School Admission - நாளை முதல் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை! - ஆசிரியர் மலர்

Latest

 




 


16/08/2020

School Admission - நாளை முதல் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை!


தமிழகத்தில் கொரோனா தொற்று நீங்கி குழந்தைகளுக்கு பாதுகாப்பான சூழல் உருவான பிறகே பள்ளிகள் திறக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், நடப்பு கல்வியாண்டில் அனைத்து வகை பள்ளிகளிலும் ஒன்று, ஆறு மற்றும் 9-ம் வகுப்புகளில் மாணவர் சேர்க்கை வரும் திங்கட்கிழமை முதல் தனிமனித இடைவெளியை கடைப்பிடித்து நடைபெறும் என்றார்.

மேலும், ஒரு பள்ளியில் இருந்து மற்றொரு பள்ளிக்கு மாறும் 2 முதல் 10ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களும் 17ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்ற அவர், மாணவர் சேர்க்கை நடைபெறும் நாளன்றே விலையில்லா நோட்டு, புத்தகங்கள் வழங்கப்படும் என்றும் கூறினார்.


இலவச கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் எல்,கே.ஜி மற்றும் ஒன்றாம் வகுப்புக்கான மாணவர் சேர்க்கைக்கு இணையதளம் வாயிலாக வரும் 17ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவித்தார். தமிழகத்தில் கொரோனா தொற்று கட்டுக்குள் வந்து பெற்றோர், கல்வியாளர்கள் ஆலோசனை பெறப்பட்ட பிறகே பள்ளிகள் திறப்பு குறித்து முடிவெடுக்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார்.

இதனிடையே, நாடு முழுக்க டிசம்பர் வரை பள்ளி, கல்லூரிகளை திறக்க வாய்ப்பு குறைவு என மத்திய அரசு தெரிவித்துள்ளது. டெல்லியில் நடைபெற்ற மனிதவள மேம்பாட்டிற்கான நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டத்தில் நாடு முழுவதும் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறப்பது தொடர்பான ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டன. கூட்டத்தில் பேசிய மத்திய உயர்கல்வித்துறை செயலர் அமித் காரே, கொரோனா ஊரடங்கு முடிந்து முதற்கட்டமாக, கல்லூரிகள் மற்றும் 10 முதல் 12 வகுப்புகளை மட்டும் தொடங்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும், டிசம்பர் வரை ஆன்லைன் வாயிலாக வகுப்புகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகயும் கூறினார்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459