குழந்தைக்குப் புற்றுநோய்: ட்விட்டர் மூலம் நடவடிக்கை எடுத்த முதல்வர்! - ஆசிரியர் மலர்

Latest

19/04/2020

குழந்தைக்குப் புற்றுநோய்: ட்விட்டர் மூலம் நடவடிக்கை எடுத்த முதல்வர்!

குழந்தைக்குப் புற்றுநோய்: ட்விட்டர் மூலம் நடவடிக்கை எடுத்த முதல்வர்!

புற்று நோயால் பாதிப்படைந்த 4 வயது குழந்தைக்கு உதவ வேண்டும் என்று ட்விட்டரில் கோரிக்கை விடுத்ததற்கு, உடனடியாக உதவுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ட்விட்டரில் பதிலளித்துள்ளார்.
கொரோனாவால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டும் மதியம் ஒரு மணி வரையில் கடைகள் திறந்திருக்கலாம் என்று அனுமதி வழங்கியுள்ளது தமிழக அரசு. 144 தடையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஒரு சில இடங்களில் மருத்துவ
உதவிகள் பெறுவதிலும் மக்கள் சிரமமடைந்து வருகின்றனர். இந்நிலையில், தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த 4 வயது பெண் குழந்தை மதுமிதா ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். ஊரடங்கால் குழந்தைக்கு மருந்து வாங்க முடியாமல் பெற்றோர்கள் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.
இந்நிலையில் கோகுல் சங்கர் என்பவர் முதல்வரின் ட்விட்டர் கணக்கை டேக் செய்து இதுதொடர்பாக பதிவிட்டுள்ளார். குழந்தையின் புகைப்படம் மற்றும் அக்குழந்தைக்குத் தேவைப்படும் மருந்துகள் உள்ளிட்ட விவரங்களுடன், “இந்தக் குழந்தைக்கு ரத்தப் புற்றுநோய் மருந்துகள் சென்னையில் உள்ள ICHமருத்துவமனை மூலம் கொடுக்கப்படுகிறது.
மருந்து தற்போது தீர்ந்துவிட்டது.
தற்பொழுது உள்ள சூழ்நிலையால் பெற்றோரால் சென்று மருந்து வாங்க முடியவில்லை. தயவு கூர்ந்து மருந்துகள் பெற்றோரைச் சென்றடைய வேண்டுகிறேன். நன்றி” என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்த ட்வீட்டுக்கு இன்று (ஏப்ரல் 19) பதிலளித்துள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “இந்த சின்னஞ்சிறு வயதிலேயே நோயை எதிர்த்துப் போராடும் இக்குழந்தை விரைவில் பூரண குணமடைந்து நலம்பெற வேண்டிக் கொள்கிறேன். இக்குழந்தைக்குத் தேவையான அனைத்து மருந்துகளும் கிடைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்" என்று கூறியுள்ளார்
தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459