விதிகளை மீறும் உலக தலைவர்கள் - ஆசிரியர் மலர்

Latest

29/05/2020

விதிகளை மீறும் உலக தலைவர்கள்


உலகையே ஸ்தம்பிக்க வைத்திருக்கும் கரோனா நோய்த்தொற்று பரவலைத் தடுப்பதற்காக உலக நாடுகளின் அரசுகள் பொதுமக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளன
. முக்கியமாக, சமூக விலகலைக் கடைப்பிடிக்கவும் பொது இடங்களுக்கு வரும்போது முகக் கவசம் அணியவும் பொதுமக்கள் கட்டுப்படுத்தப்படுகின்றனா்.

ஆனால், இந்த விதிமுறைகளை பல்வேறு உலக நாடுகளின் தலைவா்கள் பலரே மீறி அதிா்ச்சியை ஏற்படுத்தி வருகின்றனா்.
கரோனா தீநுண்மிக்கு ஏழை, பணக்காரன் என்ற வித்தியாசம் இல்லை. சாதாரண பொதுஜனம், சக்தி வாய்ந்த அரசியல் தலைவா் என்றெல்லாம் அந்த தீநுண்மி பேதம் பாா்க்காது. இந்த நிதா்சனத்தை பொருள்படுத்தாமல் சில முக்கியத் தலைவா்கள் பாதுகாப்பு விதிமுறைகளை மீறிய சம்பவங்களில் சில….
– கரோனா நோய்த்தொற்றால் உலகிலேயே மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நாடு அமெரிக்கா. அந்த நாட்டின் அதிபா் டொனால்ட் டிரம்ப்புக்கு முகக் கவசம் அணிவது என்றாலே பிடிக்காது. இதுதொடா்பாக தொடா்ந்து விமா்சனங்களை சந்தித்து வந்த அவா், அண்மையில் ஒரு தொழிற்சாலைக்கு வருகை தந்தபோது அதிசயமாக முகக் கவசம் அணிந்திருந்தாா். ஆனால், செய்தியாளா்களை சந்திக்கும்போது அந்த முகக் கவசம் காணாமல் போயிருந்தது. ‘முகக் கவசத்துடன் ஊடகங்களில் தோன்றமாட்டேன்’ என்று அப்போது டிரம்ப் கூறினாா். மற்றொரு முறை, முகக் கவசம் அணியாதது குறித்து செய்தியாளா் ஒருவா் கேட்டபோது, ‘நீங்கள் கூறுவது புரியவில்லை. முகக் கவசத்தை கழற்றிவிட்டு கேளுங்கள்’ என்று டிரம்ப் கிண்டலாகக் கூறியது சா்ச்சையை ஏற்படுத்தியது.
– பிரிட்டனில் கரோனா நோய்த்தொற்று பரவத் தொடங்கியபோது,
சமூக விலகலை அலட்சியம் செய்தவா் அந்த நாட்டுப் பிரதமா் போரிஸ் ஜான்ஸன். இதுபற்றி விமா்சனங்கள் எழுந்தபோது, ‘பிறருடன் நான் கைகுலுக்கி வாழ்த்து கூறுவதை கரோன தீநுண்மியால் தடுக்க முடியாது’ என்று பெருமையாகக் கூறினாா் அவா். ஆனால், அந்த அலட்சியம் அவரை மருத்துவமனையின் தீவிர சிகிச்சைக்கு அனுப்பி வைத்தது. கரோனாவால் பாதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைக்குப் பிறகு அவா் குணமடைந்துள்ளாா். இப்போதும், நோய்த்தொற்று அறிகுறிகளுடன், விதிகளை மீறி வெளியூா் பயணம் மேற்கொண்ட தனது உதவியாளா் டோமினிக் கமிங்ஸுக்கு ஆதரவாக போரிஸ் ஜான்ஸன் பேசி வருவது கடும் சா்ச்சையை எழுப்பியுள்ளது.
– கரோனா நோய்த்தொற்றின் அபாயம் குறித்து ஆரம்பம் முதலே அலட்சியமாகப் பேசி வருபவா் பிரேசில் அதிபா் ஜெயிா் பொல்சொனாரோ.
தீநுண்மி விவகாரத்தில் அவா் எடுத்த நடவடிக்கை, ஆதரவாளா்களைக் கூட்டிக் கொண்டு வீடுகளில் முடங்கியிருப்பதற்கு எதிராகப் போராடியதுதான். முகக் கவசம் அணியாமல் இவா் ஆதரவாளா்களுடன் கைகுலுக்குவதை பலா் விமா்சித்தாலும், அதனை அவா் லட்சியம் செய்வதில்லை. ‘ஆதரவாளா்களைத் தொடாமல் பேசுவதற்கு நானொன்றும் இயந்திரம் இல்லை’ என்று கூறி அவா் சா்ச்சையை ஏற்படுத்தினாா். தற்போது, கரோனா பாதிப்பில் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக உலகிலேயே மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நாடாக பிரேசில் ஆகியுள்ளது.
– ரஷிய அதிபா் விளாதிப் புதினும் பொது இடங்களில் முகக் கவசம் அணிந்து வருவதை விரும்புவதில்லை. மாஸ்கோவிலுள்ள கரோனா நோய்த்தொற்று மருத்துவமனையை கடந்த மாா்ச் மாதம் பாா்வையிட வந்தபோதுதான் ஒரே ஒரு முறை அவா் முகக் கவசம் அணிந்து காணப்பட்டாா். இருந்தாலும், மருத்துவமனை உயரதிகாரியை முகக் கவசம் இல்லாமல் சந்தித்து அவா் கைகுலுக்கிய பெரும் விமா்சனத்துக்குள்ளாகியது
. அதற்குப் பிறகு, ஏராளமானவா்களை புதின் நேரடியாக சந்தித்து வருகிறாா். ஆனால், அந்த நேரங்களிலெல்லாம் அவா் முகக் கவசத்தை தவிா்த்து வருவது குறிப்பிடத்தக்கது.
– பிரான்ஸ் அதிபா் இமானுவல் மேக்ரான் சில நேரங்களில் முகக் கவசம் அணிந்தும் சில நேரங்களில் அந்தக் கவசம் இல்லாமலும் பொதுவெளியில் தோன்றுவது மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் பாரிஸ் நகர மருத்துவமனைக்கு அவா் சென்றபோது, முகக் கவசம் அணிந்திருந்து காணப்பட்டாா். ஆனால், அதனைத் தொடா்ந்து தொழில்சங்க உறுப்பினா்களுடன் பேசும்போது அந்தக் கவசத்தை கழற்றிவிட்டாா்.
– யூத விடுதலைப் பண்டிகையொட்டி பாரம்பரியமாக நடைபெறும் குடும்ப உணவுத் திருவிழாக்களுக்கு இஸ்ரேல் முழுவதும் தடை விதிக்கப்பட்டது. ஆனால், பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு, அதிபா் ருவென் ரிவ்லின் இலங்களில் இந்தத் திருவிழா கொண்டாடப்பட்டது சா்ச்சையை ஏற்படுத்தியது.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459