புதிய முறையில் விடைத்தாள் : TNPSC அறிவிப்பு - ஆசிரியர் மலர்

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

புதிய முறையில் விடைத்தாள் : TNPSC அறிவிப்பு

 


கருப்பு பேனாவால் மட்டுமே எழுத வேண்டும்: தேர்வு முறைகேடுகளை தடுக்க புதிய முறையில் விடைத்தாள் TNPSC அறிவிப்பு தேர்வு முறைகேடுகளைத் தடுக்க புதிய முறையில் விடைத்தாளை டி.என்.பி.எஸ்.சி. அறிமுகம் செய்திருக்கிறது. இந்த கொள்குறிவகை விடைத்தாளில் தேர்வு எழுத கருப்பு பேனாவை மட்டுமே பயன்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 


 ஆதார் எண் இணைக்க வேண்டும் 

 இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி.) தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் ஆர்.சுதன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் தங்களது ஒருமுறை பதிவு அல்லது நிரந்தரபதிவில் கட்டாயமாக தங்களது ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, இதுவரை தங்களது ஆதார் எண்ணை பதிவு செய்யாத விண்ணப்பதாரர்கள் விரைவில் பதிவு செய்துகொள்ள வேண்டும். இனிவரும் காலங்களில் தேர்வர்கள் தாங்கள் எழுதவிருக்கும் தேர்வுகளுக்கான தேர்வுக்கூட நுழைவுச்சீட்டை (ஹால்டிக்கெட்) பதிவிறக்கம் செய்யும்முன்பு தங்களது ஆதார் எண்ணை பதிவு செய்தால் மட்டுமே நிரந்தரப்பதிவில் மூலமாக பதிவிறக்கம் செய்யமுடியும். விண்ணப்பதாரர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட ஒருமுறைப்பதிவு அல்லது நிரந்தரப்பதிவு வைத்திருக்க அனுமதியில்லை. இருந்தாலும் ஏற்கனவே ஒன்றுக்கு மேற்பட்ட ஒருமுறைப்பதிவு, நிரந்தரப்பதிவு வைத்துள்ள விண்ணப்பதாரர்கள், தங்களது ஆதார் எண்ணை தவறுதலாக பதிவுசெய்துள்ளதாக தேர்வாணையத்தை தொடர்புகொண்டு ஏனைய நிரந்தரப்பதிவுக்கு மாற்றம் செய்யவேண்டும் என வேண்டுகோள் விடுத்து வருவதையும், விண்ணப்பதாரர்கள் நலனையும் கருத்தில்கொண்டு அவர்களது நிரந்தரப்பதிவில் இணைத்துள்ள ஆதார் பதிவை ஒரே ஒருமுறை மட்டுமே ரத்துசெய்து தங்களது விருப்பத்திற்கேற்ப ஏனைய நிரந்தரப்பதிவில் ஆதார் எண்ணை இணைப்பதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. ஆகையால் விண்ணப்பதாரர்கள் இந்த வாய்ப்பை மிகுந்த கவனத்துடன் பயன்படுத்திகொள்ள வேண்டும். 

குரூப்-1 தேர்வு ஹால்டிக்கெட் 

வருகிற ஜனவரி 3-ந் தேதி நடைபெறவுள்ள ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் (குரூப்-1) முதல் நிலைத்தேர்வு மற்றும் 9, 10-ந்தேதிகளில் நடைபெறவுள்ள உதவி இயக்குனர் (தொழில் மற்றும் வணிகம்) தேர்வுகளுக்கு அனுமதிக்கப்பட்டுள்ள விண்ணப்பதாரர்களுக்கு தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதனை ஒருமுறைப்பதிவு மற்றும் நிரந்தரப்பதிவு மூலம் ஆதார் எண்ணை இணைத்த பிறகே பதிவிறக்கம் செய்ய முடியும். மேலும் இதுகுறித்த கூடுதல் விளக்கம் தேவைப்பட்டால் விண்ணப்பதாரர்கள் 18004251002 எனும் தேர்வாணைய கட்டணமில்லா தொலைபேசி எண்ணை அலுவலக நேரங்களில் (காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை) எல்லா வேலைநாட்களிலும் வரும் 8-ந்தேதி வரை தொடர்பு கொள்ளலாம். மேலும் contacttnpsc@gmail.comஎனும் தேர்வாணைய மின்னஞ்சல் முகவரி வழியாகவும் தொடர்புகொண்டு உரிய தகவல்களை பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

விடைத்தாளில் புதிய முறை 

இதேபோல், கடந்த ஆண்டு (2019) நடந்த டி.என்.பி.எஸ்.சி. தேர்வில் நடந்த முறைகேட்டை தொடர்ந்து, தேர்வாணையம் மூலம் இனி நடத்தப்பட உள்ள கொள்குறி வகை தேர்வுகளுக்கு பயன்படுத்தப்படும் ஓ.எம்.ஆர். விடைத்தாளும் புதிய முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அந்த விடைத்தாளில் ஏற்கனவே பதிலை தெரிவிக்க 4 பிரிவுகள் (அதாவது ஏ, பி, சி, டி) கொடுக்கப்பட்டு இருக்கும். அதில் ஏதாவது ஒரு விடையை பதில் அளிக்க வேண்டும். இந்த நிலையில் தற்போது கூடுதலாக ஒரு பிரிவையும் அதில் இணைக்கப்பட்டு இருக்கிறது. சம்பந்தப்பட்ட வினாவுக்கு பதில் தெரியவில்லை என்றால், கூடுதலாக கொடுக்கப்பட்ட அந்த பிரிவை தேர்வர்கள் தேர்வு செய்யவேண்டும். இவ்வாறாக பதில் அளித்து முடிந்ததும், ஏ, பி, சி, டி மற்றும் கூடுதலாக உருவாக்கப்பட்ட இ பிரிவில் எத்தனை விடைகள் எழுதப்பட்டன? என்பதை கணக்கிட்டு அதற்காக ஒதுக்கப்பட்ட இடங்களில் குறிப்பிட வேண்டும். கருப்பு பேனா பின்னர், இடதுபெருவிரல் ரேகையை அதில் பதிவு செய்வது அவசியமாக்கப்பட்டு இருக்கிறது. இப்படி அனைத்தையும் சரியாக செய்திருப்பதை தேர்வர்கள் உறுதி செய்துகொள்ள வேண்டும். இதற்காக தேர்வு நேரத்தில் இருந்து கூடுதலாக 15 நிமிடம் தேர்வர்களுக்கு வழங்கப்படுகிறது. கணக்கிடுவதில் ஏதாவது பிழை இருக்கும்பட்சத்தில் 5 மதிப்பெண் குறைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், தேர்வை கருப்பு பேனாவில் மட்டுமே எழுத வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டு இருக்கிறது. புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ள ஓ.எம்.ஆர். விடைத்தாளின் மாதிரி படிவமும், விடைத்தாள் கையாளும் முறை குறித்த விளக்க குறும்படமும் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment