பிப்ரவரி 10 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் - தமிழ் நாடு அரசு ஊழியர் சங்கம் அறிவிப்பு - ஆசிரியர் மலர்

Latest

28/12/2020

பிப்ரவரி 10 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் - தமிழ் நாடு அரசு ஊழியர் சங்கம் அறிவிப்பு



கோரிக்கைகளை அரசு நிறைவேற்றவில்லை எனில் பிப்.10-ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது என்று முடிவு செய்துள்ளது.

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலப் பொதுக்குழு கூட்டம் திருச்சியில் இன்று நடைபெற்றது.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து சங்கத்தின் மாநில முன்னாள் துணைத் தலைவர் என்.குமாரவேல், செய்தியாளர்களிடம் கூறியது:

”எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அரசு ஊழியர்களின் நலனுக்காகப் போராடும் பாரம்பரியம் கொண்டது தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம். ஆனால், அண்மைக்காலமாக தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் தலைமை, அந்தப் பாதையில் இருந்து விலகி, அரசுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்து, ஊழியர் விரோதப் போக்குடன் செயல்பட்டு வருகிறது.

எனவே, சங்க விதிகள் மற்றும் பதிவுச் சட்டங்களுக்கு மாறாக 2019, செப்.28, 29 ஆகிய தேதிகளில் தஞ்சாவூரில் நடைபெற்ற சங்கத்தின் மாநில மாநாட்டில் தேர்வு செய்யப்பட்ட மாநில நிர்வாகிகள், திருச்சியில் இன்று கூடியுள்ள தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலப் பொதுக்குழுக் கூட்டத்தில் நீக்கப்பட்டு, எஸ்.தமிழ்ச்செல்வியைத் தலைவராகக் கொண்ட புதிய மாநில நிர்வாகிகள் 15 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு ரூ.7,000, ஏ மற்றும் பி பிரிவு ஊழியர்களுக்கு ஆகியவை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி, டிச.30-ம் தேதி மாநிலம் முழுவதும் அனைத்து அரசு அலுவலகங்கள் முன்பும் ஆர்ப்பாட்டம் நடத்தவும், அரசுகளின் ஊழியர் விரோத நடவடிக்கைகளை விளக்கி ஜன.4-ம் தேதி முதல் ஊழியர் சந்திப்பு இயக்கம் நடத்தவும் மற்றும் ஜன.22-ம் தேதி கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் தலைமைச் செயலகம் முன் பெருந்திரள் முறையீடு போராட்டம் நடத்தவும் இந்தப் பொதுக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 10 ஆண்டுகளாக இந்த அதிமுக அரசு, அரசு ஊழியர்களுக்கு விரோதமான நடவடிக்கைகளைத் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. அகவிலைப்படி, சரண்டர் ஆகியவற்றை முடக்கியது, ஜிபிஎப் வட்டியைக் குறைத்தது, நீதிமன்றத்தில் வாக்குறுதி அளித்தவாறு புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய மறுப்பது ஆகியவற்றை இதற்கு அடையாளமாகக் கூறலாம்.

எங்கள் கோரிக்கைகளுக்கு அரசு செவி சாய்த்து நிறைவேற்ற வேண்டும். இல்லையெனில், பிப். 10-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளோம்.

ஜாக்டோ- ஜியோ போராட்டத்தின்போது மீது பதிவு செய்யப்பட்ட பொய்யான மற்றும் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட குற்றக் குறிப்பாணைகளை ரத்து செய்ய வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.


ஆனால், இதுவரை இல்லாத வகையில், ஊழியர்களைப் பழிவாங்கும் அரசாக இந்த அதிமுக அரசு செயல்பட்டு வருகிறது. எனவேதான், வேறு வழியின்றி பிப்.10-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளோம்”.

இவ்வாறு தெரிவித்தார்.

செய்தியாளர் சந்திப்பின்போது தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ்.தமிழ்ச்செல்வி உடனிருந்தார்.





No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459