எந்த எண்ணெய் சிறந்தது? - ஆசிரியர் மலர்

Latest

 




18/05/2020

எந்த எண்ணெய் சிறந்தது?


எண்ணெய் இல்லாமல் சமையலா என்பது ஒருபுறமிருக்க, ‘எண்ணெய்’ என்றதும் எட்டடி தள்ளி நிற்கும் சிலரையும் பார்க்க முடிகிறது. வயதாகிவிட்டது என்று மருத்துவரின் பரிந்துரை இல்லாமலேயே சிலர் எண்ணெயை ஓரங்கட்டி வருகிறார்கள்.
இதய நோயில் தொடங்கி உடல் பருமன் வரை சமையலில் எண்ணெயைத்தான் முதலில் தவிர்க்கிறார்கள்
.
இப்போது கடலை எண்ணெய், நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், ஆலிவ் எண்ணெய் மற்றும் செக்கில் ஆட்டப்பட்ட எண்ணெய் என்று ஏகப்பட்ட எண்ணெய் வகைகள். இவற்றில் சமையலுக்கேற்ற எண்ணெய் எது?

ஒரு நாளுக்கு நான்கிலிருந்து ஐந்து டீஸ்பூன் எண்ணெய் மட்டுமே நம் உடலுக்குத் தேவைப்படும். அளவு மீறினால் உடல்நலக் குறைவு ஏற்பட வாய்ப்பிருக்கிறது.சிறியவர்கள் முதல் பெரியவர்கள்வரை தினமும் ஒரு டீஸ்பூன் சுத்தமான நெய் தவறாமல் உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.

ஒரே எண்ணெயை எல்லா சமையலுக்கும் தொடர்ந்து உபயோகிக்கக் கூடாது. எல்லா எண்ணெய்களும் உணவில் இடம்பெறுவது அவசியம்.
வடை, முறுக்கு போன்றவற்றைப் பொரிப்பதற்குக் கடலை எண்ணெய் உபயோகிக்கலாம்
. இது முறுக்கு போன்ற தின்பண்டங்களை சில நாள்கள் வரை கெடாமல் வைத்துக்கொள்ளும்.
வத்தக்குழம்பு, காரக்குழம்பு மற்றும் அசைவ சமையல்களுக்கும், இட்லிப் பொடி, பூண்டுப் பொடி போன்ற பொடி வகைகளுக்கும் நல்லெண்ணெய் பயன்படுத்தலாம்

கூட்டு, குருமா, வெந்தயம் சேர்க்கும் உணவு வகைகள் மற்றும் கேரளா ஸ்டைல் உணவுகளுக்குத் தேங்காய் எண்ணெய் அசத்தலான சாய்ஸ்.
ஆலிவ் எண்ணெய் அவசியமில்லை. குறைந்த விலையில் கிடைக்கும் ஆலிவ் எண்ணெய்கள் சுத்தமாக இருக்காது. முடிந்தவரை வெளிநாட்டு எண்ணெய் வகைகளைத் தவிர்ப்பதே சிறந்தது.

எண்ணெயில் செய்யவேண்டியவை, செய்யக் கூடாதவை

நாம் பொரிக்க வேண்டியவற்றை எண்ணெயில் முன்னரே போட்டுவிட்டு, பின் எண்ணெயைக் கொதிக்க வைக்கக் கூடாது. பொரிப்பதற்கான நிலையில் அதாவது, எண்ணெய் கொதித்த பின்னர் பொரிக்க வேண்டியவற்றைப் போட வேண்டும்.
அனைத்து உணவுப் பொருள்களையும் ஒன்றாகப் போட்டால், கொதிக்கும் எண்ணெயின் சூடு தணிந்துவிடும். அதிக நேரம் அடுப்பில், நெருப்பில் இருக்கவேண்டிவரும். அதிக அளவிலான எண்ணெயை உணவுப் பொருள் உறிஞ்சி, தனக்குள் வைத்துக்கொள்ளும்.இது நல்லதல்ல
ஓரிரு முறை முன்னரே பயன்படுத்திய எண்ணெயுடன் புதிதாக எண்ணெய் சேர்க்கக் கூடாது.
பயன்படுத்திய எண்ணெயை மீண்டும் பயன்படுத்தக் கூடாது.
எந்த எண்ணெயாக இருந்தாலும் மிதமாகப் பயன்படுத்த வேண்டும்.
சமையல் எண்ணெய்களை அதிக வெப்பம் மற்றும் சூரிய ஒளி படாமல் வைத்திருப்பது அவசியம்
கண்டிப்பாக எண்ணெய்களை அடுப்பின் மிக அருகில் வைத்திருப்பது தவறு.
தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459