சேவூர் அரசு பள்ளி மாணவர்களுக்கு அரிசி மளிகை பொருட்கள் வழங்கிய ஆசிரியர்கள் - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

சேவூர் அரசு பள்ளி மாணவர்களுக்கு அரிசி மளிகை பொருட்கள் வழங்கிய ஆசிரியர்கள்சேவூர் அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள், தங்களது பள்ளியில் பயிலும் 246 ஏழை மாணவர்களுக்கு உணவுப் பொருள்களை வழங்கி உதவிக்கரம் நீட்டியுள்ளனர். இதையடுத்து பொதுமக்கள் ஆசிரியர்களுக்குப் பாராட்டுத் தெரிவித்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் அவிநாசி வட்டம், சேவூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த 1100 மாணவ, மாணவியர்கள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் பொது முடக்கம் காரணமாக, ஏழ்மையில் வாழும் தங்களது பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு உதவி செய்ய முடிவு செய்தனர். இதன் ஒரு பகுதியாக, பள்ளி ஆசிரியர்கள் ஒன்றிணைந்து தங்களது சொந்த நிதி ரூ.1.50 லட்சத்தை ஒதுக்கினர். இதன் மூலம் பள்ளியில் பயிலும், 246 மாணவ, மாணவியர் குடும்பத்திற்கு, 5 கிலோ அரிசி, பருப்பு உள்ளிட்டவை அடங்கிய உணவுப் பொருள் தொகுப்பை வழங்கினர்.  
இதனைத் தகுதியான மாணவர்கள் தங்களது பெற்றோர்களை அழைத்து வந்து நீண்ட வரிசையில்  சமூக இடைவெளியுடன் நின்று, உணவுப் பொருள்களை வாங்கிச் சென்றனர். பள்ளித் தலைமையாசிரியர் ஜெ.பாஸ்கரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், பள்ளி ஆசிரியர்கள்,  முன்னாள் மாணவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தங்கள் பள்ளியில் பயிலும் ஏழை மாணவர்களுக்கு, உதவிக்கரம் நீட்டியது பொதுமக்களிடையே பெரும் மகிழ்ச்சியையும், பாராட்டையும் பெற்றுள்ளது.  சுள்ளிப்பாளையம் அரசுப் பள்ளி இதேபோல சேவூர் அருகே சுள்ளிப்பாளையம் அரசு நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள் தங்கள் சொந்த செலவில், பள்ளியில் பயிலும் 15 மாணவர்கள் குடும்பத்திற்கு உணவுப் பொருள்களை வழங்கினர்.