கொரோனா நோய்த்தொற்றின் தாக்கம் குறைந்த பின்பு தேர்வுகளை நடத்த வேண்டும் - தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி - ஆசிரியர் மலர்

Latest

07/06/2020

கொரோனா நோய்த்தொற்றின் தாக்கம் குறைந்த பின்பு தேர்வுகளை நடத்த வேண்டும் - தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி



*பேரன்புமிக்க நம் பேரியக்கத்தின் பெருமைக்குரிய தோழர்களே!வணக்கம்.*

*கொரோணா நோய்த்தொற்று குவலயத்தையே குலை நடுங்கச் செய்து கொண்டிருக்கிறது. நோய்த்தொற்றின் தாக்கம் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே உள்ளது. நோய்த்தொற்றின் தாக்கத்தில் இந்தியாவிலேயே இரண்டாவது இடத்தில் தமிழகம் இருப்பது மிகப் பெரிய கவலையை ஏற்படுத்தியுள்ளது. மாநிலத் தலைநகர் சென்னையில் கொடுந்தொற்றின் தாக்குதல் அச்சமூட்டிக்  கொண்டிருக்கிறது.*

*ஐந்தாவது முறையாக சில தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு 30.06.2020 வரை நடைமுறையில் உள்ளது.
வாழ்வாதாரத்தை இழந்த மக்கள் சில தளர்வுகள் காரணமாக கொஞ்சம் கொஞ்சமாகத் தங்கள் பணிக்குச் செல்லத் தொடங்கியுள்ளனர். ஊரடங்கு உதவிப் பணிகளில் மாநிலம் முழுவதும் நம் இயக்கத் தோழர்கள் ஆற்றிய உதவிப் பணிகள் மகத்தானவை. தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட,வட்டார,நகரக் கிளைகள் மாநிலம் முழுவதும் செய்த உதவிப் பணிகளின் மொத்த மதிப்பு 2 கோடியே 20 லட்சம் ரூபாயைத் தாண்டியுள்ளது. ஆசிரியர் இயக்க வரலாற்றில் இது ஒரு தன்னிகரற்ற சாதனை என்றே கூறவேண்டும்.*

*மேற்கண்ட உதவிப் பணிகள் தொடர்பாக அனைத்து மாவட்டச் செயலாளர்களும் தங்கள் மாவட்டத்தில் உதவிப் பணிகள் நடைபெற்ற விவரம், உதவிப் பணிகளில் ஈடுபட்ட வட்டார,நகரக் கிளைகளின் விவரம், தங்கள் மாவட்டத்தில் உதவிப் பணிகளுக்கு செலவிடப்பட்ட தொகை, உதவிப் பொருட்கள் வழங்கப்பட்ட பகுதிகள், வழங்கப்பட்ட உதவிப் பொருட்கள் விவரம், உதவிப் பொருட்கள் வழங்கப்பட்ட விதம், உதவிப் பொருட்கள் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்ட அரசு அதிகாரிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் விவரம், உதவிப் பொருட்கள் பெற்றவர்களின் விவரம்,உதவிப் பொருட்கள் வழங்கும் நிகழ்வுகள் தொடர்பான புகைப்படங்கள், ஆவணங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய விரிவான அறிக்கையொன்றை மாநில மையத்திற்கு 20. 06.2020 க்குள் அளித்திட மாநில மையம் அன்புடன் கேட்டுக்கொள்கிறது.*

*பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வை 15.06. 2020 முதல் நடத்திட தமிழக அரசு தீவிர ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருக்கிறது. பதினோராம் வகுப்புப் பொதுத் தேர்வும் தொடர்ந்து நடைபெற உள்ளது. இரண்டு பொதுத் தேர்வுகளிலும் சுமார் 19 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுத உள்ளனர். பொதுத்தேர்வுப் பணியில் 3 லட்சம் ஆசிரியர்கள் ஈடுபட உள்ளனர்.22 லட்சம் பேரின் உயிர்ப் பாதுகாப்பு என்பது மிக மிக முக்கியமானது. பொதுத்தேர்வை தள்ளிவைக்க வேண்டும் அல்லது ரத்து செய்ய வேண்டும் என கல்வியாளர்கள், ஆசிரியர் சங்கங்கள் பெற்றோர்கள், மாணவர்கள் பொதுமக்கள் எனப் பல தரப்பினரும் வைத்த கோரிக்கையைத் தமிழக அரசு புறந்தள்ளிவிட்டது. தேர்வை விட உயிர் முக்கியமானது என்பதைத் தமிழக அரசு உணர மறுத்து விட்டது.*

 *கடந்த ஜூன் 1-ஆம் தேதி பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட போது அதை எதிர்த்துத் தொடரப்பட்ட பொதுநல வழக்கில் உயர்நீதிமன்றம், "

"மாணவர்களின் பெற்றோர் அல்லது ஆசிரியர்கள் ஏன் வழக்குத் தொடுக்கவில்லை?" என்று கேள்வி எழுப்பி வழக்கைத் தள்ளுபடி செய்தது.ஆனால்,இந்த முறை ஒரு மாணவரின் தந்தை தொடுத்த வழக்கைத் தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம் "இது அரசின் கொள்கை முடிவு"என்று தெரிவித்துள்ளது.*


*பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வுப் பணிகளில் தொடக்கக் கல்வித் துறையில் பணியாற்றும் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. இன்னும் பொதுப் போக்குவரத்து முழுமையாக நடைபெறவில்லை. மண்டலம் விட்டு மண்டலம் செல்ல முடியாது.ஊரடங்கு விடுமுறையில் தங்கள் சொந்த ஊர்களுக்குச் சென்ற ஆசிரியர்கள் e-Pass க்கு விண்ணப்பித்து வர வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை கூறுகிறது. விண்ணப்பிக்கும்போது பயணம் செய்யும் வாகனத்தின் எண்ணைக் குறிப்பிட வேண்டும்.அப்படி என்றால் தனி வாகனம் ஒன்றை வாடகைக்கு எடுத்துத்தான் வரவேண்டும். நாகர்கோவிலில் இருந்து கிருஷ்ணகிரி செல்வதென்றால் வாகன வாடகை மட்டும் 20 ஆயிரம் ரூபாய் செலவாகும்.இதே போன்று புலம்பெயர் தொழிலாளர்களின் குழந்தைகள் தங்கள் சொந்த  ஊருக்கு சென்றிருந்தால், மேற்கண்ட இடர்பாட்டை அவர்களும் சந்தித்தே ஆக வேண்டும். இதுபோன்ற நடைமுறைச் சிக்கல்களைப் பற்றியெல்லாம் பள்ளிக்கல்வித்துறை சிந்திக்கவே இல்லை.
எனவே,பொதுப் போக்குவரத்து தொடங்கிய பின்பு, நோய்த்தொற்றின் தாக்கம் குறைந்த பின்பு தேர்வுகளை நடத்த வேண்டும் என்று தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தமிழக அரசைக் கோருகிறது.*

 *தமிழ்நாட்டின் ஆசிரியர் இயக்க வரலாற்றில், இடைநிலை ஆசிரியர் ஊதிய மீட்புக்காக தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி நடத்திய,தனி முத்திரை பதித்த,வரலாற்றுச் சிறப்புமிக்க அரசாணை எரிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு 17(ஆ) நடவடிக்கைக்கு உள்ளான நம் இயக்கத் தோழர்கள் மீதான 17(ஆ) நடவடிக்கை சில மாவட்டங்களில் ரத்து செய்யப்பட்டு இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. உயர் நீதிமன்றத் தீர்ப்பின்படி 17(ஆ) நடவடிக்கைகளை ரத்து செய்து உத்தரவிட்ட, ஈரோடு மாவட்டத்தில் கோபிசெட்டிபாளையம் கல்வி மாவட்டம், சத்தியமங்கலம் கல்வி மாவட்டம், பவானிசாகர் கல்வி மாவட்டம்,ஈரோடு கல்வி மாவட்டம்,மதுரை மாவட்டத்தில் உசிலம்பட்டி கல்வி மாவட்டம், திருநெல்வேலி மாவட்டத்தில் வள்ளியூர் கல்வி மாவட்டம் ஆகிய கல்வி மாவட்டங்களின் மாவட்டக்கல்வி அலுவலர்களுக்கு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில அமைப்பு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.மேற்கண்ட மாவட்டங்களில் 17(ஆ)வை ரத்து செய்வதற்காகத் தொடர் முயற்சிகளை மேற்கொண்ட  அந்தந்த மாவட்டக் கிளைகளுக்கு மாநில மையம் தனது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறது.*

*அரசாணை எரிப்புப் போராட்ட 17(ஆ) நடவடிக்கையை ரத்து செய்திட மற்ற மாவட்டங்களிலும் அந்தந்தக் கிளைத் தோழர்கள் தொடர் முயற்சிகளை மேற்கொள்ள மாநில மையம் அன்புடன் கேட்டுக்கொள்கிறது.*

*17(ஆ)நடவடிக்கையை மேற்கொண்டவர் மாவட்டக்கல்வி அலுவலர் என்றால் அவர் மூலமாகவும், வட்டாரக் கல்வி அலுவலர் என்றால் அவர் மூலமாகவும் விரைந்து ரத்து செய்திட விடாமுயற்சியுடன் செயல்பட வேண்டும். அரசாணை எரிப்புப் போராட்ட 17(ஆ) நடவடிக்கை என்பது தமிழகம் முழுவதும் ஒரே விதமான குற்றச்சாட்டின் பேரில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை ஆகும்.காவல் துறையின் முதல் தகவல் அறிக்கையின் பேரிலான நடவடிக்கை ஆகும்.21 மாவட்டங்களில் காவல்துறை பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையை உயர் நீதிமன்றம் ரத்து செய்து விட்டது
.எனவே, அனைத்து மாவட்டங்களிலும் சட்டப்படி 17(ஆ) ரத்து செய்யப்பட வேண்டும்.அதிலும் சில கல்வி மாவட்டங்களில் 17(ஆ) ரத்து செய்யப்பட்ட பிறகு மற்ற மாவட்டங்களில்  அதை நிலுவையில் வைத்திருப்பது என்பதும் சட்டப்படி தவறாகும்.ஒரே மாதிரியான குற்றச்சாட்டிற்கு வெவ்வேறு விதமான நடவடிக்கைகளை கல்வித்துறை மேற்கொள்ள முடியாது.*

*எனவே, மாநிலம் முழுவதும் அரசாணை எரிப்புப் போராட்ட 17(ஆ) நடவடிக்கைகள் நிலுவையிலுள்ள மாவட்டக் கிளைகளின் நிர்வாகிகள் தொடர் நடவடிக்கை மேற்கொண்டு 17(ஆ) வழங்கிய அலுவலர்களை நேரில் சந்தித்து மற்ற மாவட்டங்களில் 17(ஆ)ரத்து செய்யப்பட்டதற்கான ஆதாரங்களைக் கொடுத்து தங்கள் மாவட்டத்திலும் ரத்து செய்து ஆணை பெற்றிட மாநில மையம் தோழமையுடன் கேட்டுக் கொள்கிறது.*

*தோழமையுடன்*
 *ச.மயில்*
*பொதுச் செயலாளர்*
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி*

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459