தொற்று நோய் பரவுவதை தடுக்க தீவிர கண்காணிப்பில் இருக்கும் காவல்துறையினர் வீடியோ கால் மூலமாக உயர் அதிகாரிகளிடம் நேரடியாகப் பேசி உடனுக்குடன் உத்தரவுகளை பெற்று நடைமுறைக்கு கொண்டு வருவதற்கும், எந்த ஏரியாவில் என்னென்ன விஷயங்கள் நடக்கிறது என்பதை உடனுக்குடன் மேலதிகாரிகளுக்கு தெரியப்படுத்தவும் தற்போது zoom செயலி மிகவும் பிரபலமாகி வருகிறது.
ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதால் மக்கள் அனைவரும் வீட்டிற்குள் முடங்கி இருக்கின்றனர்.யாருக்கெல்லாம் வீட்டிலிருந்தபடியே வேலை செய்ய முடியுமோ அவர்கள் வீட்டிலிருந்து வேலை செய்து தருகின்றனர். ஆனால் வெளியில் வேலை செய்யக் கூடியவர்கள் தற்போது எந்த வேலையும் செய்ய முடியாமல் வீட்டிற்குள் முடங்கி இருக்கவேண்டிய நிலை ஏற்பட்டு இருக்கிறது. இந்த ஒரு நிலையில், மாணவர்களாக இருந்தாலும் சரி,உறவினர்களாக இருந்தாலும் சரி,நண்பர்களாக இருந்தாலும் சரி, வேலை நிமித்தமாக சக ஊழியர்களாக இருந்தாலும் சரி,… இவர்கள் அனைவரும் zoom செயலியை பதிவிறக்கம் செய்து ஒரே நேரத்தில் அனைவரிடமும் வீடியோ காலில் இணைந்து பேசுகின்றனர். தகவலையும் பரிமாறி கொள்கின்றனர்

அந்தவகையில் இத்தகைய சிறப்பு வாய்ந்த ஜூம் செயலியை இரவு பகல் பார்க்காமல் ஓய்வு இல்லாமல் வெயிலில் நின்று வேலை செய்யும் காவலர்களும் பயன்படுத்தி வருகின்றனர். தற்போது தீவிர காவல் பணியில் ஈடுபட்டுள்ள சென்னை பெருநகர காவல் துறையினரை ஒருங்கிணைக்கும் வகையில் காவல் ஆணையாளர் ஏ. கே. விஸ்வநாதன் அவர்களும் இந்த செயலியை பயன்படுத்தி மற்ற காவலர்களுடன் நடவடிக்கைகள் குறித்து பேசி வருகிறார் என தகவல் வெளியாகி  உள்ளது

இவரது கட்டுப்பாட்டில் 129 காவல் நிலையங்கள் உள்ளன. இரண்டு கூடுதல் ஆணையர்கள்,நான்கு இணை ஆணையர்கள், 15க்கும் மேற்பட்ட துணை ஆணையர்கள் 300க்கும் அதிகமான காவல் ஆய்வாளர்கள் என அனைவரும் இந்த பிரத்யேக செயலியின் மூலம் ஒருங்கிணைக்கிறார் ஏ.கே விஸ்வநாதன்.

எந்த பகுதியில் உள்ளது என்பதை நேரடியாகவே வீடியோகால் மூலம் அறிந்துகொண்டு அதற்கான ஏற்பாட்டை செய்து கொடுக்கிறார். நகரத்தில் நடக்கக் கூடிய எந்த ஒரு நிகழ்வாக இருந்தாலும் உடனடியாக அறிந்து கொண்டு அதற்கான தீர்வை உடனே வழங்கவும் முடிகிறது. மேலும் இந்த ஜூம் செயலி பயன்படுத்துவதன் மூலம் யாருக்கும் கை குலுக்க வேண்டிய அவசியம் இல்லை. அருகில் நின்று பேச வேண்டிய நிலையும் கிடையாது.
இது குறித்து காவல்துறையினர் தெரிவிக்கும்போது ஜூம் செயலி மிகவும் பயனுள்ளதாக இருப்பதாகவும் கொரோனா நோய் பரவாமல் தடுப்பதற்கு, மக்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் இருந்தாலே மருத்துவ பணியாளர் களுக்கும், காவலர்களுக்கும் பாதிக்கு மேல் வேலை குறையும் என்று தெரிவித்து உள்ளார்.