தள்ளிப்போகிறது தமிழக தேர்தல்? ... - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

தள்ளிப்போகிறது தமிழக தேர்தல்? ...


தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் தள்ளிப் போவதற்கான அறிகுறிகள் தெரிய ஆரம்பித்திருக்கின்றன. குறிப்பாக இந்த விஷயத்தில் பாஜக அதிக ஆர்வம் காட்டுகிறது. அதேசமயம், ஆட்சி மாற்றத்தை எதிர்நோக்கியிருக்கும் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுக்கு இது ஷாக்!
கொரோனா தாக்கம் இல்லாத துறையே இல்லை. அடுத்தடுத்து வர இருக்கிற சட்டமன்றத் தேர்தல்களும் அதற்கு விதிவிலக்காக இருக்காது போல!
வியாழக்கிழமை நிலவரப்படி, இந்தியாவில் கொரோனா பாதிப்பு 30,000-ஐ கடந்திருக்கிறது. நாடு முழுவதும் பொது முடக்கத்தில் இருந்தபோதும், தினமும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்தபடியே இருக்கிறது.
குறிப்பாக மஹாராஷ்டிரா, குஜராத், மத்தியபிரதேசம், தமிழ்நாடு உள்ளிட்ட பெரிய மாநிலங்களில் பாதிப்பு அதிகமாக இருக்கிறது. நாடு முழுவதும் கல்வி நிறுவனங்களை செப்டம்பரில் திறக்க பரிசீலிக்கப்படுகிறது. இந்தச் சூழலில் தேர்தல் பிரசாரக் கூட்டங்களையோ, அதிகாரிகளை அது தொடர்பான பணிகளில் ஈடுபடுத்துவதையோ கற்பனை செய்ய முடியவில்லை.

குறிப்பாக பீகாரில் வருகிற அக்டோபர், நவம்பரில் சட்டமன்றத் தேர்தல் நடத்தப்பட வேண்டும். இன்றைய சூழலில், அது கேள்விக்குறியே. அடுத்து 2021 ஏப்ரல், மே மாதங்களில் தமிழ்நாடு, பாண்டிச்சேரி, அஸ்ஸாம், மேற்கு வங்கம் ஆகிய 4 மாநிலங்களில் தேர்தல் நடத்தப்பட வேண்டியிருக்கிறது.
தேர்தல்கள் என்றாலே பிரசாரம், பொதுக்கூட்டம் என ஜனத்திரளை தவிர்க்க முடியாது
. நாம் எதிர்பார்க்கும் வேகத்தில் கொரோனா தாக்கம் குறைந்தாலும்கூட, அடுத்த சில மாதங்களில் அப்படியொரு கூட்டத்தை அனுமதிக்க முடியுமா? என்கிற கேள்விகள் பல்வேறு மட்டங்களிலும் எழுப்பப்படுகின்றன.
தவிர, வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு தொடங்கி தேர்தல் பணிகளில் மொத்த அரசு இயந்திரமும் இயக்கப்பட வேண்டும். வாக்குப் பதிவு, வாக்கு எண்ணிக்கை என ஒவ்வொரு நடைமுறையும் கூட்டம் திரள்கிற செயல்பாடுகளாகவே இருக்கின்றன. என்னதான் கொரோனா குறைந்தாலும்கூட, அடுத்த சில மாதங்களுக்கு கடைபிடிக்கப்பட வேண்டிய சமூக விலகலுக்கு மேற்படி நடைமுறைகள் எதிரானவையாக இருக்கும்.
இந்தப் பின்னணியில்தான் தமிழகம், பீகார் உள்ளிட்ட 5 மாநிலங்களிலும் தேர்தல் தள்ளிப் போகும் என அதிகாரிகள் தரப்பிலேயே பேச ஆரம்பித்திருக்கிறார்கள்
. தமிழகத்தைப் பொறுத்தவரை இதில் பாஜக தரப்பு ஈடுபாடு காட்டுவதாகவும் தெரிய வருகிறது. இது குறித்து நம்மிடம் பேசிய தமிழக பாஜக நிர்வாகி ஒருவர், ‘தேர்தல் தள்ளிப் போனால் இதே அதிமுக அரசு தொடர சட்டத்தில் இடம் இல்லை. எம்.ஜி.ஆர். மறைவுக்கு பிறகு, தமிழகத்தில் பி.சி. அலெக்சாண்டர் ஓராண்டு ஆளுனராக இருந்தார்.
இந்திரா காந்தியின் உதவியாளராக இருந்தவரான அலெக்சாண்டர் நேர்மையான ஆட்சியைக் கொடுத்தார்.
அந்த நிகழ்வை அறிந்தவர்கள் மத்தியில் இப்போதும் சிலாகிப்பாக அது பேசப்படுகிறது. அதே போன்ற ஒரு ஊழலற்ற நிர்வாகத்தை இப்போதும் ஆளுனர் ஆட்சி மூலமாக தமிழகத்தில் உருவாக்கிக் காட்டலாம். அது அடுத்து வரவிருக்கும் அரசுக்கு ஒரு நல்ல முன்னோட்டமாக இருக்கும்.
தவிர, தமிழகத்தில் எந்த திராவிடக் கட்சியும் மதுவை ஒழிக்கப் போவதில்லை.
ஓராண்டு ஆளுனர் கையில் அதிகாரத்தைக் கொடுத்து மதுவை ஒழித்தால் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைக்கும். ஆளுனர் ஆட்சிக் காலத்தில் சில ஊழல்வாதிகள் மீது நடவடிக்கை எடுக்கும் வாய்ப்பும் அமையும். இதெல்லாம் பாஜக மீதும் தமிழக மக்களுக்கு நம்பிக்கையை அதிகப்படுத்தும்’ என்றார் அந்த நிர்வாகி.
தமிழகத்தில் தேர்தலை தள்ளி வைக்கும் வியூகத்தை இங்குள்ள பாஜக நிர்வாகிகள் சிலரே பாஜக.வின் தேசிய அமைப்புப் பொதுச்செயலாளர் சந்தோஷ், தமிழக பொறுப்பாளர் முரளிதரராவ் ஆகியோர் கவனத்திற்கு கொண்டு சென்றார்கள்.
விரிவான அறிக்கையாகவே அவர்கள் கேட்டிருப்பதாக கூறப்படுகிறது. எனினும் தேர்தல் ஆணையமே இதில் இறுதி முடிவு எடுக்கும். தேர்தல் ஆணைய முடிவும் இந்த திசை நோக்கி இருக்கவே வாய்ப்பு அதிகம் என நம்பிக்கை தெரிவிக்கிறார்கள், அரசியல் வட்டாரத்தில்!
Source : indian express tamil