எஸ்ஐ தேர்வுக்கான உத்தேச பட்டியலுக்கு ஐகோர்ட் தடை - ஆசிரியர் மலர்

Latest

24/12/2020

எஸ்ஐ தேர்வுக்கான உத்தேச பட்டியலுக்கு ஐகோர்ட் தடை

 


மதுரை: தமிழ் வழி ஒதுக்கீடு பின்பற்றாததால், எஸ்ஐ தேர்வுக்கான உத்தேச பட்டியலுக்கு ஐகோர்ட் கிளை தடை விதித்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தைச் சேர்ந்த விக்னேஷ்வரன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், எஸ்ஐ பணிக்காக கடந்த ஜன. 12ல் நடந்த எழுத்துத்தேர்வில் பங்கேற்றேன். தமிழ் வழி இட ஒதுக்கீடு வழங்கியிருந்தால் எனக்கு வாய்ப்பு கிடைத்திருக்கும். தமிழ்வழி படிப்பிற்காக இடஒதுக்கீட்டை முறையாக பின்பற்றவில்லை. எனவே, தமிழ் வழி ஒதுக்கீடு முறையை பின்பற்றி முறைப்படி தேர்வு செய்யவும்,  உத்தேச பட்டியலுக்கு தடையும் விதிக்க வேண்டும் என கூறியிருந்தார்.

மனுவை நேற்று விசாரித்த நீதிபதி என்.கிருபாகரன், பி.புகழேந்தி ஆகியோர், ‘‘தமிழ் வழி படிப்பிற்கான இடஒதுக்கீட்டு முறையை பின்பற்றுவதில் ஏன் முரண்பாடு உள்ளது? தமிழ் வழியில் படித்தவர்களால் இங்குதானே பணியாற்ற முடியும்.
அவர்களுக்குரிய அங்கீகாரத்தை கொடுக்க ஏன் மறுக்கிறீர்கள். ஏன் தடை விதிக்கக் கூடாது?’’ என்றனர். மூத்த வக்கீல் அஜ்மல்கான் ஆஜராகி, ‘‘தமிழ் வழியில் படித்தவர்களுக்கும் உரிய ஒதுக்கீடு கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான் சட்டம் கொண்டு வரப்பட்டது. தேர்வு நடைமுறைகளின் இறுதியில்தான் இட ஒதுக்கீடு முறை பின்பற்றப்படும் என்பதால் உரிய பிரதிநிதித்துவம் கிடைப்பதில்லை.

கடந்த 2015ல் 1,064 எஸ்ஐ பணியிடத்திற்கு தேர்வு நடந்தது. இதில் 20 சதவீதப்படி 212 பேருக்கு பணி கிடைத்திருக்க வேண்டும். ஆனால், வெறும் 34 பேருக்கு மட்டும் பணி வழங்கப்பட்டது. இந்த நடைமுறை தவறானது. எத்தனை பணி இடம் என இறுதி செய்யும்போதே, இடஒதுக்கீட்டின்படி எத்தனை இடம் வழங்கப்படும் என்பதையும் உறுதிப்படுத்த வேண்டும். அரசின் தவறான நடைமுறையால் சட்டம் கொண்டு வரப்பட்டதன் நோக்கமே வீணாகிறது’’ என்றார். கூடுதல் அட்வகேட் ஜெனரல் செல்லப்பாண்டியன் ஆஜராகி, ‘‘தற்போது நேர்முகத்தேர்வு நடந்து வருகிறது. தடை விதித்தால் தேர்வு நடைமுறைகள் பாதிக்கும். தேவைப்பட்டால், தமிழ் வழி ஒதுக்கீட்டிற்கான 20 சதவீத இடங்களை நிரப்பாமல் வைத்திருக்கிறோம்’’ என்றார். இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், எஸ்ஐ தேர்வுக்கான உத்தேச பட்டியலுக்கு இடைக்காலத் தடை விதித்தனர். மேலும், தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் தரப்பில் விரிவான பதில்மனு தாக்கல் செய்ய வேண்டுமென உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தனர். 

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459