கொரோனா வைரஸ் தடுப்பூசி எப்போது பயன்பாட்டுக்கு வரும்? - ஆசிரியர் மலர்

Latest

 




02/04/2020

கொரோனா வைரஸ் தடுப்பூசி எப்போது பயன்பாட்டுக்கு வரும்?


உலகளாவிய தொற்றாக அறிவிக்கப்பட்டுள்ள கொரோனா வைரஸை தடுப்பதற்கான தடுப்பு மருந்தை உருவாக்கும் பணிகள் தற்போது அமெரிக்காவில் தீவிரமடைந்துள்ளன.மனிதர்கள் மீது கொரோனாவுக்கான தடுப்பு மருந்தைச் சோதித்துப் பார்க்கும் பணிகள் அங்கு துவங்கியுள்ளன. சியாட்டில் நகரில் செயல்படும் ஆராய்ச்சி நிலையம் ஒன்றில், முதற்கட்டமாக நான்கு தன்னார்வலர்களுக்கு இந்த தடுப்பு மருந்து செலுத்தப்பட்டுள்ளதாக அசோசியேட் ப்ரஸ் செய்தி முகமை தெரிவித்துள்ளது.
 
இந்த தடுப்பு மருந்து கொரோனா வைரஸ் தொற்றை உருவாக்காது. ஆனால் கொரோனா வைரஸின் மரபணு குறியீட்டைப் பிரதி எடுத்து இந்த புதிய தடுப்பு மருந்து உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த தடுப்பு மருந்து செலுத்தப்படும் மனிதர்களுக்கு எந்த தீங்கும் ஏற்படாது.
இந்த தடுப்பு மருந்தும், இதே போல உலகின் பல்வேறு நாடுகளில் உருவாக்கப்பட்டு வரும் மற்ற தடுப்பு மருந்துகளும், கொரோனா வைரஸை குணப்படுத்துமா என்பதை அறிய இன்னும் சில மாதங்கள் ஆகலாம் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
சியாட்டில் நகரைச் சேர்ந்த இரண்டு குழந்தைகளுக்குத் தாயான 43 வயது பெண்மணியிடம், இந்த புதிய கொரோனா தடுப்பு மருந்து முதன்முதலாகப் பரிசோதிக்கப்பட்டுள்ளது. “கொரோனை வைரஸை தடுக்க என்னால் முடிந்த ஒரு உதவியைச் செய்துள்ளேன்“ என அந்த பெண்மணி தெரிவித்துள்ளார்.
உலகம் முழுவதிலும் கொரோனாவுக்கான தடுப்பு மருந்தைக் கண்டறியும் பணியில் பல ஆராய்ச்சியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தேசிய சுகாதாரத்துறையின் நிதி உதவி மூலம் மனிதர்கள் மீது இந்த பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. இதே நேரத்தில் இந்த தடுப்பு மருந்து, விலங்குகளின் நோய் எதிர்ப்புத்திறனைத் தூண்டுமா என்பதை உறுதிப்படுத்தும் சோதனைகளும் வழக்கம் போல நடைபெறும்.
ஆனால் இந்த தடுப்பு மருந்து தயாரிப்பின் பின்னணியில் இருக்கும் உயிரி தொழில்நுட்ப நிறுவனமான மாடர்னா தெரபெடிக்ஸ் நிறுவனம், ஏற்கனவே பரிசோதிக்கப்பட்டு, முயற்சி செய்யப்பட்ட வழிமுறைகள் மூலம் உருவாக்கப்பட்டதாகக் கூறுகிறது.
`இந்த தடுப்பூசி அதி உயர் தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது. இதன்படி இந்த தடுப்பு மருந்து மனிதர்களுக்குப் பாதுகாப்பானது. இந்த தடுப்பு மருந்தினால் சோதனை நடத்தப்பட்டவர்களை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். உண்மையில் மிக வேகமாக இந்த தடுப்பு மருந்து உருவாக்கப்பட்டுள்ளது. 
ஏனெனில் இது வைரஸுக்கு எதிரான ஒரு பந்தயம். மற்ற ஆராய்ச்சியாளர்களுக்கு இடையிலான பந்தயம் கிடையாது. மேலும் இது மனிதக்குலத்திற்குப் பலன் அளிப்பதற்காகவே நடத்தப்படுகிறது.“ என லண்டன் இம்பீரியல் கல்லூரியின் தொற்று நோய் நிபுணரான ஜான் ட்ரோகோனிங் தெரிவித்துள்ளார்.
பொதுவாக தட்டம்மை போன்ற வைரஸ்களுக்கான தடுப்பு மருந்து, பலவீனமடைந்த அல்லது கொல்லப்பட்ட வைரஸ்களின் மூலம் உருவாக்கப்படும். ஆனால் கோவிட்-19 தொற்றை ஏற்படுத்தும் வைரஸ் மூலம் mRNA-1273 என்ற இந்த தடுப்பு மருந்து உருவாக்கப்படவில்லை.
அதற்குப் பதிலாக, விஞ்ஞானிகளால் ஆய்வகத்தில் உருவாக்க முடிந்த, கோவிட் வைரஸிலிருந்து நகலெடுக்கப்பட்ட மரபணு குறியீட்டின் ஒரு சிறிய பகுதியை இது உள்ளடக்கியுள்ளது.
உண்மையான தொற்றை எதிர்த்து போராடும் அளவுக்கு மனித நோய் எதிர்ப்பு மண்டலத்திற்கு இந்த தடுப்பு மருந்து உந்துதல் அளிக்கும் என ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.
இந்த சோதனை தடுப்பு மருந்து தன்னார்லர்கள் மீது பல்வேறு அளவுகளில் செலுத்தப்பட்டு பரிசோதிக்கப்பட்டுள்ளது. தன்னார்வலர்களுக்கு அடுத்த 28 நாட்களுக்கு, நாள் ஒன்றுக்கு இரண்டு முறை என கையின் மேல் தசை பகுதியில் இந்த தடுப்பு மருந்து செலுத்தப்படும்.
இந்த முதல்கட்ட பரிசோதனைகள் வெற்றி அடைந்தால், உண்மையான, அங்கீகரிக்கப்பட்ட தடுப்பு மருந்து செயல்பாடு வர இன்னும் 18 மாதங்கள் ஆகும்.
தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459