ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் தயாரித்துள்ள கொரோனா தடுப்பு மருந்து பாதுகாப்பானது : ஆரம்ப கட்ட சோதனையில் வெற்றி - ஆசிரியர் மலர்

Latest

21/07/2020

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் தயாரித்துள்ள கொரோனா தடுப்பு மருந்து பாதுகாப்பானது : ஆரம்ப கட்ட சோதனையில் வெற்றி

லண்டன்: இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் தயாரித்துள்ள கொரோனா தடுப்பு மருந்து பாதுகாப்பானது என ஆரம்ப கட்ட சோதனையில் வெற்றி அடைந்துள்ளது. இதைத் தொடர்ந்து, 9 கோடி கொரோனா தடுப்பு ஊசிகளை தயாரிக்க இங்கிலாந்து அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. உலகையே தன் கட்டுக்குள் வைத்திருக்கும் கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதில் ஜெர்மனி, பிரான்ஸ், நெதர்லாந்து, இத்தாலி, அமெரிக்கா, இந்தியா, இங்கிலாந்து உள்ளிட்ட உலக நாடுகள் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இங்கிலாந்தில் முதல் கட்டமாக 1700க்கும் மேற்பட்டவர்களிடம் கடந்த ஏப்ரல் மாதம் பரிசோதனை அடிப்படையில் கொரோனா தடுப்பு மருந்து அளிக்கப்பட்டது. அது எந்தவிதமான எதிர்ப்பு சக்தியை உடலில் உருவாக்குகிறது என்று நிபுணர்கள் ஆராய்ந்து வந்தனர்.
இதில், மருந்து உட்கொண்ட 18 முதல் 55 வயதுக்கு உட்பட்டவர்கள் அனைவரது உடலிலும் நல்ல நோய் எதிர்ப்பு சக்தி உருவாகி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாக ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தின் ஜென்னர் இன்ஸ்டிடியூட் இயக்குனர் டாக்டர் ஆட்ரியன் ஹில் தெரிவித்தார். இதற்கு அடுத்த கட்டமாக இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பிரேசிலில் உள்ள 10,000 பேருக்கு கொடுத்து பரிசோதிக்கப்பட்டு வருகிறது. மூன்றாவது கட்டமாக அமெரிக்காவில் 30,000 பேருக்கு கொரோனா தடுப்பு மருந்து வழங்கி சோதனை நடத்தப்பட உள்ளது. இந்நிலையில், இங்கிலாந்தில் ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகம் மற்றும் அஸ்ட்ராஜெனெகா கண்டுபிடித்த அடெநோவைரல், லண்டன் இம்பீரியல் காலேஜ் மற்றும் பயோஎன்டெக்/பிவிட்சர் நிறுவனம் கண்டுபிடித்த எம்ஆர்என்ஏ தடுப்பு மருந்து, வால்னெவா நிறுவனத்தின் மருந்து உள்ளிட்ட மூன்று கொரோனா தடுப்பு மருந்துகள் பாதுகாப்பானவை என்பது உறுதிபடுத்தப்பட்டு உள்ளது.
இதனைத் தொடர்ந்து, இந்த மூன்று நிறுவனங்களுடனும் இங்கிலாந்து அரசு 9 கோடி கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிக்க ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் அலோக் சர்மா தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், “கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க வேண்டும் என்ற தேடலில் இங்கிலாந்து உலக சாதனை படைத்துள்ளது. இங்கிலாந்து மக்கள் அனைவருக்கும் எளிதில் கிடைக்கும் பாதுகாப்பான இந்த மருந்து விரைவில் பயன்பாட்டிற்கு வர உள்ளது. உலகின் மிக சிறந்த மருந்து மற்றும் தடுப்பு மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் இங்கிலாந்து பாதுகாப்பான, மிக சிறந்த தடுப்பு மருந்து கண்டுபிடித்திருப்பதை விரைவில் உறுதிபடுத்தும்’’ என்று கூறினார்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459