ஆன்லைனில் தேர்வு நடத்த கோரி ஆசிரியர் பயிற்சி மாணவர்கள் ஆர்ப்பாட்டம் - ஆசிரியர் மலர்

Latest

04/09/2021

ஆன்லைனில் தேர்வு நடத்த கோரி ஆசிரியர் பயிற்சி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

 

full

ஆன்லைனில் தேர்வு நடத்தகோரி ஆசிரியர் பயிற்சி மாணவர்கள் நேற்று கலெக்டர் அலுவலகம் முன்பு நூதன முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தமிழகம் முழுவதும் ஆசிரியர் பட்டய பயிற்சி நிறுவனங்களில் பயின்று வரும் மாணவர்களுக்கு நேற்று முன்தினம் பொதுத்தேர்வு தொடங்கியது. தேர்வு தொடங்கிய நிலையில் மாணவ, மாணவிகள் தேர்வை புறக்கணித்தனர். மேலும் கொரோனா காலகட்டத்தில், தொடர்ந்து 14 நாட்கள் நேரடியாக மையங்களுக்கு சென்று தேர்வு எழுதுவதால் உயிருக்கு ஆபத்து ஏற்படும் சூழல் உள்ளது. எனவே ஆசிரியர் பட்டய தேர்வை ஆன்லைன் வழியாக நடத்த வேண்டும்.


 கடந்த 3 ஆண்டுகளாக தேர்வுக்கான மதிப்பெண் மதிப்பிடுவதில் குளறுபடி ஏற்பட்டு, ஏராளமான மாணவர்கள் தோல்வி அடைந்துள்ளனர். இதனை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இந்த நிலையில் நேற்று நாகர்கோவில் கோட்டாறு டிவிடி பள்ளி மையத்தில் தேர்வு எழுத வந்த மாணவ, மாணவிகள் 70க்கும் மேற்பட்டோர் தேர்வை புறக்கணித்தனர். ஆனால் முதலாம் ஆண்டு மாணவர்கள் மட்டும் தேர்வு எழுதினர். இதனை தொடர்ந்து தேர்வை புறக்கணித்த மாணவ, மாணவிகள் அனைவரும் நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் முன்பு வந்தனர். மேலும் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கும்மிப்பாட்டு பாடி நூதன முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தொடர்ந்து மாணவர்கள் அனைவரும் கும்பலாக கலெக்டர் அலுவலகம் உள்ளே நுழைய முயன்றனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், உள்ளே விடாமல் தடுத்து நிறுத்தினர். மேலும் உங்களது ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி கொடுக்கப்பட்டது. ஆனால் நீங்கள் கும்பலாக கலெக்டர் அலுவலகத்திற்கு உள்ளே போக அனுமதிஇல்லை. 3 பேர் சென்று உங்களது கோரிக்கையை கலெக்டரிடம் மனுவாக கொடுங்கள் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து 3 மாணவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர். பின்னர் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் கலெக்டர் அலுவலகம் முன்பு பரபரப்பு ஏற்பட்டது

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459