THIRAN க்காக திறனை இழக்கும் ஆசிரியர்கள்!
புற்றீசல் போல அவ்வப்போது கல்வியில் புதுப்புது பூதாகரம் கிளம்புவது உண்டு. முன்பு எண்ணும் எழுத்தும். தற்போது திறன்! அதாவது கல்வியில் சீரமைப்பையும் வளர்ச்சியையும் மேம்படுத்துவதற்கான இலக்குகளை அடைய உதவுதல் எனும் THIRAN (Targeted Help for Improving Remediation and Academic Nurturing) திட்டம் கடந்த ஆகஸ்ட் முதல் நடைமுறைக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
6 முதல் 9 வகுப்பு முடிய உள்ள மாணவர்களின் மொழிப்பாடத் திறன் மற்றும் கணிதத்திறன் ஆகியவற்றை மெல்லக் கற்போரிடம் மேம்படுத்துவதுதான் இதன் சிறப்பாகும். இதற்கென ஆசிரியருக்குக் கற்பித்தல் கையேடும் மாணவருக்குத் தமிழ், ஆங்கிலம், கணக்குப் பாடங்களுக்கு மட்டும் தனிப் பயிற்சிப் புத்தகங்களும் வடிவமைக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளது எண்ணத்தக்கது.
முன் தேர்வு வைத்து அடையாளம் காணப்பட்ட 6 - 9 வகுப்பு மாணவர்களுக்குப் பொதுவான அடிப்படைக் கற்றல் இலக்குகள் 15 உம் பாடப்பொருள் சார்ந்த கற்றல் இலக்குகள் 10 உம் உள்ளடக்கியதாக மாணவர் பயிற்சி நூல் காணப்படுகிறது. திறன் மாணவர்கள் தம் அடிப்படைக் கற்றல் இலக்குகளை நிறைவு செய்யும் வரை 6 - 8 வகுப்புகள் ஒரே அலகாகவும், 9 ஆம் வகுப்பு தனி அலகாகவும் கற்பிக்கப்பட வேண்டும் என்பது நியதி.
மாத வாரியாக இவர்களுக்குத் தேவையான கற்றலடைவுச் சோதனைக்கு உரிய வினாத்தாள்கள் இணைய வழியில் பெறப்பட்டு மாணவர்களிடம் வழங்கப்பட்டு அவற்றின் மதிப்பெண்கள் இணைய வழியில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருவது அறியத்தக்கது. அதன் அடிப்படையில் வார விடுமுறை நாள்கள் என்றும் பாராமல் நடைபெறும் கட்டாய இணையவழிக் கூட்டத்தில் வம்படியாக சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமையாசிரியர்கள் மற்றும் வேறுவழியின்றி அகப்பட்டுக் கொண்ட பொறுப்புத் தலைமையாசிரியர்கள் ஆகியோரை அழைக்கச் செய்து அவர்தம் நியாயங்கள் மற்றும் நடைமுறை சிக்கல்கள் குறித்துக் கிஞ்சித்தும் மனத்தில் கொள்ளாமல் எந்திர மனிதர்களாக இயங்கச் செய்வது என்பது வருந்தத்தக்கது.
இன்றைய நெருக்கடிகள் மிகுந்த பணி சார்ந்த வாழ்வியல் முறையில் மேல் மட்டத்திலிருந்து கீழ் மட்டம் வரை இருந்து வருவது அண்மைக்கால நடப்பாகும். இதில் மாணவர் உளவியல் ஒன்று இருப்பதை யாரும் மறுக்கவோ மறக்கவோ கூடாது. நவீன குறு ஆன்ட்ராய்டியன்களாகத் திகழும் இணைய வழி விளையாட்டிலும் பொழுதுபோக்கு சமூக ஊடகங்களிலும் மூழ்கிக் கிடக்கும் பதின்பருவத்தினரை எடுத்தோம் கவிழ்த்தோம் என்று மிகவும் மலிவாகவும் எளிதாகவும் கையாள்வது என்பது இயலாத ஒன்று. இந்த அடிப்படை புரிதல் அனைவருக்கும் அவசர அவசியமாகும்
அதைவிடுத்து, மந்திரத்தில் மாங்காய் காய்க்கச் சொல்வது என்பது வருந்தத்தக்கது. ஏனெனில், ஒரு சில நிமிடங்களில் உருவாக்கப்படும் துரித உணவு போன்று திறன் மாணவர்களிடம் ஓரிரு மாதங்களிலேயே அவர் தம் கற்றலில் துரித அடைவை எதிர்பார்ப்பது நியாயம் ஆகுமோ? இதற்கிடையில் இயற்கைப் பேரிடராக, பருவ கனமழை தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலும் மாணவரிடையே தொடர் கற்றல் பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளதை எளிதில் புறந்தள்ளி விடமுடியாது.
ஏற்கனவே பல்வேறு பணிச் சுமைகளில் ஆட்பட்டு அல்லாடிக் கொண்டிருக்கும் ஆசிரியர்களுக்கு மற்றுமொரு கூடுதல் சுமையாகத் திறன் திட்டம் உள்ளது என்பதுதான் உண்மை. மெல்லக் கற்போருக்கு இது அற்புதமான திட்டம் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. அதேவேளையில் கற்றலடைவில் அவசரம் காட்டுவது என்பது ஏற்பதற்கில்லை.
ஐந்து ஆண்டுகள் 1110 பள்ளி வேலை நாள்களில் எண்ணும் எழுத்தும் முறையே கற்காமல் பல்வேறு அடிப்படையான கற்றல் திறன்களுள் குறைந்தபட்ச அளவு கூட எட்டாமல் ஒரேயடியாகப் பல வகுப்புகள் கடந்து தாவி வந்துள்ளவர்களிடம் 100 நாள்களில் அதி அற்புத அதிசயத்தை எதிர்பார்ப்பது என்பது வேதனைக்குரியது.
சராசரி மாணவர்களுக்கே சற்று கால அவகாசம் தேவைப்படும் போது கற்றலில் மிகவும் பின்தங்கிய மாணவர்களின் நிலையைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை! ஒவ்வொரு திறன் வகுப்பு கற்பிக்கும் ஆசிரியரையும் நேரம் காலம் பார்க்காமல் 24 x 7 அளவில் மூச்சு முட்ட வேலை செய்ய பணிப்பது என்பது மானுட உளவியலுக்கு உகந்தது அல்ல. மொத்தத்தில் THIRAN ஆசிரியர்களின் திறனை இழக்கச் செய்யாமல் வலுப்படுத்த வேண்டும் என்பதே எல்லோரது எதிர்பார்ப்பாகும்.
எழுத்தாளர் மணி கணேசன் .


No comments:
Post a Comment