வசூல் வேட்டையில் தனியார் பள்ளிகள் * சூழலை சாதகமாக்குமா அரசுப் பள்ளிகள் - ஆசிரியர் மலர்

Latest

07/06/2020

வசூல் வேட்டையில் தனியார் பள்ளிகள் * சூழலை சாதகமாக்குமா அரசுப் பள்ளிகள்





 பள்ளியை விட்டு வெளியில் வரும்போது தங்கள் குழந்தைகளுக்கு சிறந்ததொரு எதிர்காலம் காத்திருக்கிறது என்ற நம்பிக்கையுடன்தான், பெற்றோர் தாங்கள் பாடுபட்ட பணத்தையெல்லாம் படிப்புக்காக வாரி இறைக்கின்றனர். அவர்களின் ஒரே குறிக்கோள், ஆசை எல்லாமே, கஷ்டம் தங்களோடு போகட்டும்; குழந்தைகளாவது நன்றாக வாழட்டும் என்பதுதான். இதனால், எவ்வளவு கஷ்டம் இருந்தாலும் நல்ல பள்ளியாக பார்த்து பிள்ளைகளை சேர்க்கின்றனர்.
ஆனால், இந்த எதிர்பார்ப்புகள் இனியாவது நிறைவேறுமா என்ற மனநிலையை பெற்றோர் மத்தியில் உருவாக்கி விட்டது கொரோனா.  ஊரடங்கில் பள்ளிகள் மூடப்பட்ட பிறகு, ‘லீவு விட்டாச்சு’ என்ற குதூகலம் பள்ளிக் குழந்தைகளுக்கு இருந்தது. ஆனால், நாட்கள் செல்லச்செல்ல வீடே அவர்களுக்கு சிறைவாசம் ஆகிவிட்டது. கல்லூரி மாணவர்கள் பலர், ஊரடங்கில் பெற்ேறாரின் வருவாய் குறைந்து கஷ்டப்படும் நிலையைப் பார்த்து, தங்கள் எதிர்காலம் என்னவாகுமோ என்று அச்சப்பட தொடங்கியிருக்கின்றனர். அந்த அளவுக்கு துறைதோறும் பாதிப்பை உருவாக்கிய கொரோனா, கல்வித்துறையையும் விட்டு வைக்கவில்லை. ஊரடங்கில் சில தளர்வுகள் வந்தபோதும், பள்ளி, கல்லூரிகள், கல்வி நிறுவனங்கள் திறப்பது பற்றி அரசு தரப்பில் எந்த முடிவும் செய்யவில்லை. காரணம், கொரோனா சமூக பரவல் நிலையை எட்டியுள்ளதால், முடிவு எடுக்க அரசுகள் திணறி வருகின்றன. எனவே, கல்வித்துறை நிறைய பாதிப்பை சந்தித்துள்ளது.
 மூடப்பட்டுள்ள பள்ளி, கல்லூரிகள் ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் திறக்கப்படலாம் என்று கூறப்படுகிறது
. இதன் மூலம் பள்ளி, கல்லூரி வேலைநாட்களில் ஏற்பட்டுள்ள பாதிப்பும், கற்றல், கற்பித்தலில் ஏற்படும் தேக்கமும், அதனால் தேர்வுகளில் ஏற்படும் பாதிப்பும் கண் முன்னே நிழலாடுகின்றன.  இத்தகைய சூழலில் பள்ளி இறுதி வகுப்பை முடித்து கல்லூரியில் அடியெடுத்து வைக்கும் நடுத்தர மற்றும் அடித்தட்டு மக்களின் பிள்ளைகளின் ஆசையில் மண் விழுந்துள்ளது. இதுதவிர தங்கள் பிள்ளைகளுக்கு ஆங்கிலவழிக் கல்வியை எப்படியாவது தர வேண்டும் என்ற ஆசையில் தனியார் பள்ளிகளில் சேர்த்துள்ள 10 முதல் 20 சதவீத நடுத்தர வர்க்க மக்கள் தற்போது அரசுப்பள்ளிகளை நாடத்தொடங்கியுள்ளனர். இவ்வாய்ப்பை தக்க வைக்கும் முயற்சியில் அரசு இறங்க வேண்டும் என்ற குரல்களும் ஓங்கி ஒலிக்க தொடங்கியுள்ளன. அதேபோல், குறிப்பிட்ட சதவீத கல்லூரி, தகவல் தொழில்நுட்ப கல்லூரிகளில்  படிக்கும் அடித்தட்டு, நடுத்தர வர்க்க குடும்பத்து பிள்ளைகள் படிப்பை  பாதியில் விடும் நிலைக்கு தள்ளப்படலாம் என்ற அச்சமும் எழுந்துள்ளது. இதனால் பல தனியார் பள்ளிகள், சுயநிதி கல்லூரிகள், தகவல் தொழில்நுட்ப மற்றும் பொறியியல் கல்லூரிகள் அடுத்து என்ன செய்வது என்று விழிபிதுங்கி நிற்கின்றன.
 இது ஒருபுறம் என்றால் கொரோனாவால் கட்டணம் வசூலிக்க தடை போன்ற கெடுபிடிகளுடன், தங்களிடம் பணியாற்றும் ஆசிரியர்கள், பணியாளர்களுக்கான ஊதியம் உட்பட இதர செலவினங்களை ஈடுகட்ட தனியார் பள்ளிகள், சுயநிதி கலை அறிவியல் கல்லூரி, பொறியியல் கல்லூரிகளும், சுயநிதி பல்கலைக்கழக நிர்வாகங்களும் திணறி நிற்கின்றன
. ஊரடங்கு முடிந்து இயல்புநிலை திரும்பினாலும் இந்நிலை மாற பல ஆண்டுகள் ஆகலாம். எனவே, நாட்டின் கல்வி நிலை கொரோனாவால் மேலும் மோசமாகாமல் தடுப்பதில் மத்திய, மாநில அரசுகளின் உதவிக்கரங்கள் நிச்சயம் தேவை என்கின்றனர் கல்வியாளர்கள்.
 இதுதவிர,  கொரோனாவால் நாட்டின் ஒவ்வொரு குடும்பத்திலும் பொருளாதார நிலையிலும்  ஏற்பட்டுள்ள தடுமாற்றம் அக்குடும்பத்தின் இளைய தலைமுறையின் எதிர்காலத்தில்  தாக்கத்தை ஏற்படுத்தும் அச்சம் எழுந்துள்ளது.

பள்ளிக் கட்டணத்துக்கும் இஎம்ஐ பகல் கொள்ளை

ஊரடங்கால் மக்கள் வருவாய்  இழந்து தவிக்கும் நிலையில் கூட, பல தனியார் கல்வி நிறுவனங்கள் இப்போதே  கட்டணங்களை வசூலிக்க தீவிரம் காட்டி வருகின்றன. ஊரடங்கு முடியும் வரை  கல்விக் கட்டணத்தை வசூலிக்கக் கூடாது என அரசு எச்சரிக்கை விடுத்தும்,  பள்ளிகள் கட்டணம் வசூலிக்க புதுப்புது உத்திகளை கடைப்பிடித்து வருகின்றன.  சில பள்ளிகள் கட்டணத்தை வட்டியுடன் தவணையாக நிதி நிறுவனங்களில் செலுத்த  கட்டாயப்படுத்துவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. அப்படி தவணை  செலுத்தினால், வட்டி மட்டுமே 19 சதவீதத்துக்கு மேல் வந்து விடும். அதோடு  பரிசீலனை கட்டணம் 3 சதவீதம் சேர்ந்து விடுகிறது. ஏற்கெனவே நிதி  நெருக்கடியில் உள்ள மக்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். கந்து வட்டிக்கு  கடன் வாங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதை கருத்தில் கொண்டு அரசு  நடவடிக்கை எடுக்க வேண்டும். அதோடு, அதிக கட்டண வசூலை கட்டுப்படுத்த அரசு  நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் வலியுறுத்துகின்றனர்.

பாடங்கள் குறைப்பால் கல்வித்தரம் குறையாதா?  

ஜூன் மாதம் தொடங்க வேண்டிய கல்வியாண்டு இந்தாண்டு எப்போது தொடங்கும் என தெரியவில்லை. மாணவர்களுக்கு பாடப்பகுதியை குறைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஏற்ெகனவே 1ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சியடைந்தவர்களாக அறிவித்துள்ளனர். இதில் 50 சதவீதத்திற்கு அதிகமாேனார் கற்றல்திறன் குறைபாடுள்ளவர்கள் என்று அறியப்பட்டுள்ளது. இவர்கள், ஒரு வகுப்பில் இருந்து மற்றொரு வகுப்பு செல்லும்போது கற்றல் திறன் மிகுந்த மாணவர்களாக செல்ல வேண்டும்
. இந்த சூழ்நிலையில், பாடக்குறைப்பை வைத்து மாணவர்களுக்கு கற்பிக்கும் நிலையில் அது தரமான கல்வியாக இருக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

கற்கும் திறன் குறைந்த மாணவர்கள் நிலை என்ன?

தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதுபவர்கள் சராசரியாக 9 லட்சம் பேர். இதில் மெல்ல கற்கும் மாணவர்களால் அரசு பள்ளிகளில் 10ம் வகுப்பு தேர்ச்சி வீதம் குறைந்து வருகிறது. எனவே, இவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகின்றன. ஆனால், 2 மாதங்களுக்கு மேல் பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால், முதல் மதிப்பெண் எடுக்கும் மாணவர்களே திகைத்து நிற்கின்றனர். தமிழகத்தில் உள்ள 57 ஆயிரம் அரசு, நிதியுதவி பள்ளிகளில் 87 லட்சம் பேர் பயின்று வருகின்றனர். இதில் ஒவ்வொரு வகுப்பிலும் குறைந்தது 20 முதல் 30 சதவீதம் பேர் மெல்லக் கற்கும் திறன் கொண்டவர்கள். புதிய பாடத்திட்டத்தின் கீழ் தேர்வு நடைபெறும் நிலையில், அவர்களின் தேர்ச்சி விகிதம் கேள்விக்குறி ஆகியுள்ளது.

ஆன்லைன் முறையில் பாடம் படிப்பில் இல்லை நாட்டம்

பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் படிப்பு பாதிக்கப்படுவதை கருத்தில் கொண்டு, ஆன்லைன் முறையில் பாடம் நடத்தப்படுகிறது. செல்போன் வாயிலாக ஆன்லைன் வகுப்பில் மாணவர்கள் பங்கேற்கின்றனர்.
ஆனால், படிப்பில் கவனம் செலுத்துவதைவிட, செல்போன் மீதான மோகம்தான் மாணவர்களுக்கு அதிகரித்து வருகிறது.
சமூக வலைதளங்களில் கவனம் செலுத்தி வருகின்றனர் என பெற்ேறார் சிலர் வேதனைப்படுகின்றனர். இதே நிலை தொடர்ந்தால், மாணவர்களின் கல்வித்தரம் பாதிககப்படும். நன்றாக படிக்கும் மாணவர்களும் பாதிக்கப்பட வாய்ப்புகள் உள்ளன என மனநல மருத்துவர்கள் கூறுகின்றனர். கேரளா மாநிலம், மலப்புரத்தில் 9ம் வகுப்பு மாணவி ஆன்லைன் வகுப்பில் பங்கேற்க டிவி, செல்போன் இல்லாததால் மன உளைச்சல் ஏற்பட்டு தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார். இதுபோன்று, ஆன்லைன் வகுப்பில் கூட பங்கேற்க முடியாத நிலை பல மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

படிப்பையே முடிக்கலை வந்துருச்சு புது கவலை

ஏற்கெனவே படித்து முடித்த பட்டதாரிகள் பலர் வேலையின்றி காத்திருக்கின்றனர். வேலை வாய்ப்புக்காக பதிவு செய்திருப்பவர்கள் 84,97,402 பேர். இவர்களில் ஆண்கள் 41,72,521, பெண்கள் 43,24,881.
இவர்களில், இடைநிலை ஆசிரியர்கள் 81,777, பட்டதாரி ஆசிரியர்கள் 3,91,816, தகவல் தொழில்நுட்பம், பொறியியல் பட்டதாரிகள் 2 லட்சம், கலை பட்டதாரிகள் 4.26 லட்சம், அறிவியல் பட்டதாரிகள் 5.69 லட்சம், வணிகவியல் பட்டதாரிகள் 3.22 லட்சம், அரசுத்துறைகளில் நிரப்பப்படாத காலி பணியிடங்கள் 3 லட்சம் பேர் உள்ளனர். பொறியியல் பட்டதாரிகளாக இந்தியாவில் 7.5 லட்சம் பேர், தமிழகத்தில் 1.5 லட்சம் பேர் ஒவ்வொரு ஆண்டும் வெளியில் வருகின்றனர். கலை அறிவியல் பட்டதாரிகளாக நாடு முழுவதும் 15 லட்சம் பேர், தமிழகம் 2 லட்சம் பேர் உள்ளனர். அரசுத்துறைகளில் நிரப்பப்படாத காலி பணியிடங்கள் 3 லட்சம் உள்ளன. இந்த சூழ்நிலையில், ஒவ்வொரு ஆண்டும் வேலை வேண்டி  பதிவு செய்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது. இந்த சூழ்நிலையில், படிப்பை ஒழுங்காக முடிக்க முடியாமல் தடுமாறும் மாணவர்கள், எதிர்காலத்தை நினைத்து இப்போதே கவலைப்படத் துவங்கி விட்டனர்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459