தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையிலும், தமிழகத்தில் மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459