New
தஞ்சாவூர்: தஞ்சாவூர் சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெறவுள்ள மாணவர்களுக்கான இறுதிப் பருவத் தேர்வும், இளையோருக்கான அக மதிப்பீடும் இணையவழியில் நடத்த பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து அப்பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் எஸ். வைத்திய சுப்பிரமணியம் தெரிவித்திருப்பது:
சாஸ்த்ரா கல்விக் குழுவின் 38ஆவது கல்வி அலுவல் குழுக் கூட்டம் இணையவழி மூலம் புதன்கிழமை நடைபெற்றது. இதில், இந்திய அறிவியல் கழகம், இந்திய தொழில்நுட்பக் கழகம் – சென்னை, தில்லி, பெங்களூரு ஆகியவற்றின் மூத்தப் பேராசிரியர்கள், சாஸ்த்ரா புல முதன்மையர்கள், இணை முதன்மையர்கள், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் மாணவர் வருகை, இறுதிப் பருவத் தேர்வுகள், மதிப்பீடு தொடர்பான பிரச்னைகள் குறித்து விவாதித்து ஒப்புதல் பெறப்பட்டது.
2020 ஆம் ஆண்டில் பட்டப்படிப்பை முடிக்கும் பொறியியல், சட்டம், கல்வியியல், மேலாண்மைத் துறை மாணவர்களுக்கு இணையவழியில் இறுதிப் பருவத் தேர்வும், அதைத் தொடர்ந்து வாய்மொழித் தேர்வும் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. முதலாமாண்டு, இரண்டாமாண்டு போன்ற இளைய வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு இதுவரை நடத்தப்பட்ட உள் தேர்வுகளின் மதிப்பெண் அடிப்படையில் கிரேடு வழங்கப்படும். விரும்பும் மாணவர்களுக்கு கிரேடை உயர்த்த வாய்ப்பளிக்கும் வகையில் பின்னர் தேர்வு நடத்தப்படும்.
இந்தக் கல்வி அலுவல் குழு இளைய வகுப்பைச் சேர்ந்த தகுதியான மாணவர்களுக்குத் தங்கள் திட்ட அடிப்படையிலான பருவத் தேர்வுகளை அந்தந்த ஆசிரியர்களே நடத்திக் கொள்ள அனுமதிக்கலாம் என ஒப்புதல் அளித்தது.
இணையவழிக் கல்வி முக்கியத்துவம் பெறும் இந்த வேளையில் யுஜிசி, ஏஐசிடிஇ, என்சிடிஇ, பிசிஐ போன்ற அமைப்புகளின் வழிகாட்டுதலுக்கிணங்க 20 சதவீத அளவுக்கு இணையவழி மூலமும், 80 சதவீதம் நேரடியாகவும் பாடங்களை நடத்தி பருவத் தேர்வுக்கு 90 நாள்கள் அலுவல் திட்டத்தைச் சரிகட்டலாம்.
ஐம்பது சதவீத வருகைப் பதிவு பெற்றுள்ள மாணவர்களை மட்டுமே பருவத் தேர்வுகளுக்கு அனுமதிக்க வேண்டும். முன்னதாக மாணவர்கள், ஆசிரியர்கள், இதர தரப்பினரிடமிருந்து பெறப்பட்ட கருத்துகளின் அடிப்படையில் இணையவழித் தேர்வு உள்ளிட்ட விஷயங்களுக்கு பல முன்மாதிரிகள் இக்கல்வி அலுவல் குழுவில் முன் வைக்கப்பட்டன.
No comments:
Post a Comment