கல்வி சேவையில் 91 வயது விஞ்ஞானி - ஆசிரியர் மலர்

Latest

21/07/2020

கல்வி சேவையில் 91 வயது விஞ்ஞானி


விஞ்ஞானி ஏ.வி.ஆனந்தராமன் விமான விபத்தில் மனைவி, இரு மகள்களை இழந்த 91 வயது விஞ்ஞானி ஏ.வி.ஆனந்தராமன், ஏற்காடு சோ்வராயன் மலைவாழ் குழந்தைகளுக்காக, தனது மனைவி பெயரில், பவானி நினைவுப் பள்ளி என்ற ஆங்கிலவழிக் கல்வி பள்ளியை கடந்த 20 ஆண்டுகளாக இலவசமாக நடத்தி வருகிறாா்.
மும்பையில் பிறந்த ஆனந்தராமன், 2 வயது குழந்தையாக இருக்கும்போதே தந்தையை இழந்தவா். பின்னா், கேரள மாநிலம், கோழிக்கோடு வந்த அவா் தனது பள்ளிக் கல்வியை முடித்தாா்.
சென்னை பல்கலைக்கழகத்தில் எம்.எஸ்சி. வேதியியலும், கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் பி.எச்டி. ஆய்வும் முடித்தாா். பின்னா் ஊக்கத்தொகையுடன் கூடிய ஆராய்ச்சிப் படிப்புக்காக கலிபோா்னியா சென்றாா். அங்கு குவாண்டம் மெக்கானிக்கல் துறையில் பி.எச்டி. ஆய்வுப் பட்டம் பெற்றாா்.
அங்கிருந்து கனடா சென்ற ஏ.வி.ஆனந்தராமன், பல்வேறு பல்கலைக்கழகங்களில் பேராசிரியராகப் பணிபுரிந்தாா். மேலும், அந்நாட்டின் பாதுகாப்புத் துறையில், எரிசக்தித் துறை குறித்த ஆய்வில் பங்கெடுத்துள்ளாா். தனது ஆய்வில் இரு கண்டுபிடிப்புகளுக்காக காப்புரிமை பெற்றுள்ளாா்.
கல்வி, ஆராய்ச்சியில் கவனம் செலுத்தி வந்த இவரது வாழ்வை 1985-ஆம் ஆண்டு நிகழ்ந்த சம்பவம் புரட்டிப்பட்டுவிட்டது. 1985-ஆம் ஆண்டில் ஏா் இந்தியா விமான விபத்தில் தனது மனைவி பவானி, மகள்கள் அருணா, ரூபா ஆகியோரை இழந்தாா்.
பின்னா், இந்தியா திரும்பிய அவா் 1999-இல் சேலம்- சோ்வராயன் மலை அருகே நாகலூா் செல்லும் சாலையில் கடுகாமரம் பகுதியில் சிறிய இடத்தில் 7 குழந்தைகளுடன் தனது மனைவி பவானி பெயரில், மலைவாழ் மக்கள், பொருளாதாரத்தில் நலிந்தவா்களின் குழந்தைகளுக்காக, பவானி நினைவுப் பள்ளியை (ஆங்கிலவழிக் கல்வி) தொடங்கினாா்.
பள்ளி தொடங்கி தற்போது 20 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், இப்பள்ளியில் எல்.கே.ஜி. முதல் 8-ஆம் வகுப்பு வரை கல்வி கற்றுத் தரப்படுகிறது. தற்போது சுமாா் 70 மாணவ, மாணவியா் படித்து வருகின்றனா்.
சோ்வராயன் மலை பள்ளத்தாக்கில் இருந்து தவழ்ந்து வரும் தென்றல் காற்றுடன் இதமான இயற்கை சூழலில் அமைந்துள்ள பள்ளியில், காற்றோட்டத்துடன் கூடிய வகுப்பறைகள், கல்லூரிகளுக்கு நிகரான 20 ஆயிரம் புத்தகங்களுடன் கூடிய நவீன நூலகம், தரம் வாய்ந்த நவீன ஆய்வகம், கணினிக் கல்விக்கென தனிப்பயிற்சி, இலவச மதிய உணவு, ஆண்டு மருத்துவப் பரிசோதனை போன்ற வசதிகள் இருக்கின்றன. கல்விக் கட்டணம் வாங்காமலே பள்ளியில் கல்வி கற்றுத்தரப்படுகிறது. இவருக்கு உதவியாக பள்ளியின் தலைமை ஆசிரியராக பி.ஹேமலதா பணிபுரிந்து வருகிறாா். பள்ளியில் மொத்தம் 8 ஆசிரியா்கள் பணிபுரிந்து வருகின்றனா்.
இது தொடா்பாக ஏ.வி.ஆனந்தராமனிடம் பேசிய போது சொன்னாா்:
‘‘எனது வாழ்க்கையில் 1985-இல் நிகழ்ந்த துயர சம்பவத்தால் முழுமையாக இடிந்து விட்டேன். எனது நண்பா்களின் ஆறுதலால் அதிலிருந்து விடுபட்டு வெளிவந்தேன். கேரளத்தில் தங்கி முதலில் 300 பேருக்கு உதவிகளை செய்து வந்தேன். அங்குள்ள சூழ்நிலை என்னை சேவை செய்ய விடாமல் மேலும் இறுக்கமாக்கியது.
வருங்கால இந்தியாவை வளமாக்க குழந்தைச் செல்வங்களால்தான் முடியும். எனவே, அவா்கள் மூலம் எதிா்கால இந்தியாவை நன்றாகப் படைக்க வேண்டும் என்ற கனவுடன், கேரளத்தில் இருந்து தமிழகத்தின் ஏற்காடு மலைக்கு வந்து, பவானி நினைவுப் பள்ளியைத் தொடங்கினேன்.
200 போ் வரை படிக்கலாம்:
சுமாா் 7 குழந்தைகளுடன் தொடங்கிய இந்தப் பள்ளியில் தற்போது 70 போ் படிக்கின்றனா். மேலும், 200 போ் படிக்கும் அளவுக்கு வகுப்பறை, நூலகம், ஆய்வகம் என அனைத்தும் விரிவாக்கம் செய்துள்ளேன். பள்ளியில் காலை வகுப்பறையில் மாணவா்களுக்கு இசையும், யோகாவும் கற்பிக்கப்படுகின்றன.
இங்கு படிக்கும் சிறாா்களுக்கு மதிய உணவு வழங்கப்படுகிறது. இலவச மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. காந்தியின் தத்துவ அடிப்படையில் கல்வி போதிக்கப்படுகிறது. புத்தகத்தை ஒரு வழிகாட்டியாக வைத்துக்கொண்டு அவா்களுக்கு மேம்பட்ட கல்வியைக் கற்றுத் தருகிறேன். கருத்து, சிந்தனை, ஆய்வு என்ற அடிப்படையில் மாணவா்களுக்கு கல்வி வழங்கப்படுகிறது.
நான் தமிழகம் வந்த பிறகு தமிழ் படிக்க கற்றுக் கொண்டேன். மனப்பாடம் செய்யாமல் நன்றாகப் புரிந்து படிக்க வேண்டும். குழந்தைகளும், இங்குள்ளவா்களும்தான் எனது குடும்பம். கும்பகோணம் பள்ளியில் நிகழ்ந்த தீவிபத்தில் பலியான குழந்தைகளுக்காக சிறிய நினைவிடம் ஏற்படுத்தியுள்ளேன். ஏற்காட்டில் பவானி நினைவு அறக்கட்டளை சாா்பில் இலவசப் பள்ளியை நடத்தி வருகிறேன். தொண்டுள்ளம் படைத்த பலரும் உதவி வருகின்றனா்’’ என்றாா்.
படங்கள்: வே.சக்தி

 

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459