சர்க்கரை நோயை 100% கட்டுப்படுத்தும் உணவுகள் - ஆசிரியர் மலர்

Latest

 




18/05/2020

சர்க்கரை நோயை 100% கட்டுப்படுத்தும் உணவுகள்


உடல் நலப்பிரச்சனைகளில் தற்போது முதன்மையானதாக இருப்பது சர்க்கரை நோய் தான். ஏனென்றால் நாம் அதனை கவனிக்க வில்லை என்றால் உயிர் போக்கூடிய அளவுக்கும் உடலை உருக்குலைத்திடும் குணம் அதற்கு உண்டு. மிக முக்கியமாக அதன் அறிகுறிகள் அவ்வளவாக பெரிதாக தெரிவதில்லை.
ரத்தப்பரிசோதனை மூலமாகத்தான் நமக்கு சர்க்கரை நோய் இருக்கிறதா இல்லையா என்பதையே கண்டறிய முடிகிறது. (Glucometer) 
அறிகுறிகளை வைத்து நாம் கண்டு கொள்ள முடியும் என்றாலும் பலரும் அதனை பெரிதாக அலட்டிக் கொள்வதேயில்லை. பின்னர் நோய் முற்றியவுடன் தான் சிகிச்சைகளை ஆரம்பிக்கிறோம். திடீரென உங்களுக்கு சர்க்கரை வரக்கூடாது,அப்படியே வந்திருந்தாலும் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களா அப்படியானால் இந்த முறையை பின்பற்றுங்கள். டைப் 2 சர்க்கரை நோய் இருப்பவர்கள் உணவுக்கட்டுப்பாட்டின் மூலமாகத்தான் சர்க்கரை நோயை கட்டுக்குள் கொண்டு வர முடியும்.
தவிர்க்க : 
பாலீஷ் செய்யப்பட்ட அரிசி உணவுகள், மைதா உள்ளிட்ட உணவுகள் ரத்தத்தில் கார்போஹைட்ரேட் அளவை உடனடியாக அதிகரிக்கச் செய்துவிடும். அதனால் அவ்வகை உணவுகளை நீங்கள் ஆரம்பத்திலிருந்தே தவிர்த்திடுங்கள். உணவுக்கட்டுப்பாட்டுடன் இருக்கிறேன் என்று பட்டினியாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை ரத்தச்சர்க்கரையை குறைக்கும் உணவுகளை எடுத்துக் கொள்ளலாம். எண்ணெயை அளவாக உணவில் சேர்க்க வேண்டும். கேரட் தவிர மற்ற கிழங்கு வகை உணவுகளைச் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்
பாகற்காய்: 
பாகற்காயில், கீரையைவிட அதிக அளவு கால்சியமும் இரும்புச்சத்தும் போதுமான அளவு பீட்டா கரோட்டினும் உள்ளது. பாகற்காய், இன்சுலின் சுரப்பை மேம்படுத்தி, உடலின் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துகிறது. தினசரி காலையில் வெறும் வயிற்றில் பாகற்காய் சாறு அருந்திவர, சர்க்கரைநோய் கட்டுப்படும்.
மஞ்சள்: 
கணையத்தில் உள்ள திசுவினுள் ‘மேக்ரோபேஜ்' (Macrophage) எனும் தற்காப்பு செல்கள் நுழைந்து, ‘சைட்டோகைன்ஸ்' என்ற அழற்சியை உருவாக்கும் புரதத்தைச் சுரப்பதால் இன்சுலினை உற்பத்திசெய்யும் செல்கள் சேதமடைகின்றன. இதனை சீராக்க குர்குமின் என்ற வேதிப்பொருள் தேவை அவை இன்சுலின் சுரப்பை மேம்படுத்த உதவுகிறது. இதனால் சர்க்கரை நோய் குறித்த பயம் உங்களுக்கு வேண்டாம். இந்த குர்குமின் (Curcumin) என்ற வேதிப்பொருள் மஞ்சளில் அதிகமாக இருக்கின்றன
நார்ச்சத்து : 
நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுப் பொருட்கள், இரைப்பை, சிறுகுடலில் கார்போஹைட்ரேட் குளுக்கோஸாக மாற்றப்படும் வேகத்தைக் குறைக்கின்றது.
இதனால், உடலில் அதிக அளவு சர்க்கரை மற்றும் கொழுப்பு சேர்வது தடுக்கப்படுகிறது. ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு குறைகிறது. எனவே, நார்ச்சத்து நிறைந்த கீரைகள், பச்சை நிற காய்கறிகள், பூண்டு, கேரட், வெள்ளரி, முட்டைக்கோஸ், புரோகோலி, தக்காளி, பீன்ஸ், வெண்டைக்காய், காலிஃபிளவர், ஆப்பிள், ஆரஞ்சு, பப்பாளி, எலுமிச்சை, ஆகியவற்றை உங்கள் உணவுகளில் அடிக்கடி சேர்க்க வேண்டும்.
பட்டை: 
பட்டை, வளர்சிதை மாற்றத்தின் மூலமாக உடலில் வெப்பத்தை உருவாக்கும். இதனால், உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பு கரைகிறது. பட்டை நம் உடலில் இயற்கையாகவே சுரக்கும் இன்சுலின் உற்பத்தியைத் தூண்டும்
நட்ஸ்: 
நட்ஸில், ஒமேகா 3 கொழுப்பு அமிலம், வைட்டமின்கள், தாதுஉப்புக்கள் அதிக அளவில் நிறைந்துள்ளன. இதில் உள்ள நல்ல கொழுப்பு, உடலில் உள்ள கெட்ட கொழுப்பை அகற்றிவிடுவதால், உடலில் நல்ல கொழுப்பு நிறைந்து, இதயத்தின் ஆரோக்கியம் மேம்படுகிறது. இன்சுலின் சுரப்பும் சீராகிறது. சர்க்கரைநோயைக் கட்டுப்படுத்துகிறது.
சிட்ரஸ் பழங்கள்: 
சிட்ரஸ் நிறைந்த பழங்களான எலுமிச்சை, ஆரஞ்சு, போன்றவற்றில், வைட்டமின் சி அதிகம் உள்ளன. இது, சர்க்கரைநோயைத் தடுப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது.
உடலில் உள்ள காயம் விரைவில் ஆற உதவுகிறது. நோய்த்தொற்றைத் தடுக்கும். உடல் அசதியைக் குறைத்து, உடலுக்குத் தேவையான எனர்ஜியைத் தரும்.
கிரீன் டீ
கிரீன் டீயில் உள்ள சிறந்த ஆன்டிஆக்ஸிடன்ட்கள் முதுமையை ஏற்படுத்தும் ஃப்ரீ ரேடிக்கல் செல்களைக் கட்டுப்படுத்தி, உடலில் உள்ள ஒவ்வொரு செல்லையும் சுறுசுறுப்பாக்குகிறது. ரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பைக் குறைக்கிறது. ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது. இதனால், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவும் கட்டுக்குள் வருகிறது.
பீன்ஸ் : 
பீன்ஸ் வகைகளில் அதிக அளவு நார்ச்சத்து, புரோட்டீன், பொட்டாசியம், மக்னீசியம் நிறைந்துள்ளன. இவை, உடலுக்குத் தேவையான ஆற்றலை அளித்து, நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகின்றன. இது, செரிமானத்தை சீராக்கி, ரத்தத்தைச் சுத்திகரிக்கிறது. இதனால், ரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுப்படுத்தப்படுகிறது.
வெந்தயம்: 
வெந்தயத்தில் நீர்ச்சத்து, புரதச்சத்து, கொழுப்புச் சத்து, மாவுச்சத்து போன்றவைகள் உள்ளன. சர்க்கரை நோய் உள்ளவர்கள் தினமும் வெந்தயத்தை தண்ணீர்/மோரில் கலந்து குடித்தால் சர்க்கரை நோய் கட்டுபாட்டில் இருக்கும். இவற்றில் இரும்புச்சத்து, சோடியம், பொட்டாசியம் போன்ற தாதுப் பொருட்களும், தயமின், நிகோட்டின் அமிலங்களும் நிறைந்து உள்ளன.
அவை உடலுக்கு குளிர்ச்சி அளிப்பதுடன், உடலை சமநிலையில் வைக்கவும் வெந்தயம் பயன்படுகிறது. வெந்தயத்தில் உள்ள வைட்டமின் ஏ சர்க்கரைநோயால் ஏற்படும் பார்வை இழப்பை தடுக்கிறது.
நாவல் பழம்: 
நாவல் பழத்தில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, வைட்டமின் பி போன்ற தாதுக்கள் நிறைந்து உள்ளன. நாவல் பழத்தில் உள்ள இரும்புச்சத்து ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கச் செய்யும். நாவல் பழக் கொட்டைகளை பொடியாக்கி தினசரி சூடான நீருடன் சேர்த்து குடித்துவரச் சர்க்கரைநோயினால் உண்டான பாதிப்புகள் குறைந்திடும்.
சிறுதானியம் : 
அரிசி, கோதுமை ஆகியவற்றைவிட சிறுதானியம் மிகவும் சிறந்தது. சிறுதானியத்தில் வெறும் மாவுச்சத்து மட்டும் இன்றி நார்ச்சத்து, புரதச்சத்து, நுண்ணூட்டச்சத்துக்கள் அதிக அளவு நிறைந்திருக்கின்றன.
எனவே, சர்க்கரை நோயாளிகள் கம்பு, கேழ்வரகு, குதிரைவாலி ஆகியவற்றைப் பிராதன உணவாக ஏதாவது ஒரு வேளையாவது தினமும் சாப்பிடுவது நல்லது.
கோதுமை : 
சர்க்கரை நோய் இருப்பவர்கள் பெரும்பாலானோர் உணவில் கோதுமையை சேர்க்க வேண்டும் என்று சொல்லி சப்பாத்தி சாப்பிடுகின்றனர். கடைகளில் விற்கும் பாக்கெட் கோதுமை மாவுகளில் மைதாவும் கலந்திருப்பதால் அவற்றல் எந்தப்பலனும் இல்லை. முழு கோதுமையை வாங்கி, மைதா சேர்க்காமல் அரைத்து, எண்ணெய் குறைவாகச் சேர்த்து, சப்பாத்தி செய்து சாப்பிடலாம். பாக்கெட் கோதுமை மாவைத் தவிர்க்கவும். மூன்று வேளையில் ஏதாவது ஒரு வேளை சப்பாத்தி எடுத்துக்கொண்டால் போதுமானது.
இறைச்சி :
அசைவ உணவு உங்களுக்கு மிகவும் பிடிக்கும் என்றால் மீன் சாப்பிடலாம். அதே போல நாட்டுக்கோழி இறைச்சியை வாரம் ஒரு முறை எடுத்துக் கொள்ளலாம். ஆட்டுக்கறி , மாட்டுக்கறி,பாயிலர் கோழி போன்றவற்றை தவிர்த்திட வேண்டும். முட்டை சாப்பிடும் போது வெள்ளைக்கரு மட்டும் சாப்பிட வேண்டும்.
பருப்பு வகைகள் : 
உளுந்தம் பருப்பு, கடலைப்பருப்பு, ஆகியவற்றில் புரதச் சத்து நிறைந்துள்ளது. அதுபோல் முளை கட்டிய பயறு வகைகளையும் உணவில் தினமும் சேர்த்துக் கொள்ளலாம். வைட்டமின் பி மற்றும் சி சத்து குறிப்பிடத்தக்க வகையில் இதில் உள்ளது.
எண்ணெய் : 
உணவில் கலோரிகளை அதிகரிப்பது சமையல் எண்ணெய்தான். நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், கடுகு எண்ணெய், ஆலிவ் எண்ணெய் போன்றவற்றை பயன் படுத்தலாம்
. ஆனால் அவற்றையும் குறைந்த அளவே பயன்படுத்த வேண்டும்.
நெல்லிக்காய் : 
ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த இந்திய மருத்துவ முறைகளில் பெருமளவில் பயன்படுத்தப்படுவது, அரை நெல்லிக்காய். இதில் அதிக அளவில் வைட்டமின் சி இருப்பதால், நெல்லிக்காயை அரைத்து அதன் சாற்றைக் குடிப்பது கணையத்தைத் தூண்டும். இரண்டு நெல்லிக்காய்களை எடுத்து, அதன் விதையை அகற்றிவிட்டு அரைத்து சாறு எடுத்துக்கொள்ள வேண்டும். இரண்டு டீஸ்பூன் அளவு சாற்றை ஒரு டம்ளர் தண்ணீரில் கலந்து வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இதைத் தொடர்ந்து செய்துவந்தால் சர்க்கரை நோய் கட்டுக்குள் கொண்டு வர முடியும்.
பூண்டு : 
பூண்டில் 400-க்கும் மேற்பட்ட ரசாயனங்கள் உள்ளன. இதன் பலன்கள் அளவற்றது. சர்க்கரையைக் கட்டுக்குள் வைத்திருக்கும் ஆற்றல் பூண்டுக்கும் உள்ளது. சர்க்கரை நோயாளிகள் உணவில் பூண்டையும் சேர்த்துக்கொள்ளலாம். இதில் உள்ள சில ரசாயனங்கள், இன்சுலின் சுரப்பை அதிகரிக்கிறது.
கல்லீரலானது இன்சுலினின் ஆற்றலை குறைப்பதைத் தவிர்த்து, உடலுக்குப் போதிய அளவு இன்சுலின் கிடைக்கச் செய்கிறது.
பற்கள் : 
சர்க்கரை நோயால் கண், சிறுநீரகம், பாதம் ஆகியவை பாதிக்கப்படுவதைப் போன்று அதிகம் பாதிக்கப்படுவது ஈறுகள்தான். சர்க்கரை நோய் அதிகரிக்கும்போது, பல் ஈறுகள் பலவீனம் அடைந்து பல் ஆடுதல் பிரச்னை ஏற்படும். பல்லுக்கும் ஈறுக்கும் இடையே சிறிய வாய்க்கால் போன்ற அமைப்பு உள்ளது. இது, 1.2 மி.மீ. அளவுக்கு ஆழமாக இருக்கும். இங்குதான் பற்களைப் பாதுகாக்கும் திரவம் சுரக்கிறது. பற்களில் உணவுத் துகள்கள், கரை படியும்போது ஈறு பாதிக்கப்படும். இந்த ஆழமானது 3 முதல் 4. மி.மீ. அளவுக்கு ஆழமாவதை ‘கம் பாக்கெட்' என்று சொல்லப்படுகிறது . இந்த பாக்கெட்டில் நோய்த் தொற்று ஏற்படும்போது அது சர்க்கரை நோயின் பாதிப்பையும் அதிகரிக்கிறது. எனவே, பல்லில் நோய்த் தொற்று வராமல் பாதுகாப்பது மிகவும் அவசியம்.
தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459