பழம் வாங்கும் வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் புத்தகம் ஒன்று இலவசம் : அசத்தும் பழவியபாரி - ஆசிரியர் மலர்

Latest

 




13/05/2020

பழம் வாங்கும் வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் புத்தகம் ஒன்று இலவசம் : அசத்தும் பழவியபாரி


தஞ்சாவூரில் பழக்கடை நடத்தி வரும் ஒருவர் தன் கடையில் பழம் வாங்கும் வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் புத்தகம் ஒன்றை இலவசமாகத் தருகிறார். வாசிப்புப் பழக்கத்தை ஊக்கப்படுத்தும் வகையிலும் வரலாறு மற்றும் நாட்டு நடப்புகளைத் தெரிந்து கொள்ளவும், வாழ்கையில் நல்ல நிலையை அடையவும் புத்தகத்தை தருவதாக உற்சாகத்தை வெளிப்படுத்துகிறார் பழக்கடை உரிமையாளர்.


பழக்கடையில் ஹாஜாமைதீன்

தஞ்சாவூர் பூக்காரத்தெருவில் தோழர் பழக்கடை என்கிற பெயரில் பழக்கடை நடத்தி வருகிறார் ஹாஜா மைதீன்.
இவர் தனது கடையில் பழங்களுடன் சேர்த்து புத்தகங்களையும் அடுக்கி வைத்திருப்பதுடன் பழம் வாங்க வரும் அனைவருக்கும் தேசிய தலைவர்கள், தமிழக அரசியல் தலைவர்கள், வரலாறு, சிறு தொழில், சிறுகதைகள், ஓவியம் தொடர்பான புத்தகம் என எதாவது ஒரு புத்தகத்தை இலவசமாகத் தருவதை வாடிக்கையாக வைத்துள்ளார். கிட்டத்தட்ட 5 வருடங்களுக்கு மேலாக இதைச் செய்து வருவதால் தோழர் பழக்கடை அப்பகுதியில் அனைவருக்கும் பரிச்சயமான கடையாக இருந்து வருகிறது.
இதேபோல் சுப நிகழ்ச்சிகளுக்கு மொத்தமாக பழம் வாங்குபவர்களுக்கும் அதனுடன் தொடர்புடைய ஏதோ ஒரு பொருளை பரிசாகக் கொடுக்கிறார். கடைக்கு வரும்போது வாடிக்கையாளர்களாகவும், திரும்பிச் செல்லும்போது உறவினர்களாகவும் இருக்க வேண்டும் என்பதற்காகவே இதைச் செய்து வருவதாகவும் தெரிவிக்கிறார் ஹாஜா.
அத்துடன் இந்துப் பெண்ணைத் திருமணம் செய்துகொண்ட அவர் தன் மகளை கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்தவருக்கும், இரண்டு மகன்களை இஸ்லாமியப் பெண்களுக்கும் திருமணம் செய்து கொடுத்திருப்பதால் மத நல்லிணக்கத்துக்கும் எடுத்துக்காட்டாக இவரின் குடும்பம் திகழ்ந்து வருகிறது.


பழங்கள் மற்றும் புத்தகம்

ஹாஜா மைதீனிடம் பேசினோம், “ எனது கடைக்கு அருகிலேயே அரசுப் பள்ளி உள்ளது.
அதில் படிக்கும் மாணவர்கள் பள்ளிக்கு செல்லும்போதும் வரும்போதும் எனது கடையில் பழங்களை வாங்குவார்கள். அவர்களுக்கு வாசிப்பை ஊக்கப்படுத்தும் வகையில் மாணவர்கள் தொடர்புடைய சிறுகதை, ஓவியம், தமிழக வரலாற்று தலைவர்கள் உள்ளிட்ட புத்தகங்களைக் கொடுப்பதுடன் மறக்காமல் இதைப் படிக்க வேண்டும் என வலியுறுத்துவேன். எல்.கே.ஜி தொடங்கி இன்ஜினீயரிங் படிக்கும் மாணவர்களாக இருந்தாலும் அவர்களுக்குப் பயன்படக்கூடிய புத்தகத்தைக் கொடுப்பேன்.
இதேபோல் பழம் வாங்க வரும் பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்களுக்கு அவர்கள் சார்ந்த கட்சிகளைப் பற்றித் தெரிந்து கொள்ளக்கூடிய வகையிலான புத்தகத்தைத் தருவேன். உதாரணமாக தி.மு.க-வைச் சேர்ந்தவராக இருந்தால் கருணாநிதி தொடர்பான புத்தகம், அ.தி.மு.க-வினராக இருந்தால் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா தொடர்பான புத்தகங்கள் என எந்தக் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் என்பதை அறிந்துகொண்டு அதற்கு ஏற்றாற்போல் கொடுப்பேன்
. பொதுவானவர்களுக்கு அதற்கு தகுந்தாற்போல் புத்தகத்தைக் கொடுப்பேன்.


புத்தகங்கள்

பெண்களாக இருந்தால் சிறு தொழில், தையல் தொழில், சமையல் குறிப்புகள் மற்றும் கோலங்கள் போன்ற ஏதோ ஒரு புத்தகத்தை கொடுப்பேன். இதேபோல் பெண் பார்க்கப் போகிறவர்களாக இருந்தால் குங்குமச்சிமிழ், நிச்சயதார்த்த நிகழ்ச்சி என்றால் சந்தனப்பேழை, குழந்தைக்குப் பெயர் வைக்கிற நிகழ்ச்சி என்றால் நீர் உறிஞ்சும் கிளாஸ் போன்ற பொருள்களை கொடுப்பேன். இதை இலவசமாக தருகிறேன் என நான் சொல்லமாட்டேன். என் கடையில் பழம் வாங்கியதற்காக அடையாளமாக சின்ன அன்புப் பரிசாகவும் உறவுக்குப் பாலமாக இருக்கவுமே இதைச் செய்கிறேன்.
Also Read:
யாரையும் நான் வாடிக்கையாளர்களாகப் பார்ப்பதில்லை, உறவினர்களாகத்தான் கருதுகிறேன்
. அதற்கு இதுபோன்ற புத்தகங்கள் கொடுப்பது உதவியாக இருக்கிறது. என்னுடைய பில் புத்தகத்தில், `என் கடையில் வாங்கிய பழம் வீணாகிவிட்டால் அதை மாற்றித் தருவேன்’ என்ற வாசகத்தை அச்சடித்துள்ளேன். அதன்படி பழம் வாங்கிக்கொண்டு போனோம், வீணாகிவிட்டது என்றால் உடனே வேறு பழத்தை மாற்றித் தந்துவிடுவேன். இதை எந்தப் பழக்கடையிலும் செய்ய மாட்டார்கள். நமது கடைக்கு வந்தவர்கள் சிறிய அளவிலும் மனம் நோகக் கூடாது என நினைத்து இதைச் செய்கிறேன். அதிக லாபத்தை நோக்கமாகக் கொள்ளாமல் நியாயமான விலைக்கு பழங்களைக் கொடுப்பேன்.


புத்தகம் கொடுக்கும் ஹாஜா மைதீன்


என்னோட இந்தச் செயல்களால் தொலைவிலிருந்தும் அதிகளவிலான வாடிக்கையாளர்கள் வருகிறார்கள். டாக்டர், போலீஸ் உள்ளிட்ட பலர் உறவினர்களைப்போல் பழங்களைச் வாங்கிச் செல்கின்றனர். கடந்த மாதம் நான் கொடுத்த புத்தகத்திலிருந்த என் நம்பரைப் பார்த்து என்னைத் தொடர்புகொண்ட டாக்டர் ஒருவர், `நான் கொரோனா பணியில் இருக்கிறேன். என்னால் வீட்டுக்கு வர முடியவில்லை. பெற்றோர் தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலையில் உள்ள வீட்டில் இருக்கின்றனர். ஊரடங்கால் வயதான அவர்களால் வெளியே வர முடியவில்லை. அவர்கள் அரிசி, மளிகை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் இல்லாமல் அவதிப்படுகின்றனர். வாங்கிக் கொடுக்க முடியுமா?’ என கேட்டார்.



பழங்களோடு புத்தகங்கள்

`உடனே வாங்கித் தருகிறேன்’ எனக் கூறியதுடன் அவர்களுக்குத் தேவையான பொருள்களை வாங்கி கொடுத்துவிட்டு அதற்குரிய பணத்தை வாங்கிக்கொண்டேன். இரண்டு தடவைக்கு மேல் அந்த டாக்டர் குடும்பத்துக்கு நான் உதவி செய்தேன். இதனால் நெகிழ்ந்த அவர், ரொம்ப நன்றி எனத் தெரிவித்தார். அதற்கு, `இதில் என்ன இருக்கு.. உங்களை நான் என்னுடைய உறவினராகவும் நண்பராகவும்தான் பார்க்கிறேன். இப்ப மட்டுமல்ல எப்போது உதவி வேண்டுமானாலும் கேளுங்க செய்கிறேன்’ என்றேன். இந்த உறவுக்குப் பாலமாக அமைந்தது நான் கொடுத்த புத்தகம்தான்” என்றார் நெகிழ்ச்சியுடன்.
தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459