இந்தியாவை மீட்க ஜெர்மனி மாடல் திட்டம்?- மோடி-நிர்மலா ஆலோசனை - ஆசிரியர் மலர்

Latest

17/04/2020

இந்தியாவை மீட்க ஜெர்மனி மாடல் திட்டம்?- மோடி-நிர்மலா ஆலோசனை

இந்தியாவை மீட்க ஜெர்மனி மாடல் திட்டம்?-   மோடி-நிர்மலா ஆலோசனை!
இரண்டாம் கட்ட ஊரடங்கு உத்தரவு ஏப்ரல் 14 ஆம் தேதியில் இருந்து மே 3 ஆம் தேதி வரை பிரதமர் மோடியால் நீட்டிக்கப்பட்ட நிலையில், நாட்டின் பொருளாதாரம் பற்றி இன்று (ஏப்ரல் 17) ரிசர்வ் வங்கி தலைவர் சக்தி கந்த தாஸ் சில அறிவிப்புகளை வெளியிட்டார். மாநில அரசுகள் ரிசர்வ் வங்கியில் இருந்து வழக்கத்தை விட 60% கூடுதலாக கடன் பெற்றுக் கொள்ளலாம் என்று கூறியிருக்கிறார் அவர். இந்நிலையில் ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டிருக்கும் சமூகத்தின் பலதரப்பட்ட மக்களுக்கு மத்திய அரசு புதிய சலுகைகளை அறிவிக்க திட்டமிட்டு வருகிறது.
முதல் கட்ட ஊரடங்கு அறிவிக்கப்பட்ட மார்ச் 24 ஆம் தேதிக்கு இரு நாட்கள் கழித்து மார்ச் 27 ஆம் தேதி நாட்டின் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 1.76 லட்சம் கோடி ரூபாய்க்கான சலுகைகளை அறிவித்தார். ஆனால் நிதியமைச்சர் அறிவித்த தொகை போதாது என்று எதிர்க்கட்சிகள் மட்டுமல்ல பொருளாதார வல்லுநர்களும் இப்போது இந்தியாவில் ஏற்பட்டுள்ள பொருளாதாரச் சுருக்கம் என்பது கடந்த நாற்பதாண்டுகளில் இல்லாத அளவுக்கு ஏற்பட்டிருக்கிறது. இந்த நேரத்தில் அரசு தனது தீவிர கவனத்தை ரியல் எஸ்டேட், விமானப் போக்குவரத்து, ஆட்டோமொபைல்ஸ், சுற்றுலா, மூலதனப் பொருட்கள், உலோகம், சுரங்கம் உள்ளிட்ட துறைகளில் செலுத்தியாக வேண்டும். ஏனெனில் இத்துறைகள் கடந்த மார்ச் 25 முதல் மே 3 வரையிலான முழு ஊரடங்கால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றன. மத்திய அரசு இந்தத் துறைகளுக்கான சிறப்புச் சலுகைத் திட்டங்களை அறிவிக்க எடுத்துக்கொள்ளும் தாமதம் என்பது இந்தத் தொழில்களின் மீதான பாதிப்பை மேலும் மேலும் அதிகப்படுத்தவே செய்யும். பணப் புழக்கம் என்பது வறண்டு விட்டதால் நிறுவனங்கள் தாங்கள் வழங்கும் ஊதியத்தை பெருமளவு குறைக்க முடிவு செய்திருக்கின்றன. சில நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களை நீக்கவே துணிந்துவிட்டன.
இந்த நேரத்தில் தொழில் துறையினருக்கு அரசின் உதவிகளும் சலுகைகளும் சாகக் கிடப்பவருக்கு தரப்படும் ஆக்ஸிஜன் போல அவசரமான முதன்மையான தேவையாக இருக்கிறது என்று இந்திய தொழில் கூட்டமைப்பு கூக்குரல் எழுப்புகிறது. “அனைத்து வங்கிகளும் அனைத்து நிறுவனங்களுக்கும் கூடுதல் பணி மூலதனத்தை வழங்க வேண்டும். இது அந்நிறுவனங்கள் வழங்கும் மூன்று மாத சம்பளத்துக்கு இணையானதாக இருக்க வேண்டும். இந்த மூலதனத்துக்கான வட்டி என்பது 4% முதல் 5% குள் இருக்க வேண்டும். இதற்கு அரசாங்கத்தால் உத்தரவாதம் அளிக்கப்பட வேண்டும்” என்றுகேட்கிறது தொழில் கூட்டமைப்பு.
இதேநேரம் ஏப்ரல் 20 முதல் விவசாயம், லாஜிஸ்டிக்ஸ், உள்கட்டமைப்பு, இ-வணிகம் உள்ளிட்ட துறைகளின் தொழிற்சாலைகள் நகரப் பகுதிகளுக்கு வெளியே இயங்கலாம் என்றும் அப்பகுதிகள் கொரோனா தொற்று இல்லாத பகுதிகளாக இருக்க வேண்டும் என்று அரசு அறிவித்திருக்கிறது. ஆனாலும் கூட சிறு, குறு. நடுத்தர தொழில்களுக்கு அரசின் ஊக்கத் தொகை அறிவிப்பு மிக மிக அவசரமாக தேவைப்படுகிறது. எனவே அரசின் கவனம் இவற்றை நோக்கியே இருக்கும் என்கிறார்கள் நிதியமைச்சக அதிகாரிகள். பணப்புழக்க சிக்கலைச் சமாளிக்க ஜிஎஸ்டியை விரைவாக திரும்பக் கொடுக்க வேண்டுமென்றும் மலிவான சீன இறக்குமதியிலிருந்து உள்நாட்டு தொழிற்துறையை பாதுகாக்க வேண்டுமென்றும்,
சமீபத்தில் அறிவிக்கப்பட்ட மூன்று மாத கால அவகாசத்தை ஒரு வருடத்திற்கு நீட்டித்தல், 18% ஜிஎஸ்டி என்பதை 12% ஆகக் குறைத்தல் வேண்டும் என்றும் கோரியிருக்கிறார்கள் சிறுகுறு நடுத்தர தொழில் துறையினர்.
இப்போதைய சூழலில் எம்.எஸ்.எம்.இ. எனப்படும் சிறுகுறு, நடுத்தர தொழில் துறைக்கு அரசின் உதவி மிகவும் தேவை. தற்போதைய பொருளாதார நெருக்கடியால் யார் யாருக்கு எவ்வளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதை அடையாளம் காண்பது அரசுக்கு சவாலான விஷயம். சிறுகுறு நடுத்தர வணிகம் என்பது பல்வேறு தொழில்களையும் சேர்ந்தது என்பதால் இது மிக விரிவானதொரு தளம் என்கிறார் தேசிய பொது நிதி மற்றும் கொள்கை மையத்தின் பேராசிரியரான என்.ஆர். பனமூர்த்தி. இந்திய தொழில் வர்த்தகக் கூட்டமைப்பான அசோசெம் அமைப்பும் தொழில் துறையினருக்கான சலுகைகளை அதிகப்படுத்தி வழங்குமாறு அரசிடம் அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.< ஏப்ரல் 11 ஆம் தேதி பிரதமர் மோடி மாநில முதல்வர்களுடன் நடத்திய காணொளிக் கலந்துரையாடலிலும் பெருமளவிலான ஊக்கத் தொகைத் திட்டங்களை அனைத்துத் தரப்பு மக்களுக்கும் வழங்க வேண்டுமென கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். இன்னொரு பக்கம் சர்வதேச செலாவணி நிதியமும்
நாடுதழுவிய ஊரடங்கால் ஏற்பட்டுள்ள பொருளாதாரத் தேக்க நிலையை எதிர்கொள்ள கூர்மையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது.
காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தியும், முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும் பிரதமருக்கு ஊரடங்கால் சரிந்த பொருளாதாரத்தை நிமிர்த்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்குமாறு கோரிக்கை வைத்திருக்கிறார்கள். இதுகுறித்து பிரதமருக்கு கடிதங்களும் எழுதியிருக்கிறார்கள். மாநிலம் விட்டு மாநிலம் பெயர்ந்த தொழிலாளர்கள், உணவுப் பற்றாக்குறை, சிறுகுறு நடுத்தர தொழில்களின் சரிவை மீட்டெடுத்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை காங்கிரஸ் கட்சி பிரதமரிடம் முன் வைத்திருக்கிறது. இப்படியாக இந்தியாவின் அரசியல், பொருளாதார, வர்த்தக தளத்தில் இருந்து உலக அளவிலான அமைப்புகள் வரை அனைத்து திசைகளில் இருந்தும் மத்திய அரசுக்கு பொருளாதாரச் சரிவை சரிசெய்ய வேண்டும் என்ற கோரிக்கைகள் ஒவ்வொரு நாளும் அழுத்தம் பெற்றுக் கொண்டே வருகின்றன.
இந்தப் பின்னணியில்தான் ஏப்ரல் 16 ஆம் தேதி பிரதமர் நரேந்திரமோடியை சந்தித்து முக்கிய ஆலோசனை நடத்தியிருக்கிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.
இதன் விளைவாக ஊரடங்கு உத்தரவால் பணி, தொழில் முடக்கம் ஏற்பட்டு தவித்துக் கொண்டிருக்கும் பணியாளர்கள், தொழில்முனைவோருக்கு பெரும் அறிவிப்பு ஒன்று வெளியாகும் என்று நிதியமைச்சக அதிகாரிகளை மேற்கோள் காட்டி தகவல்கள் வெளி வருகின்றனர். ஊரடங்கின் விளைவால் மத்திய அரசு மீது பெரும்பாலான மக்களுக்கு இருக்கும் அதிருப்தியை தணிப்பதற்கான ஊக்கத்தொகை அறிவிப்பு பற்றிய இறுதி முடிவு பிரதமர்- நிதியமைச்சர் சந்திப்பின் போது மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்த அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்த சந்திப்பின்போது ஜெர்மனி நாட்டின் Kurzarbeit மாடலை பின்பற்றி இந்தியாவில் சில நடவடிக்களை எடுக்கலாமா என்று ஆலோசிக்கப்பட்டிருக்கிறது. ஜெர்மன் மொழியில் Kurzarbeit என்ற வார்த்தைக்கு குறைவான வேலை நேரம் குறைவான ஊதியம் என்று பொருள்படும். 2008 ஆம் ஆண்டு ஐரோப்பா முழுதும் பொருளாதார மந்த நிலையால் கடுமையாக பாதிக்கப்பட்டது, ஜெர்மனியில் ஆயிரக்கணக்கான, லட்சக்கணக்கான வேலை வாய்ப்புகள் பறிபோகும் நிலை ஏற்பட்டது.
இதைத் தவிர்க்கும் வகையில் ஜெர்மன் அரசு அங்குள்ள நிறுவனங்களோடு சேர்ந்து Kurzarbeit மாதிரியை அறிமுகப்படுத்தியது.
அதாவது ஊழியர்கள் தற்போது வாங்கும் ஊதியத்தைப் பெற முடியாது. அதேநேரம் அவர்களின் வேலை நேரமும் குறைக்கப்படும். வேலை இழப்பைத் தடுக்க வேண்டுமென்றால் வேலை நேரத்தைக் குறைத்து ஊதியத்தையும் குறைக்க வேண்டும். இதுதான் ஜெர்மனி மாடல். இதன் மூலம் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களில் யாரையும் பணிநீக்கம் செய்வதைத் தவிர்ப்பதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. அதற்கு பதிலாக அனைத்து அல்லது பெரும்பாலான ஊழியர்களின் வேலை நேரங்கள் குறைக்கப்படும். வேலை நேரம் போக மீதி நேரத்தில் ஊழியர்கள் தங்களால் முடிந்தால் வேறு பயிற்சிகள் சொல்லிக் கொடுத்து தங்கள் பழைய ஊதியத்தை வேறு வகையில் ஈட்டிக் கொள்ளலாம். 2009 ஆம் ஆண்டு ஜெர்மனி அரசாங்கம் 5.1 பில்லியன் யூரோக்களை இந்த திட்டத்துக்காக ஒதுக்கியது. இது சுமார் 14 லட்சத்துக்கும் அதிகமான தொழிலாளர்களின் வருமானத்தை மாற்றி அமைத்தது. அதாவது வேலை இழப்புக்கு பதிலாக வருமானம் குறைந்த வேலை என்ற வகையில் இருந்தது.
இந்தத் திட்டத்தின்படி 2008 பொருளாதார மந்த நிலையின்போது ஜெர்மன் கிட்டத்தட்ட 5 லட்சம் பேரின் வேலைகள் பறிபோகாமல் தடுத்திருக்கிறது. இந்தத் திட்டம் ஜெர்மனியில் கடுமையான விமர்சனத்தையும் சம்பாதித்தது. இந்த ஜெர்மனி மாடல் Kurzarbeit திட்டத்தை இப்போதைய இந்திய பொருளாதாரத்தில் அறிமுகப்படுத்தலாமா என்ற ஆலோசனையும் நிதியமைச்சருக்கும் பிரதமருக்கும் இடையே நடந்திருக்கிறது என்கிறார்கள்.
வெகு விரைவில் பிரதமர் மோடியிடம் இருந்தோ நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் இருந்தோ பெரும் அறிவிப்புகள் வரலாம்!
தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459