ஆசிரியர் அல்லாத 10 புதிய கல்லூரிகள் : தேர்வை ஒத்திவைக்க ராமதாஸ் கோரிக்கை - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

ஆசிரியர் அல்லாத 10 புதிய கல்லூரிகள் : தேர்வை ஒத்திவைக்க ராமதாஸ் கோரிக்கை

 


பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ” தமிழ்நாட்டில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள 10 புதிய கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு இன்னும் ஆசிரியர்கள் நியமிக்கப்படாததால், அவற்றில் சேர்ந்த மாணவர்கள் பாடங்களை படிக்க முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். கல்லூரிகள் தொடங்கப்பட்டு பல மாதங்களாகியும் அவற்றுக்கு ஆசிரியர்கள் நியமிக்கப்படாதது, தேர்வுக்கு தயாராக வேண்டிய மாணவர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்துள்ளது.

தமிழக சட்டப்பேரவையில் கடந்த மார்ச் 20-ஆம் தேதி உயர்கல்வித்துறை தொடர்பான அறிவிப்புகளை அவை விதி எண் 110-இன் கீழ் வெளியிட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள், நடப்பாண்டில் 7 புதிய கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும் என்று அறிவித்தார். அதன்படி  விழுப்புரம் மாவட்டம் வானூர் – திருச்சிற்றம்பலம் கூட்டு சாலை,  ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர், அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம், நாகப்பட்டினம் மாவட்டம் குத்தாலம், கரூர் மாவட்டம் தரகம்பாடி, விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய இடங்களில் இருபாலர் அரசு கலை கல்லூரிகளும், கோவை மாவட்டம் புலியகுளத்தில் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியும் தொடங்கப்படும் என்று கடந்த செப்டம்பர் மாதத்தில் உயர்கல்வித்துறை அறிவித்தது. அதேபோல், கடந்த ஆண்டு நவம்பர் 22-ஆம் தேதி தென்காசி மாவட்டத் தொடக்க விழாவில் பேசும்போது அம்மாவட்டத்தில் ஆலங்குளம், சங்கரன்கோயில் ஆகிய இடங்களிலும், கடந்த ஆகஸ்ட் 10-ஆம் தேதி கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற அரசு விழாவில் ரிஷிவந்தியத்திலும் புதிய கலைக்கல்லூரிகள் தொடங்கப்படும் என முதல்வர் அறிவித்தார்.நடப்பாண்டிற்கு அறிவிக்கப்பட்ட 10 புதிய கலை – அறிவியல் கல்லூரிகளுக்கும் ஆன்லைன் மூலம்  மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு, அக்டோபர் மாதத்தில் கல்லூரிகள் தொடங்கப்பட்டன. ஒவ்வொரு  புதிய கல்லூரிக்கும் தலா 17 ஆசிரியர்கள், 13 நிர்வாகப் பணியாளர் இடங்கள் அனுமதிக்கப்பட்டாலும் கூட, கல்லூரிகள் திறக்கப்படும் வரை ஒருவர் கூட நியமிக்கப்படவில்லை. அதனால், கல்லூரிகள் தொடங்கியும் இந்த கல்லூரிகளில் சேர்ந்த 2000-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு எந்த பாடமும் நடத்தப்படவில்லை. இதுதொடர்பாக மாணவர்கள் புகார் செய்ததைத் தொடர்ந்து அக்டோபர் மாத இறுதியில், அருகிலுள்ள கல்லூரிகளில் நடத்தப்படும் ஆன்லைன் வகுப்புகளில் இந்த கல்லூரிகளின் மாணவர்கள் இணைந்து கொள்ள அனுமதிக்கப்பட்டது. கடைசி 3 கல்லூரிகளுக்கு மட்டும் நவம்பரில் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர்.

புதிய கல்லூரிகளுக்கு ஆசிரியர்கள் நியமிக்கப்படாத நிலையில், அவர்கள் அருகிலுள்ள கல்லூரிகளின் ஆன்லைன் வகுப்புகளில் சேருவதற்குள்ளாகவே பெரும்பான்மையான பாடங்கள் நடத்தி முடிக்கப்பட்டு விட்டன. ஆங்கில இலக்கியம், கணிதம், கணினி அறிவியல், வணிகவியல் ஆகிய பாடங்கள் மிகவும் கடினமானவை. ஆசிரியர்களின் துணையின்றி அவற்றை படிக்க முடியாது. அவ்வாறு இருக்கும் போது ஆன்லைனில் ஒரு சில பாடங்கள் மட்டுமே நடத்தப்பட்டுள்ள நிலையில், அவற்றை வைத்து தேர்வை முழுமையாக எழுத முடியாது. மற்ற கல்லூரிகளின் மாணவர்களுக்கு முழுமையாக பாடங்கள் நடத்தப்பட்டுள்ள நிலையில், புதிய கல்லூரிகளின் மாணவர்களுக்கு பாடங்கள் நடத்தப்படாத சூழலில் அவர்களால், முதல் பருவத் தேர்வுகளில் மற்ற கல்லூரிகளின் மாணவர்களுடன் போட்டியிட முடியாது.பாரதிதாசன் பல்கலைக்கழகத்திற்குட்பட்ட கல்லூரிகளில் திசம்பர் 14&ஆம் தேதி முதலும், மற்ற பல்கலைக்கழகங்களில் அடுத்தடுத்த வாரங்களிலும் முதல் பருவத்தேர்வுகள் தொடங்கவுள்ளன. புதிய கல்லூரிகளின் மாணவர்கள் தேர்வுக்கு தயாராகாத நிலையில், அவர்களால் மிகவும் குறைவாகவே மதிப்பெண் எடுக்க முடியும். அது சில மாணவர்களின் தேர்ச்சியையும், பல மாணவர்களின் உயர்கல்வி வாய்ப்பையும்  கடுமையாக பாதிக்கும். மாணவர்கள் எந்தத் தவறும் செய்யவில்லை; ஆசிரியர்களை குறித்த காலத்தில் நியமிக்காதது அரசின் தவறு ஆகும். அரசின் தவறுக்காக மாணவர்கள் தண்டிக்கப்படக் கூடாது.

எனவே, முதல்கட்டமாக இதுவரை ஆசிரியர்கள் நியமிக்கப்படாத 7 கல்லூரிகளுக்கும் உடனடியாக அனைத்து பாடங்களுக்கும் ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும். அடுத்ததாக 10 கல்லூரிகளிலும்  முதல் பருவத் தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும். அவர்களுக்கு இதுவரை நடத்தப்பட்ட பாடங்களின்  அளவில் கல்லூரி அளவில் தேர்வுகளை நடத்தி மதிப்பெண் வழங்க வேண்டும் அல்லது அனைத்து பாடங்களும் நடத்தி முடிக்கப்பட்ட பிறகு தனியாக பருவத்தேர்வு நடத்தி தேர்ச்சி வழங்க வேண்டும் ” என்று தெரிவித்துள்ளார்.

No comments:

Post a comment