பள்ளிகள் திறப்பு குறித்து அமைச்சர் செங்கோட்டையன் அதிகாரிகளுடன் ஆலோசனை! - ஆசிரியர் மலர்

Latest

02/11/2020

பள்ளிகள் திறப்பு குறித்து அமைச்சர் செங்கோட்டையன் அதிகாரிகளுடன் ஆலோசனை!

 


நவ.16-ம் தேதி முதல் 9 முதல் 12 வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் பள்ளிகள் திறப்பு குறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை நடத்தினார்.


தமிழகத்தில் கரோனா தொற்று காரணமாக கடந்த மார்ச் 25 -ம் தேதி முதல் ஊரடங்கு அமலானது. இதில் பொதுமக்கள் கூடும் அனைத்துச் செயல்பாடுகளுக்கும் தடை விதிக்கப்பட்டது. பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்டவை மூடப்பட்டன. அதைத் தொடர்ந்து ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வந்தது. பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட முடியாத சூழ்நிலை காரணமாக 10-ம் வகுப்பு வரை மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக அரசு அறிவித்தது.


இந்நிலையில் கரோனா தொற்றின் வேகம் குறைவதால் பள்ளிகள் திறப்பு குறித்து கேள்வி எழுந்து வந்தது. இதனைத் தொடர்ந்து அக்டோபர் 30 அன்று மத்திய அரசு வெளியிட்ட ஊரடங்கு தளர்வு அறிவிப்பில் பள்ளிகள், திரையரங்குகளை திறக்கலாம் என அறிவித்தது.


இதையடுத்து பள்ளிகளைத் திறப்பு குறித்து தமிழக அரசு அறிவிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. அக்.31 -ம் தேதி அன்று தளர்வுகளுடன் பொது முடக்கம் நீட்டிப்பு குறித்து முதல்வர் பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டார்.


அதன்படி தமிழகத்தில் பல்வேறு புதிய தளர்வுகளுடன் நவம்பர் 30 -ம் தேதி வரை பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது. பள்ளிகள் (9, 10, 11, 12 -ம் வகுப்புகள் மட்டும்), அனைத்துக் கல்லூரிகள், ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் நவம்பர் 16 -ம் தேதி முதல் நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றிச் செயல்பட அனுமதிக்கப்படுகின்றன எனத் தமிழக அரசு அறிவித்தது.


இதையடுத்து பள்ளிகளைத் திறப்பது குறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தமது துறை உயர் அதிகாரிகளுடன் இன்று தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் தீரஜ்குமார், பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


கூட்டத்தில் பள்ளிகளைத் திறப்பது, மாணவர் மற்றும் பெற்றோரிடையே நிலவும் அச்சத்தைப் போக்குவது, மாணவர்கள் பள்ளிக்கு வரும்போது கடைப்பிடிக்கப்பட வேண்டிய தடுப்பு நடவடிக்கைகள், பள்ளிகளில் கடைப்பிடிக்கப்பட வேண்டிய தொற்றுத் தடுப்பு நடவடிக்கைகள், பள்ளி வகுப்பறைகளைப் பராமரிப்பது, மாணவர்கள் பாதுகாப்பு உள்ளிட்ட அம்சங்கள் ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிகிறது.


கூட்டத்தின் முடிவில் தமிழக அரசு எடுக்கும் முடிவு குறித்த அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459