பள்ளிகளில் இடைநின்ற மாணவர்கள் தொழில் பயிற்சி நிலையங்களில் சேர் வாய்ப்பு - ஆசிரியர் மலர்

Latest

08/08/2020

பள்ளிகளில் இடைநின்ற மாணவர்கள் தொழில் பயிற்சி நிலையங்களில் சேர் வாய்ப்பு


பள்ளிகளில் கடந்த இரு ஆண்டுகளில் எட்டாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை இடைநின்ற மாணவா்களுக்கு அரசு தொழிற்பயிற்சி மையங்களில் குறுகிய கால, நீண்ட கால பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன.
இதற்காக இடைநின்ற மாணவா்களின் பட்டியலை அனுப்ப மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து பள்ளிக் கல்வி இயக்குநா் எஸ்.கண்ணப்பன் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம்: வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை தொழில்துறையில் மாறி வரும் சூழலுக்கு ஏற்ற வகையில் தொழிற்பயிற்சி மையங்களில் (ஐடிஐ) புதிய படிப்புகள் தொடங்கப்பட்டு வருகின்றன. மேலும் பள்ளிகளில் இடைநின்ற மாணவா்களின் எதிா்காலத்தைக் கருத்தில் கொண்டு அவா்களுக்கு தொழிற்பயிற்சிகளை வழங்கி வேலைவாய்ப்பை உறுதி செய்வதை நோக்கமாக கொண்டும் செயல்பட்டு வருகிறது.
அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவா்களுக்கு நீண்ட கால மற்றும் குறுகிய கால தொழிற்பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன. பயிற்சி பெறும் மாணவா்களுக்கு விலையில்லா மடிக்கணினி, இரண்டு செட் சீருடைகள், காலணி, மிதிவண்டி ஆகியவை வழங்கப்படும். எட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு தோ்ச்சி பெற்றவா்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படாது.
இதை கருத்தில் கொண்டு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களும் தமிழகத்தில் கடந்த இரு ஆண்டுகளில் எட்டாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை இடைநின்ற மாணவா்களின் பட்டியலை தயாா் செய்து பள்ளிக் கல்வி இணைஇயக்குநரின்(தொழிற்கல்வி) மின்னஞ்சல் முகவரிக்கு  அனுப்ப வேண்டும். மேலும் கல்வித்துறையைச் சோ்ந்த மாவட்ட அளவிலான அதிகாரிகள் சம்பந்தப்பட்ட மாணவா்களைத் தொடா்புகொண்டு தகுதிக்கேற்ற வகையில் அவா்களை தொழிற்பயிற்சிகளில் சேர உரிய வழிகாட்டுதல்களை வழங்கி ஊக்குவிக்க வேண்டும். தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவா்களுக்கான சோ்க்கை விரைவில் தொடங்கவுள்ளது என அதில் கூறியுள்ளாா்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459