கூடுதல் கடன்: ரிசர்வ் வங்கியின் முக்கிய அறிவிப்புகள் - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

Friday, 17 April 2020

கூடுதல் கடன்: ரிசர்வ் வங்கியின் முக்கிய அறிவிப்புகள்

மாநிலங்களுக்கு கூடுதல் கடன்: ரிசர்வ் வங்கியின் முக்கிய அறிவிப்புகள்!

கொரோனா பாதிப்பு காரணமாக பொருளாதாரத்தில் மிகப்பெரிய சவால் ஏற்பட்டிருப்பதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
கொரோனாவை கட்டுப்படுத்த மார்ச் 25 முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், மார்ச் 27ஆம் தேதி செய்தியாளர்களை சந்தித்த ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் வங்கி கடன், இஎம்ஐ செலுத்துவதற்கு அவகாசம் உள்ளிட்ட சில சலுகைகளை வழங்கினார். இந்த நிலையில் வரும் மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் செய்தியாளர்களை இன்று (ஏப்ரல் 17) சந்தித்த ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ், “கொரோனா பரவாமல் தடுப்பதே தற்போது முக்கிய நோக்கமாக இருக்கிறது. கொரோனாவால் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்புகளை ரிசர்வ் வங்கி மிகத் தீவிரமாக கவனித்து வருகிறது.
கொரோனாவுக்கு எதிரான போருக்கு ஆர்பிஐ முழுமையாக தயாராக உள்ளது. உலகளவில் பொருளாதார நிலையற்ற தன்மை நிலவி வருகிறது. கொரோனா பாதிப்பு காரணமாக தற்போது மிகப்பெரும் பொருளாதார சவால் ஏற்பட்டிருக்கிறது” என்று தெரிவித்தார். கொரோனா பரவல் காரணமாக நாட்டின் மின்சார தேவை 20% முதல் 25% வரை குறைந்துள்ளது. ஆட்டோ மொபைல் தயாரிப்பு மற்றும் விற்பனை மார்ச் மாதத்தில் கடும் சரிவை சந்தித்துள்ளது. கொரோனா பாதிப்பால் கச்சா எண்ணெய் விலையிலும் நிலையற்றத் தன்மையே நீடிக்கிறது என்று தெரிவித்த சக்தி காந்ததாஸ், “இந்தியாவின் ஏற்றுமதி 34.57 சதவிகிதமாக குறைந்துள்ளது. ஊரடங்கு காலகட்டத்தில் இணையதள பயன்பாடு மற்றும் இணையதள பணப்பரிமாற்ற சேவை அதிகரித்துள்ளது. இந்தியாவில் அரிசி, கோதுமை இருப்பு உள்ளதால் தட்டுப்பாடு ஏற்படாது. இந்தாண்டு நெல் பயிரிடப்படும் பரப்பளவு 37%ஆக அதிகரித்துள்ளது.
சிறு, குறு தொழில் துறையினருக்கு கடன் வழங்க ஏதுவாக வங்கிகளில் பணம் கையிருப்பு உள்ளதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்றும் குறிப்பிட்டார். மேலும், “கொரோனா பாதிப்பால் ஏற்பட்ட பாதிப்புகளை சீர் செய்வதற்காக மாநில அரசுகள் கூடுதலாக கடன் பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவசர தேவைகளுக்கு ரிசர்வ் வங்கியிடம் இருந்து மாநில அரசுகள் 60% வரை கூடுதல் கடன் பெறலாம். வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி தரும் கடன்களுக்கான ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதம் 4% லிருந்து 3.75%ஆக குறைக்கப்பட்டுள்ளது” என்றவர்,
“வங்கிகள் வழக்கம் போல் இயங்குவதை ஆர்பிஐ உறுதி செய்துள்ளது. இக்கட்டான சூழலிலும் வங்கிகள் இயங்குகின்றன. உலகிலேயே ஜிடிபி வளர்ச்சி கணிசமாக உயர்வு கொண்டுள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்று. 476.5 பில்லியன் டாலர் அந்நிய செலாவணி கையிருப்பு உள்ளது
. இந்தியாவின் வளர்ச்சி 1.9 சதவிகிதம் என ஐஎம்எஃப் கணித்துள்ளது, இது ஜி-20 நாடுகளில் அதிகம். 2021-22ஆம் நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.4% ஆக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. . பணப்புழக்கத்தை அதிகரிக்க, நிதிச்சுமையை குறைக்க பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்படும்.நபார்டு, சிட்பி உள்ளிட்ட வங்கிகளின் மூலமாக ரூ. 50 ஆயிரம் கோடிக்கு கடன் உதவி வழங்க வழி செய்யப்படும். 97 சதவிகித ஏடிஎம் மையங்கள் முழுமையாக இயங்கி வருகின்றன.” என்பதையும் விவரித்தார்.