ஊரடங்கை மேலூம் நீட்டித்தால் பொருளாதாரம் மேலும் பாதிக்கும்.RBI முன்னாள் கவர்னர் - ஆசிரியர் மலர்

Latest

 




01/05/2020

ஊரடங்கை மேலூம் நீட்டித்தால் பொருளாதாரம் மேலும் பாதிக்கும்.RBI முன்னாள் கவர்னர்


புதுடெல்லி:
கொரோனா பரவல் காரணமாக நாட்டில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருப்பதால் அதன் விளைவுகள் எவ்வாறு இருக்கும்? என்பது குறித்து இந்தியா மற்றும் பல்வேறு நாடுகளில் உள்ள நிபுணர்களுடன் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கலந்துரையாடி, அவர்களுடைய கருத்துகளை கேட்டறிய திட்டமிட்டு உள்ளார். இதற்கான ஏற்பாட்டை காங்கிரஸ் கட்சி செய்து உள்ளது.
முதன் முதலாக நேற்று அவர் ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னரும், பிரபல பொருளாதார நிபுணருமான ரகுராம் ராஜனுடன்
, ஊரடங்கால் ஏற்படும் பொருளாதார பாதிப்புகள் குறித்து காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார்.
ரகுராம் ராஜன் தற்போது அமெரிக்காவில் உள்ள சிகாகோ பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். அங்கிருந்தபடி அவர் ராகுல் காந்தியுடன் கலந்துரையாடினார்.
அப்போது ரகுராம் ராஜன் கூறியதாவது:-
ஊரடங்கை தொடர்ந்து நீட்டிப்பது எளிதாக இருக்கலாம். ஆனால் அப்படி செய்யக்கூடாது. ஊரடங்கை தொடர்ந்து நீட்டிப்பது இந்தியாவின் பொருளாதாரத்துக்கு உகந்தது அல்ல. மேலும், மேலும் ஊரடங்கை நீட்டித்தால் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படும். மக்களுக்கு வேலை இழப்பும், வருவாய் இழப்பும் ஏற்படும்.
எனவே ஊரடங்கை நீக்குவதில் புத்திசாலித்தனமான அணுகுமுறை தேவை.
படிப்படியாக நீக்க வேண்டும். ஏனெனில் நீண்ட காலம் மக்களுக்கு உணவு வழங்குவதற்கான திறன் இந்தியாவிடம் இல்லை.
அதேசமயம் ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்திய பிறகு, நோய்த்தொற்று அதிகரிக்க தொடங்கினால், இதுவரை ஊரடங்கை அமல்படுத்தியதற்கு கிடைத்த வெற்றி என்ன? என்ற கேள்வி எழும். அதனால் மறுபடியும் ஊரடங்கை அமல்படுத்த வேண்டிய சூழ்நிலை உருவாகலாம். இதனால் அரசின் மீது மக்களுக்கு நம்பிக்கை குறையும்.
நோய்த்தொற்றை கண்டறிய இந்தியாவில் போதிய பரிசோதனை வசதிகள் இல்லாதது மிகப்பெரிய பலவீனம் ஆகும்
. இப்போதுள்ள பரிசோதனை எண்ணிக்கையை மூன்று மடங்காக அதிகரிக்க வேண்டும்.
தற்போதைய நிலையில் ஏழைகளுக்கு உதவ ரூ.65 ஆயிரம் கோடி தேவை. ரூ.200 லட்சம் கோடி மொத்த உள்நாட்டு உற்பத்தியை கொண்ட இந்தியாவுக்கு இது பெரிய தொகை அல்ல. இந்த பணம் ஏழைகளின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற உதவும்.
பெருந்தொற்று நோயான கொரோனா முடிவுக்கு வரும் போது பொருளாதாரத்தை மீட்டெடுப்பது பற்றிய புதிய சிந்தனை சர்வதேச அளவில் ஏற்படும். பல்வேறு நாடுகளுடனும் பேசி இந்திய பொருளாதாரத்தை மேம்படுத்த அந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
வேளாண்மை துறை, தொழிலாளர்கள், புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படவேண்டும். நேரடி மானிய திட்டம் முழுஅளவில் பயன் அளிக்க வேண்டும்.
நாடு பெரும் சவால்களை சந்தித்து இருக்கும் நிலையில், பல்வேறு தரப்பு மக்களிடமும் சமூக நல்லிணக்கம் நிலவவேண்டும். பிரிவினைக்கு இடம் தராமல் ஒற்றுமையுடன் செயல்பட்டு சவால்களை முறியடிப்பதன் மூலம் பொருளாதார வளர்ச்சியை உருவாக்க முடியும்.
கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக எடுக்கப்படும் நடவடிக்கைகளை பொறுத்தமட்டில் அமெரிக்காவையம், இந்தியாவையும் ஒப்பிட முடியாது. இந்திய சமூக கட்டமைப்பு மாறுபட்டது. மாநிலங்களில் நிலவும் பிரச்சினைகளும் மாறுபட்டவை
. அமெரிக்காவைப் போல் அல்லாமல் மாறுபட்ட சமூக கட்டமைப்பு உள்ளதால், ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் ஒரே மாதிரியான தீர்வை காண முடியாது.
இவ்வாறு ரகுராம் ராஜன் கூறினார்.
கலந்துரையாடலின் போது, ராகுல் காந்தியின் கருத்துகளை அறிவதற்காக அவரிடம் ரகுராம் ராஜன் சில கேள்விகளை கேட்டார்.
பஞ்சாயத்து ராஜ் பற்றி ரகுராம் ராஜன் எழுப்பிய கேள்விக்கு ராகுல்காந்தி பதில் அளிக்கையில்,
அது ஒரு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியதாகவும், ஆனால் அதன்பிறகு நிலைமை மாறிவிட்டதாகவும் கூறினார். என்றாலும் தென் மாநிலங்களில் அதிக அளவில் அதிகார பரவல் உள்ளதால் நல்ல வேலைவாய்ப்புகள் உருவாகி இருப்பதாக கூறிய ராகுல் காந்தி, வட மாநிலங்களை பொறுத்தவரை ஒரு இடத்திலேயே அதிகாரம் குவிந்து இருக்கும் நிலை காணப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459