தமிழகத்தில் பள்ளிகளில் நேரடி வகுப்புக்கு தடைகோரிய வழக்கு விசாரணையின் விபரம்! - ஆசிரியர் மலர்

Latest

23/10/2021

தமிழகத்தில் பள்ளிகளில் நேரடி வகுப்புக்கு தடைகோரிய வழக்கு விசாரணையின் விபரம்!

 729193

 தமிழகத்தில் மாணவர்கள் மகிழ்ச்சியுடன் பள்ளிக்குச் செல்கின்றனர். இதனால் நேரடி வகுப்புகளுக்குத் தடை விதிக்கக் கூடாது என உயர் நீதிமன்றத்தில் அரசு தெரிவித்தது.

தமிழகத்தில் பள்ளிகளில் 9 முதல் 12-ம் வகுப்பு வரை நேரடி வகுப்புகளுக்குத் தடை விதிக்கவும், ஆன்லைன் வகுப்புகளைத் தொடரவும் உத்தரவிடக் கோரி நெல்லையைச் சேர்ந்த அப்துல் வஹாபுதீன், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், ''இந்தியாவில் 18 வயதுக்குக் கீழ் உள்ள குழந்தைகளுக்கு கரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்படாமல் உள்ளது. கரோனா 3-ம் அலை அதிக அளவில் குழந்தைகளை பாதிக்கும் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் நேரடி வகுப்பு நடத்துவது சரியல்ல'' எனக் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் எம்.துரைசுவாமி, கே.முரளிசங்கர் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அரசு வழக்கறிஞர் வாதிடுகையில், ''தமிழகத்தில் 9 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் மகிழ்ச்சியுடன் பள்ளிக்குச் செல்கின்றனர். எந்தப் பிரச்சினையும் இல்லாமல் நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இதனால் தடை விதிக்கக் கூடாது'' என்று தெரிவித்தார்.

சிபிஎஸ்இ பள்ளிகள் கூட்டமைப்பின் வழக்கறிஞர் வாதிடுகையில், ''மாணவர்கள் பள்ளிக்குச் செல்லாமல் வீட்டிலேயே அடைந்து இருந்தால் பல்வேறு பாதிப்புகளைச் சந்திக்க நேரிடும். எனவே நேரடி வகுப்புகளுக்குத் தடை விதிக்கக் கூடாது'' என்று தெரிவித்தார்.

இதையடுத்து, மனுதாரர் தனது கோரிக்கை தொடர்பாக அரசிடம் புதிதாக மனு அளிக்கலாம் என்று கூறிய நீதிபதிகள், விசாரணையை நவ. 24-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459