பள்ளி, கல்லூரி வகுப்பறைகளில் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நடைமுறைகள் வெளியீடு - மத்திய அரசு - ஆசிரியர் மலர்

Latest

14/09/2020

பள்ளி, கல்லூரி வகுப்பறைகளில் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நடைமுறைகள் வெளியீடு - மத்திய அரசு

பள்ளி, கல்லூரி வகுப்பறைகளில் என்னென்ன நடைமுறைகளை மேற்கொள்ள வேண்டும் என்று புதிய வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. மத்திய அரசு
கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்ட அதே நேரத்தில் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன.
இப்போது பொதுமுடக்கம் நீக்கப்பட்டு மற்ற பணிகள் அனைத்தும் மீண்டும் நடைபெற அனுமதி அளிக்கப்பட்ட போதிலும் பள்ளி, கல்லூரிகளை மட்டும் திறக்க அனுமதிக்கவில்லை.
ஆனால் ஆன்-லைன் மூலமாக வகுப்புகளை நடத்த அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது.
இந்த நிலையில் வருகிற 21-ந்தேதி முதல் பள்ளிகள் மற்றும் உயர் கல்வி நிறுவனங்களை தொடங்கி நடத்தலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
பள்ளிக்கூடங்களில் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை மட்டும் நடத்த அனுமதிக்கப்பட்டுள்ளது. கல்லூரிகள், தொழில்நுட்ப கல்வி மையங்கள், உடல்திறன் மையங்கள் போன்றவை முழுமையாக செயல்படலாம் என கூறப்பட்டுள்ளது.
ஆனாலும் இதுசம்பந்தமாக அந்தந்த மாநில அரசுகள் நிலைமைக்கு ஏற்ப முடிவு எடுத்துக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் அறிவிப்பை தொடர்ந்து பல மாநிலங்களிலும் 21-ந்தேதி பள்ளி, கல்லூரிகளை திறக்க திட்டமிட்டுள்ளனர். அவ்வாறு திறக்கப்படும் போது வகுப்பறைகளில் என்னென்ன நடைமுறைகளை மேற்கொள்ள வேண்டும் என்று புதிய வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.
வகுப்பறையில் ஒவ்வொரு இருக்கை பெஞ்சுக்கும் மற்றொரு இருக்கை பெஞ்சுக்கும் 6 அடி இடைவெளி இருக்க வேண்டும். பள்ளி வளாகம் முழுவதும் கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்திருக்க வேண்டும்.
தேவைக்கேற்ப வகுப்பறை நேரங்களை மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டும். வகுப்பறைகளில் இடைவெளி விட்டு அமர வைத்திருப்பதால் மாணவர்களுக்கு ஆசிரியர் சொல்வது சரியாக கேட்கிறதா? என்பதை உறுதிபடுத்திக் கொள்ள வேண்டும்.
மாணவர்கள் லேப்-டாப், நோட்டு-புத்தகம், பேனா- பென்சில் போன்றவற்றை ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொள்ள அனுமதிக்க கூடாது.
பள்ளி தொடங்குவதற்கு முன்பு அனைத்து வகுப்பறைகளையும் சுத்தப்படுத்துவதுடன் வகுப்புகள் முடிந்ததும் மீண்டும் ஒரு தடவை சுத்தப்படுத்த வேண்டும்.
மாணவர்கள் அடிக்கடி தொடக்கூடிய கதவு கைப்பிடி, லிப்ட் பட்டன், படிக்கட்டு கைப்பிடிகள், இருக்கை பெஞ்சு, கழிவறை சாதனங்கள் ஆகியவற்றையும் மிகவும் கவனம் செலுத்தி கிருமி நாசினிகளால் சுத்தம் செய்து வைத்திருக்க வேண்டும்.
ஆய்வுக்கூடம், லாக்கர், வாகன நிறுத்துமிடம், மாணவர்கள் பொதுவாக பயன்படுத்தக்கூடிய இடங்கள் போன்றவற்றிலும் கிருமி நாசினி பயன்படுத்தி சுத்தம் செய்திருக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459